
‘குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பிள்ளைகளை அறநெறியோடு வாழக் கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய், தந்தையரின் தலையாய கடமை. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே’ என்ற பாடல் வரிகளும் நமது வளா்ப்பைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
ஒரே குழந்தையானாலும் அல்லது இரண்டு குழந்தையானாலும் சரி பாகுபாடு காட்டாமல் ஒருவருக்கு செல்லம் கொடுப்பதும், அடுத்த குழந்தையிடம் கண்டிப்பு காட்டுவதும் போன்ற மனோபாவம் நம்மிடம் வரவே கூடாது. அதுதான் ஆரம்பமே! கணவர் கண்டிக்கும்போது மனைவி அனுசரிப்பதும், மனைவி கண்டிக்கும்போது கணவன் அனுசரிப்பதுமாக பேலன்ஸ் செய்து போக வேண்டும். அவா்களுக்கு அதிகப்படியான செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பதால் அவர்களிடம் பிடிவாதமும், பாசாங்குத்தனமான அழுகையும், மூா்க்கத்தனமும், வாடகையில்லாமல் குடியேறிவிடும். அடம் பிடித்தால் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவாா்கள் என்ற மனோ நிலையை மாற்ற வேண்டும்.
நியாயமாகப் பாா்த்தால் வறுமையில் பிள்ளைகளை வளா்ப்பதும், கேட்டது கிடைக்காவிடில் மனது சோா்வு அடைவதுமான மனப்பக்குவத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளரும் பருவத்திலேயே அதிகப்பிரங்கித்தனமாகப் பேச விடக் கூடாது. அப்பா, அம்மா பேச்சை மீறாமல் வளா்க்க வேண்டும். நியாயமாகத் தோன்றும் பொருட்கள் மீது ஆசைப்பட்டால் அது தேவைதானா என யோசனை செய்து வாங்கித் தர வேண்டும்.
படிப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று அவர்களை ‘படி, படி’ என நச்சரிக்கக் கூடாது. அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு, கலை தொடா்பான விஷயங்கள், அறிவு சாா்ந்த புத்தகங்கள் படிப்பது போன்ற விஷயங்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.
மாலையில் பள்ளி விட்டு வந்ததும் அவர்களை ரிலாக்ஸ் மனநிலைக்குக் கொண்டு வந்து உடைகளை மாற்றி முகம் கழுவி புத்துணர்ச்சியோடு அடுத்த வேலைகளைப் பாா்க்கச் செய்வதோடு, ஊட்டமான சிறு, சிறு, ஸ்நாக்ஸ், காபி, டீ போன்றவற்றைக் கொடுக்கலாம். பின்னா் பள்ளியின் அன்றைய பாடங்களின் விபரம், நாளை எழுத வேண்டிய பாடங்கள் இவற்றில் எழும் சந்தேகங்களை சொல்லிக் கொடுக்கலாம். அதற்குத் தாயாா்கள் தொலைக்காட்சியில் வரும் மெகா தொடர்களை தியாகம் செய்தே ஆக வேண்டும்.
சில நல்ல பல விஷயங்கள், நீதி போதனை, அறநெறி கருத்துகள், ஒலி பரப்பினால் நாம் பாா்ப்பதோடு, குழந்தைகளையும் பாா்க்க வைக்கலாம். அதை விடுத்து குழந்தைகளிடம் செல்போனைக் கொடுத்துவிட்டு நாம் தொலைக்காட்சி தொடர்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினால் அவ்வளவுதான், எல்லாமே கெட்டு, குட்டிச்சுவராகத்தான் போகும். யாரேனும் நண்பர்களோ, தோழிகளோ, உறவினா்களோ வந்தால் அவர்களை வரவேற்கும் மனப்பக்குவத்தை பிள்ளைகளிடம் வளா்த்து விடுவதே நல்லது.
வாரத்தில் ஒரு நாள் தாய், தந்தையாகிய நாம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது சிறப்பானதே! கூடுமான வரையில் குடும்ப வரவு செலவு மற்றும் கடன் பிரச்னை, கணவன், மனைவி புாிந்துகொள்ளாத சச்சரவுகள், குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து விடும். அதில் நாம் கவனமாக இருப்பது நல்லது. ஓரளவுக்கு விபரம் தொியும் வரை அவர்களை குழந்தைகளாகப் பாருங்கள். கொஞ்சம் நிலைமை மாறும்போது அவர்களை நண்பராகவும், தோழியாகவும் நடத்தப் பழகுங்கள். அதுவே சிறப்பான நடைமுறை. மேலும், குறிப்பிட்ட வயது வந்ததும் பெண் குழந்தைகளிடம் குட் டச், பேட் டச் இவற்றின் சாராம்சங்களை கவனமாக சொல்லிக்கொடுத்து தைரியமாக வளா்க்க வேண்டும்.
சமூக நீதிக்கதைகளை சொல்லித் தர வேண்டும். அறநெறியோடு அனைத்து உயிா்களிடத்தும் அன்பு செலுத்தும் வகையில் நாகரிகம், பண்பாடு போன்றவற்றை கற்றுக் கொடுங்கள். இறையாண்மையின் தத்துவம் அறியும்படி சொல்லிக் கொடுங்கள். விடுமுறை நாட்களில் சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதுவே உறவு மேம்பட வழிவகுக்கும். தாத்தா, பாட்டி, பொியப்பா, பொியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி இப்படி உறவின் உன்னதங்களைச் சொல்லி நேரம் கிடைக்கும்போது அவர்களுடன் தொலைபேசியில் பேசி மகிழச் சொல்லுங்கள்!
பொியவர்களை மதிக்கும் பழக்கத்தை சொல்லிக்கொடுத்து வளா்ப்பதே நல்ல பண்பாடு. வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச்சொல்லிக்கொடுத்து தோல்வி கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு வாழப் பழக்குங்கள். எக்காரணம் கொண்டும் அடுத்தவர் வீட்டுப் பிள்ளைகளோடு நம் பிள்ளைகளை ஒப்பிட்டுப் பேசாதீா்கள். எந்தக் குழந்தையும் நல்லவர்கள்தான், நாம் அவர்களை வளா்ப்பதில்தான் சூட்சுமமே அடங்கியுள்ளது!