
அறுபது வயதில் பணி ஓய்வு பெற்று மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைத்து குடும்பக் கடமைகளையும் கிட்டத்தட்ட பூர்த்தி செய்து முடித்துவிட்ட நிலையில் இருக்கும் முதியவர்கள் தங்களுடைய முதுமையை மிகவும் அமைதியாகவும் நிம்மதியாகவும் எதிர்கொள்ள விரும்புவார்கள். தம் வாழ்வில் 7 வகை நட்புகளை கைவிட்டு விட்டால் அவர்கள் வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவை என்னென்ன? ஏன் அவற்றைக் கைவிட வேண்டும் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. எதிர்மறை சிந்தனையாளர்கள்: 60 வயதுக்கு மேல் ஒரு மனிதருக்கு மிகவும் தேவையானது அமைதியும் மன நிறைவும்தான். அவநம்பிக்கை மிக்க எதிர்மறை சிந்தனையாளர்களின் நட்பிலிருந்து வெளிவருவது மிகவும் அவசியம். ஏனென்றால், இவர்கள் எப்போதும் எதிர்மறையாகவே பேசி மனதை தளர்வடையச் செய்து விடுவார்கள். வயதாகும்போது உடல் சில நோய்களையும் முதுமையையும் அடைந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் மனமும் பலகீனமாகிப் போகும்போது நிம்மதியும் சுத்தமாக தொலைந்து போய்விடும். எனவே, இந்த நட்பை விலக்கி விடுவது உத்தமம்.
2. சுயநலவாதிகள்: இவர்கள் எப்போதும் தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள். எப்போதும் தனது குடும்பம் தனது பிரச்னைகள் தன்னுடைய விருப்பு, வெறுப்புகள் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். எதிரில் அமர்ந்திருக்கும் நண்பர்களைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறிதும் கவலை இல்லை. இது வயதானவர்களைப் பெரிதும் பாதிக்கும். எனவே இவர்களது நட்பு தேவையில்லை.
3. புகார் சொல்லிக்கொண்டே இருப்பவர்: எப்போதும் பிறரைப் பற்றி புகார் சொல்வதும் புரணி பேசுவதுமாக இருப்பார்கள். பிறரிடம் இருக்கும் நல்லதைப் பார்க்கவோ உணரவோ இயலாதவர்கள். இவர்கள் மிக எளிதில் ஒரு மனிதரை சோர்வடையச் செய்து விடுவார்கள். உங்களிடம் பேசி விட்டு பிறரிடம் போய் உங்களைப் பற்றியும் குறை சொல்வார்கள்.
4. சந்தர்ப்பவாதிகள்: இவர்கள் தமக்குத் தேவை எனும் போது மட்டும் உங்களை தேடி வருவார்கள். உங்கள் உதவியை வாங்கிக் கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அதை கண்டுக் கொள்ளாமல் போய்விடுவார்கள். சிரமமான காலகட்டங்களில் அருகில் இருந்து ஆறுதல் சொல்ல மாட்டார்கள். இவர்களால் ஒரு பயனும் இல்லை.
5. கடந்த காலத்தைப் பற்றி பேசுபவர்கள்: கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கலாம். ஆனால் புதிய மாற்றங்களை எதிர்கொள்ள மனமில்லாமல் பழைய விஷயத்திலேயே சிக்கித் தவிப்பவர்கள். எளிதில் பிறரை சோர்வடைய செய்து விடுவார்கள். நிகழ்கால நிஜத்தை விட பழைய சோகங்களில் மூழ்குவது இவர்களுக்குப் பிடிக்கும். ஆனால் இவர்களது நட்பு மிக விரைவில் போர் அடித்து விடும்.
6. பொறாமை குணம்: இந்த குணங்களைக் கொண்ட மனிதர்களால் பிறருடைய வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் தாங்கிக்கொள்ள முடியாது. தனது பொறாமைக் குணத்தால் பிறருடைய மகிழ்ச்சியைத் தொலைத்து விடுவார்கள். நுட்பமான அவமானங்களை ஏற்படுத்துவார்கள். எனவே, இவருடைய நட்பை விலக்கி விடுவது நல்லது.
7. நேர்மையற்றவர்: எந்த ஒரு நட்பிற்கும் நம்பிக்கை மிகவும் அவசியம். நேர்மையற்ற மனிதர்கள் பொய் சொல்வார்கள். வாக்குறுதியைக் காப்பாற்ற மாட்டார்கள். எனவே, இவர்களை நம்பி பழகுவது ஆபத்தில் முடியும். ஏதாவது சிக்கலில் மாட்டி வைத்து விடுவார்கள். எனவே, இவரது நட்பை விலக்கி விட வேண்டும்.
முதுமைக்காலத்தில் அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க வேண்டும் என்றால் மேற்கண்ட 7 வகை நட்புகளைத் தவிர்த்து விடுதல் நலம்.