வீட்டில் பெண்கள் எப்பொழுதும் ஏதாவது வேலையில் பரபரப்பாக இருப்பார்கள். உடலுக்கு சின்னச் சின்ன உபாதை என்றால் கூட அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வேலை செய்வார்கள். இதனால் பிற்காலத்தில் சில நோய்களை சந்திக்க நேரிடுகிறது. ஆரம்ப காலகட்டத்திலேயே சில உடல் நல விஷயங்களில் நாம் அக்கறை செலுத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கையை நிச்சயம் வாழலாம். வீட்டுக் குடும்பப் பெண்கள் கீழ்க்காணும் இந்த 6 உடல் நல விஷயங்களில் அக்கறை செலுத்தினாலே நிச்சயம் ஆரோக்கியமாய் வாழலாம். அதை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. மார்பகப் புற்றுநோய்: ஐம்பது வயதைக் கடந்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம். புற்றுநோயின் தன்மை மற்றும் ஒட்டுமொத்த உடல் நிலையைப் பொறுத்தே சிகிச்சை முறை அமையும். அறுவை சிகிச்சையே இதற்குச் சிறந்த சிகிச்சையாகும். அறுவை சிகிச்சைக்குப் பின்பு கதிர்வீச்சு சிகிச்சை தேவைப்படும்.
2. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்: பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் இது முதலிடம் வகிக்கிறது. ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்குக் கர்ப்பப்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பாகங்களை முழுமையாக அறுவை சிகிச்சை செய்து எடுத்துவிட வேண்டிவரும். சற்று, காலம் தாழ்த்திய புற்றுநோய்க்கு மருத்துவச் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சையோடு அறுவை சிகிச்சை முறையும் தேவைப்படும்.
3. கர்ப்பப்பை இறக்கம்: அதிக குழந்தைகளைப் பெறுவது, பிரசவத்திற்குப் பின்பு உடனடியாக அதிக எடைகளைத் தூக்குவது, அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது மற்றும் உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து இறக்கம் உண்டாகிறது. சிறுநீர்ப் பிரச்னைகள், இடுப்பில் வலி, வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பெண் மருத்துவரை அணுகி கர்ப்பப்பை முழுப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
4. சிறுநீர் கசிவு: சிறுநீர்த்தாரையில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் கசிவைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு ஸ்லிங் எனும் எளிய அறுவை சிகிச்சை மூலம் நல்ல பயன் பெறலாம்.
5. தைராய்டு கட்டிகள்: கழுத்தின் முன்பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி, சற்று வீங்கி இருக்கும் அல்லது அந்த சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். இந்தக் கட்டியை மாத்திரையினால் குறைக்க முடியாது. ஆனால், அறுவை சிகிச்சையின் மூலம் கட்டியை முழுவதுமாக அகற்றி விடலாம். சிலர் அறுவை சிகிச்சைக்குப் பின்பு தொடர்ந்து தைராய்டு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
6. பாப் ஸ்மியர்: இது அடிப்படையில் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கான ஸ்கிரீனிங் சோதனை. இது திருமண வயதிலிருந்து 65 வயது வரை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. இது கருப்பை வாயில் உள்ள அசாதாரண செல்களை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. இந்தப் பரிசோதனை மூலம் புற்றுநோய் ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பே கண்டறிய முடியும். இந்தப் புற்று நோய் முக்கியமாக ஹீமன் பாப்பிலோமா வைரஸ் எனப்படும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.
வீட்டின் நலனோடு உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரிகளே. இதனால் சீரான குடும்பம், சிறப்பான குடும்பம், அழகான குடும்பம், ஆரோக்கியமான குடும்பம் என்று நாம் வாழலாம்.