உறவு என்பது இருவர் மனமுவந்து, அன்பையும், மரியாதையையும் பரிமாறிக்கொள்ளும் ஒரு பாதுகாப்பான இடம். ஆனால், சில சமயங்களில், உறவின் இயல்பு மாறி, ஒருவர் மற்றவரை உணர்வுபூர்வமாகச் சுரண்டத் தொடங்கலாம். 'எமோஷனல் மேனிபுலேஷன்' (Emotional Manipulation) எனப்படும் இந்தச் செயல், பாதிக்கப்பட்ட நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, சுயமரியாதையையும் சிதைத்துவிடும். இதற்கான 6 முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உணர்வுபூர்வமாகச் சுரண்டுபவர்கள், நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் அல்லது உங்கள் துணையின் மன வருத்தங்களுக்கும் உங்களையே காரணமாக்குவார்கள். "நீ அப்படிச் செய்ததால்தான் எனக்கு இப்படி நடந்தது", "உன்னாலதான் நான் கஷ்டப்படுறேன்" போன்ற வார்த்தைகள் மூலம், அவர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்காமல் உங்களை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துவார்கள்.
2. நீங்கள் வருத்தப்படும்போது, "இது ஒரு பெரிய விஷயமே இல்லை", "நீ ஏன் இவ்வளவு சென்சிட்டிவா இருக்க?" என்று உங்கள் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிடுவார்கள். இதனால், உங்கள் உணர்வுகளைப் பற்றியே உங்களுக்குச் சந்தேகம் வரத் தொடங்கும், நீங்கள் தனியாக உணர்வீர்கள்.
3. "நான் அப்படிச் சொல்லவே இல்லை", "அது உன் கற்பனை" என்று நீங்கள் கண்ட ஒரு விஷயத்தை அல்லது பேசிய ஒரு வார்த்தையை மறுப்பார்கள். இது உங்களை உங்கள் சொந்த நினைவாற்றலைச் சந்தேகப்பட வைக்கும். இது உளவியல் ரீதியாக உங்களுக்குப் பெரும் குழப்பத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.
4. "நீ எனக்கு இதச் செஞ்சா, நான் உன்னை லவ் பண்றேன்னு நம்புவேன்" அல்லது "நீ இதுக்கு ஒத்துக்கிட்டா, நான் உனக்கு நல்லது செய்வேன்" என்று நிபந்தனைகளை உருவாக்குவார்கள். அன்பு என்பது நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. நிபந்தனைக்குட்பட்ட அன்பு என்பது ஆரோக்கியமான உறவுக்கு எதிரானது.
5. உங்களை உங்கள் நண்பர்கள், குடும்பம் அல்லது பிற நெருங்கியவர்களிடமிருந்து தனிமைப்படுத்த முயற்சிப்பார்கள். "உன் நண்பர்கள் கெட்டவங்க", "உன் குடும்பம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை" என்று உங்களைப் பிரிக்கும் முயற்சிகளை எடுப்பார்கள். இது உங்களை முழுமையாக அவர்களைச் சார்ந்திருக்க வைக்கும்.
6. பொதுவெளியில் ஒரு நல்ல, அன்பான துணை போலவும், தனிமையில் வேறு ஒரு நபராகவும் இருப்பார்கள். அவர்களின் இந்த இரட்டை வேடம், உங்களை மன ரீதியாகக் குழப்பமடையச் செய்யும்.
இந்த அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை உங்கள் உறவில் இருந்தால், உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்வது அவசியம். ஒரு நல்ல உறவு, உங்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் தர வேண்டும்.