குளூட்டன் எனப்படும் பசையம், கோதுமை, பார்லி மற்றும் கம்பு போன்ற தானியங்களில் காணப்படும் புரதம் ஆகும். ஆனால், இவை சிலருடைய உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் நிறைய ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்குகிறது. அதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மனிதர்களின் உடலுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம். ஆனால், சில வகை தானியங்களில் காணப்படும் பசையம், பலருடைய உடல் ஜீரணிக்க போராடும் ஒரு பொருளாகும். இது அவர்களுக்கு உணர்திறனை உருவாக்குகிறது. சிலருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்னைகளையும் தருகிறது. செலியாக் நோய் என அழைக்கப்படும் ஒரு தீவிர சிக்கலான நோய் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் பிரச்னையாகும். எனவே, அவர்கள் பசையும் கொண்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
பசையம் உள்ள உணவுகள் உண்டாக்கும் ஆரோக்கிய சிக்கல்கள்:
1. செரிமானப் பிரச்னைகள்: கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களில் செய்த உணவுகளை உட்கொண்ட பிறகு சிலருக்கு குடல் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் செரிமானப் பிரச்னை ஏற்பட்டு அசௌகரியத்திற்கு ஆளாகிறார்கள். அடிக்கடி வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்கிறார்கள். இது எரிச்சல் கொண்ட குடல் நோயின் அறிகுறிகளை ஒத்துள்ளது.
2. வயிற்று வலி: வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு போன்றவை பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்களிடையே அடிக்கடி எழும் ஒரு பிரச்னையாகும். இவரது உடலில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல் மோசமான ஊட்டச்சத்துக்களையே உடல் உறிஞ்சிக்கொள்ளும். இதனால் குடலில் அழற்சி ஏற்படும்.
3. சோர்வு: பசையம் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் அடிக்கடி சோர்வு மற்றும் உடல் பலவீனத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் தினசரி செயல்பாடுகள் மற்றும் ஆற்றல் நிலைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
4. தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி: இவர்களுக்கு வழக்கமான தலைவலி மற்றும் மைக்கிரேன் எனப்படும் ஒற்றை தலைவலியும் உண்டாகிறது.
5. சரும எதிர்வினைகள்: பசையம் கொண்ட உணவுகளை உட்கொள்ளும்போது இவர்களுக்கு சருமத்தில் பாதிப்புகள் உண்டாகிறது. அங்கங்கே சருமத்தில் எரிச்சல், வீங்குதல், தடிப்புகள், அரிப்பு போன்றவை ஏற்படுகின்றன. உடலின் பல்வேறு பகுதிகளில் அரிப்புத் திட்டுகளும் ஏற்படுகின்றன.
6. நரம்பியல் அறிகுறிகள்: நரம்பியல் பிரச்னைகள் காரணமாக மூளை மூடு பனியை அனுபவிக்கின்றனர். அதனால் அடிக்கடி குழப்ப.ம், மறதி, செய்யும் வேலையில் கவனமின்மை போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன. மனநிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. பதற்றம் மற்றும் மனச்சோர்வு உண்டாகிறது. இதனால் அவர்களது உடலும் மனநலமும் பாதிக்கப்படுகிறது.
7. மூட்டு வலி: மூட்டுகளில் நாள்பட்ட வலி மற்றும் விறைப்புத்தன்மை போன்றவை பசையம் சகிப்புத்தன்மை அற்ற நபர்களுக்கு ஏற்படுகிறது. இது அவர்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
8. செலியாக் நோய்: இது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு ஆகும். பசையமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அது சிறுகுடல் சேதத்திற்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு குடலின் புறணியைத் தாக்கி வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும்.
பசையம் சேர்க்கப்பட்ட பல பதப்படுத்தப்பட்ட உணவுகள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கின்றன. இந்த உணவுகளில் பெரும்பாலும் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத சுத்திகரிக்கப்பட்ட தானியங்களே இருக்கின்றன. முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது அவை குறைவான ஆரோக்கியத்தைத்தான் கொண்டிருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும்போது மோசமான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். பசையம் உணர்திறன் உள்ளவர்கள் அவை உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நலம்.