பள்ளியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாடங்களை பொதுவாக விழுந்து விழுந்து படிப்பதில்லை. குறைந்த முயற்சியிலேயே புரிந்து கொண்டு தொடர்ந்து தேர்வுகளில் எளிதாக டாப்பர்ஸ் என்ற இடத்தைப் பெறுகிறார்கள். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் பின்பற்றும் 6 டெக்னிக்குகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தலையணைக்குக் கற்றுக்கொடுப்பது: முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் சிக்கலான பாடங்களை சில பொருட்களிடம், குறிப்பாக தலையணை, கண்ணாடி, பொம்மைகள் என கற்றுக்கொடுக்கிறார்கள். அதாவது எதிரில் ஒரு நபர் இருப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு, அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதால் பாடம் எளிமையாக விளங்குவதோடு, அவர்களின் கற்றலின் புரிதலையும் மேம்படுத்துகிறது. ஒருவருக்குக் கற்றுக் கொடுப்பதுதான் சிறந்த வழி என்பதால் யாரும் இல்லாத சமயங்களில் இந்த உயிரற்ற பொருட்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
2. எழுதுவது, டைப் செய்வது கிடையாது: பாடங்களை கைகளால் எழுதிப் படிப்பது நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் சிறந்த பழக்கம் என்பதால், இன்றைய அறிவியல் வளர்ச்சியான லேப்டாப்புகள், டேப்புகள் காலத்திலும் அவர்கள் கைகளில் எழுதுவதோடு, சிலவற்றை வரைந்தும் பழைய முறையில் கற்றுக் கொள்கிறார்கள்.
3. இடைவெளி: தொடர்ச்சியாக படிப்பதை விடுத்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுத்து டான்ஸ் ஆடுவது, குதிப்பது, பிடித்த வேலைகளைச் செய்வது என மூளையை மாற்றிக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் கவனம் மேம்பட்டு ஆற்றல் அளவு அதிகரிப்பதால் தொடர்ந்து நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற முடிகிறது.
4. கடிகாரத்தை தலைகீழாக மாற்றுவது: கடிகாரத்தை தலைகீழாக வைப்பது அல்லது கடிகாரத்தை மறைத்து வைப்பது போன்ற காமெடியான விஷயங்களாக அடுத்தவர்களுக்குத் தெரிந்தாலும் நன்கு படிப்பவர்கள் முழு கவனம் செலுத்தவும், மனநிலையை மாற்றி, அழுத்தத்தைக் குறைக்கவும் டாப்பர்ஸ்களுக்கு படிப்பதில் இந்த முறை மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
5. மூளையை வலுப்படுத்தும் உணவுகள்: கணித பாடம் படிக்கும் முன்னர், டார்க் சாக்லேட்கள் சாப்பிடுவது, மூளையின் திறனை அதிகரிக்க நட்ஸ்கள் மற்றும் சீட்ஸ்கள் சாப்பிடுவது என வெற்றியாளர்கள் மூளைக்கு உகந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் மூளையின் ஆற்றல் அதிகரித்து ஷார்ப்பாகி முதலிடத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது அவர்களுக்கு சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளையும், ஜங்க் உணவுகளையும் தவிர்க்க உதவுகிறது. படிக்கும் நேரத்தில் அவர்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறது.
6. படிக்கும் நேரம்: தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்கள் இந்த உலகம் உறங்கிக் கொண்டிருக்கும்போது விழித்திருந்து, அதாவது இரவு தாமதமாக விழித்திருப்பதும், அதிகாலையில் கண்விழித்துப் படிப்பதும் எவ்வித இடையூறுகள் இல்லாமல் படிக்க உதவும் என்பதால் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து படிக்கிறார்கள் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை போல் கண் விழித்து படிக்கிறார்கள். அப்போது கிடைக்கும் அமைதியும் நிசப்தமான சூழலும் கவனிக்கும் திறனை ஆச்சரியமூட்டும் அளவுக்கு அதிகரிக்கிறது.
முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு நல்ல முறையில் உதவும் மேற்கூறிய ஆறு பழக்க வழக்கங்களை மற்ற மாணவர்களும் கடைபிடித்தால் வெற்றி ஒன்றும் முடியாத காரியம் அல்ல.