கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் தற்போது அதிகம் காணப்படுகிறது. இதனால் பலருக்கும் சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அப்படியே சமைக்க வேண்டும் என்று நினைத்தாலும் சீக்கிரமாக எதை சமைப்பது என்று நினைத்து அதற்கான வழிமுறைகளைக் கையாண்டு சமைக்கின்றனர். அதுவும் பிரஷர் குக்கரை பயன்படுத்தாமல் சமையல் என்பதே இல்லை என்ற அளவிற்கு சமையலில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது பிரஷர் குக்கர். அப்படி சமைக்கும்போது சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் சென்று சேருகிறதா என்பது சந்தேகமே. அதிலும் சீக்கிரம் சமைப்பதற்கு தற்போது பிரஷர் குக்கரை பயன்படுத்துகின்றனர். இந்த பிரஷர் குக்கரில் சமைக்க கூடாத 6 வகை உணவுகளை பற்றித்தான் தற்போது பார்க்கப் போகிறோம்.
1. பால் பொருட்கள்: பால், கிரீம் அல்லது தயிர் போன்ற பால் சார்ந்த உணவுகளை பிரஷர் குக்கரில் நிச்சயம் சமைக்கப்படக் கூடாது. அதிக வெப்பம் பால் பொருட்களைத் திரிந்து போக வைக்கும். இது அதன் சுவையை மொத்தமாகக் கெடுத்து அதன் தன்மையையே மாற்றி விடும்.
2. வறுக்கக் கூடாது: உணவுகளை வறுக்க பிரஷர் குக்கரை பயன்படுத்தக் கூடாது. தண்ணீருடன் சமைக்கவே பிரஷர் குக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் உணவுகளை வறுப்பது ஆபத்தானது. அதிக அழுத்தம் காரணமாக சூடான எண்ணெய் தெறித்து தீக்காயங்களுக்கு அது வழிவகுக்கும். எனவே, பிரஷர் குக்கரில் வைத்து பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
3. துரித உணவுகள்: பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் போன்ற மென்மையான உணவுகளை பிரஷர் குக்கரில் வேக வைக்கக் கூடாது. இது ஆபத்தானது எல்லாம் இல்லை. ஆனால், டேஸ்டை மாற்றி விடும். பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் ஆகியவை இயல்பாகவே மிருதுவாக இருக்கும். இதை பிரஷர் குக்கரில் வைத்தால் குலைந்து, மிக மோசமாக மாறும்.
4. கீரைகள்: மிக எளிதாக வேக வைக்கக்கூடிய கீரைகள் உள்ளிட்ட மென்மையான காய்கறிகளை பிரஷர் குக்கரில் வேக வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக அழுத்தத்தில் வேக வைப்பது அதன் ஊட்டச்சத்துக்களை இழக்கக் காரணமாக இருக்கும். எனவே, கீரைகளை இதுபோல வேக வைப்பதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
5. கேக் மற்றும் பிஸ்கட்டுகள்: பிரஷர் குக்கரை கேக்குகள், பிஸ்கட்கள் என பேக்கிங் செய்யப் பயன்படுத்தக் கூடாது. பிரஷர் குக்கர் என்பது பேக்கிங் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது இல்லை. சிலர் குக்கரில் கூட பேக்கிங் செய்யலாம் என்று அறிவுறுத்தினாலும் அதைத் தவிர்ப்பதே நன்மை பயக்கும். ஏனென்றால், குக்கரில் செய்யப்படும் கேக்கின் டேஸ்ட், வழக்கமான கேக்கில் இருந்து மொத்தமாக மாறுபட்டதாக இருக்கும். அது கேக் சாப்பிடும் அனுபவத்தையே கெடுத்துவிடும்.
6. முட்டைகள்: முட்டைகளை குக்கரில் அப்படியே போட்டு வேக வைக்கக்கூடாது. சில நேரங்களில் அதில் பிரச்னை இருக்காது என்றாலும் சில நேரங்களில் அதிக அழுத்தம் காரணமாக முட்டை உடைந்துவிடும். எனவே, இதையும் முடிந்தவரை தவிர்ப்பதுதான் நல்லது.
பொதுவாக. பிரஷர் குக்கரை விட பாத்திரத்தில் சமைக்கும் உணவுகளில் அதனுடைய சத்துக்கள் குறையாமல் ருசியாகவும் சுவையாகவும் இருக்கும். அவசரத்திற்கு பிரஷர் குக்கரை பயன்படுத்தி நாம் செய்யும் உணவுப் பொருட்கள் சாதாரண பாத்திரத்தில் செய்யும் உணவுப் பொருட்களுடன் ஒப்பிடும்போது சுவை குறைந்துதான் காணப்படும். ஆகவே. மேற்கூறிய உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்காமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.