
வீட்டிற்கு வருவோரை 'வாங்க'ன்னு வரவேற்று, உள்ளே உட்கார வைப்பது ஹாலில் உள்ள சோபாவில்தான். வந்தவர்கள் நாம் கொடுக்கும் சமோசாவையும் டீயையும் சாப்பிடுவது அந்த சோபாவில் அமர்ந்தபடியேதான். குழந்தைகள் பல நேரம் பெயிண்ட் பாக்ஸை வைத்துக்கொண்டு படம் வரைவதும் சோபாவில் அமர்ந்தபடிதான். நம் வளர்ப்புப் பிராணி தூங்குவதும் அதில்தான். இப்படியெல்லாம் சோபாவை உபயோகப்படுத்தும்போது அதில் டீ, சாஸ், பெயிண்ட் போன்றவை கொட்டி கறையாவதும், பூனை மற்றும் நாய் முடி உதிர்ந்து குப்பையாவதும் சகஜம். இவற்றிலிருந்து சோபாவை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. சோபா கவர்: ஜிப்புடன் கூடிய தரமான சோபா கவரினால் சோபாவை மூடி வைப்பது உபயோகமானது. காபி, குழம்பு, பெயிண்ட் போன்றவை சிந்தினால் உடனே துடைத்து விடலாம். ரொட்டி துகள் போன்ற உணவுப் பொருட்கள் சோபாவின் இடைவெளிகளுக்குள் போய் அடியில் தங்கிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். குறிப்பிட்ட இடைவெளிகளில் கவரைக் கழற்றி வாஷிங் மிஷினில் போட்டு துவைத்தெடுத்து மீண்டும் போட்டால் 'பளிச்' லுக்தான்.
2. வேக்யூம் அண்ட் டஸ்டிங்: நம் நாட்டு வெப்பநிலைக்கு, மூடி வைத்துள்ள ஜன்னல் வழியாகவும் மூக்கை நீட்டிக்கொண்டு வந்து சோபவில் படர்ந்து கொள்ளும் தூசி. வாரம் ஒரு முறை தூசி தட்டியும், கையில் பிடித்து சுத்தம் செய்யும் வேக்யூம் கிளீனரில், அதன் பிரஷை பொருத்தி அசுத்தங்களை பொறுமையுடன் நீக்கியும், சோபாவை பளிச்சிடச் செய்யலாம்.
3. உடனடி கறை நீக்கல்: டீ அல்லது மை போன்ற திரவப் பொருள் சோபா மீது சிந்தினால், சிறிதும் தாமதிக்காமல், தண்ணீரில் சிறிது சோப்புப் பவுடரை கரைத்து, அதில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து, அதைக் கொண்டு சிந்திய பொருள் மீது ஒற்றி எடுத்தல் நல்லது. சோபா மீது அழுத்தி, அது கிழிந்து விடும் வகையில் ஸ்கிரப் பண்ணக்கூடாது. உடனடியாக செயல்படுதல், சிந்திய பொருள் விடாப்பிடி கரையாக மாற வாய்ப்பளிக்காது.
4. சோபா கவரை சுத்தப்படுத்தும் முறை: கவரில் இணைக்கப்பட்டுள்ள லேபிளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, துணியின் தன்மைக்கேற்ப, அதை குளிர்ந்த நீரில் துவைக்கணுமா? வெது வெதுப்பான நீரிலா? எந்த வகையான டிடர்ஜன்ட் உபயோகிக்கணும்? வெயிலில் காய வைக்கணுமா அல்லது நிழலிலா? ஆகிய டிப்ஸ்களையெல்லாம் நன்கு தெரிந்துகொண்டு செயலாற்றுவது அடிக்கடி கவரை மாற்றும் செலவைக் குறைக்க உதவும்.
5. சோபா குஷனை மாற்றுவது: சோபாவில் தொடர்ந்து ஒரே குஷன் மீது அமர்வது அதை விரைவில் பள்ளமாக்கி விடும். மற்றவை சம நிலையில் இருக்கும். இதைத் தவிர்க்க குஷன்களை இடம் மாற்றிக்கொண்டே இருப்பது பிரச்னையின்றி, அனைத்து குஷன்களும் ஒரே அளவில் தேய்மானமடைய வழியாகும்.
6. துர்நாற்றம் வருவதைத் தடுத்தல்: பலவிதமான காரணங்களால் சோபாவில் ஈரப் பதம் இறங்கி, லேசான கெட்ட வாசனை வர ஆரம்பிக்கும். இதை நீக்க, சோபா மீது மிருதுவான, துணிக்கு ஆபத்து விளைவிக்காத (Fabric safe) ஸ்பிரே அடிக்கலாம்.