கோடை வெய்யிலை சமாளிப்பது ரொம்ப ஈஸிதாங்க!

summer heat
summer heat
Published on

கோடைக்காலத்தில் அக்னி நட்சத்திரம் வந்துவிட்டாலே, வெய்யிலின் தாக்கம் அதிகமாகி விடுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். முன் ஏழு,பின் ஏழு என இந்தக் காலத்தைச்சொன்னாலும், மே 4ல் துவங்கினாலும் இந்த மாத இறுதிவரை அதன் தாக்கம் இருக்கும்.

கோடை வெய்யில் காலங்களில் பகல் 11 மணிக்கு மேல் மூன்று மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, இளநீா், நுங்கு, பழச்சாறுகள் சாப்பிடுவது நல்லது.

மோர் கரைத்து ஐஸ் கட்டி போடாமல் மல்லி, கருவேப்பிலை தழை போட்டு, உப்பு அளவாய் சோ்த்து  கடுகு தாளித்துக்கொட்டி நீா்மோர் போல அருந்தலாம். இதனால் சூடு தணியும். வெள்ளரிப் பிஞ்சு அளவோடு சாப்பிடுவதும் சூட்டைத்தணிக்கும்.

அடிக்கடி தண்ணீா் அருந்துவது நல்லது. வீட்டிலேயே தக்காளி, கேரட், ஆப்பிள், மாதுளை, திராட்சை போன்றவற்றை ஜூஸ் போட்டு அதிக சர்க்கரை சோ்க்காமல் அருந்துவது நல்லது.

இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கலாம். பருத்தி, கதர் ஆடைகளை அணிவதும் நல்லதே!

இதையும் படியுங்கள்:
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு!
summer heat

வீட்டிலேயே திராட்சை, நன்னாரி, தாழம்பூ எசன்ஸ் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு ஐஸ் கட்டி சோ்க்காமல் தண்ணீா் கலந்து சர்பத் தயார்செய்து சாப்பிடலாம்.

நல்ல வெய்யிலில், வெளியில் போய் விட்டு வந்தவுடன் நாவறட்சியால் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஐஸ் வாட்டரை குடிக்கப் போவோம். அப்படிச் செய்தால் உடனே சளி பிடித்துவிடும். அதைத் தவிர்க்க ஆறிய வென்னீரை அருந்துவது நல்லது.

கடும் வெய்யிலில் வியர்க்குரு மற்றும் கோடைக்கட்டிகள் வந்து தங்கிவிடும். அதற்கு சந்தனத்தை அரைத்துப் போடலாம். தினசரி இரண்டு வேளை குளியல் நல்லது.

நன்கு செரிக்கக்கூடிய உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. அதேபோல், வீட்டை நல்ல காற்றோட்ட வசதி வருவது போல கட்டுவதும் நல்லது.

கூடுமான வரையில் வெளியூா் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சி அவசியம். யோகா செய்யும்போது காற்றோட்டமான இடத்தில் பயிற்சி மேற்கொள்வது  சிறப்பு.

குளிக்கும்போது அரிசி மாவு, தயிர், கடலை மாவு கலந்து தேய்த்து குளிக்கலாம். அது வியர்க்குரு வருவதைத் தவிர்க்கும்.

பழைய சோறு, கடைந்து எடுத்த மோர், சிறிய வெங்காயம் சோ்த்து காலையில் சாப்பிடலாம். இரவில் சாதத்தில் தண்ணீா்  ஊற்றி வைத்து காலையில் மோர் சேர்த்து கொஞ்சம் உப்பு சோ்த்து நீராகாரம் சாப்பிடலாம். நல்ல குளிர்ச்சி தரும்.

காய்கறிகளை சோ்த்து சூப் வைத்து சாப்பிடலாம். தினசரி இரண்டு மொந்தன் பழம் சாப்பிடுவது சாலச்சிறந்தது. வீட்டிலேயே பழங்களை நறுக்கிப் போட்டு ஐஸ் சோ்க்காமல் புரூட் மிக்சர் சாப்பிடலாம்.

சாதம் வடித்த கஞ்சியில் ஆறிய பின்னர் எலுமிச்சை பழம் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட வெயிலில் வரும் வறட்சி குறையும்.

நுங்கு சாப்பிடுவதோடு அதில் உள்ள நீரை வோ்க்குரு வந்த இடத்தில் தடவி வர வோ்க்குரு போகும். கத்தரிக்காய் அடிக்கடி உணவில் சோ்க்க அம்மை நோய் வராது.

வேப்பங் கொழுந்து தினசரி கொஞ்சம்  வெறும் வயிற்றில் சாப்பிடலாம். தாழம்பூ எசன்ஸ் வாரம் இரு முறை அரை டம்ளா் சாப்பிடுவது நல்லது.அம்மை நோய் வராது.

சுடு தண்ணீரை ஆற வைத்து, இரவு மண்பானையில் கொட்டிவைத்து, விளாமிச்சி வோ் போட்டு, வெந்தயம், சீரகம், கலந்து காலையில் வடிகட்டி அருந்திவர உடல் சூடு தணியும்.

சோற்றுக்கற்றாழையை இரவில் மோரில் ஊற வைத்து காலையில் அருந்தலாம். வாரம் ஒரு முறை எண்ணைய்க்குளியல் பெஸ்ட்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை துணிகளில் உள்ள கறைகளைப் போக்க சில எளிய வழிகள்!
summer heat

செம்பருத்தி இலை, கீழாநெல்லி இலை, வெந்தயம் இவற்றை அரைத்து தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். நல்ல நிவாரணி.

பாஸ்ட் புட் உணவு வகைகளுக்கு டாட்டா பைபை சொல்வது நல்லது. எளிதில் ஜீரணம் ஆகும் உணவை சாப்பிடுவதே நல்லது.

இன்னும் எத்தனையோ நாட்டு வைத்தியப் பொருட்கள். உள்ளன. நாம் அதை சரிவர பயன்படுத்துதே ஆரோக்கித்தை மேம்படுத்தும். பாதுகாப்பாய் உஷ்ணம் தணிக்கும் உணவை உண்போம். கோடை வெய்யில் கொடுமையிலிருந்து தற்காத்துக் கொள்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com