
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமைவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிதான். இந்த சமயத்தில் கவனமாகவும் குழப்பம் இல்லாமலும் சரியாக முடிவெடுப்பது அவசியம். அதற்கான 6 வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. உங்களின் ஆர்வத்தையும் திறமையையும் முதலில் கண்டறியுங்கள்: முதலில் உங்களுக்கு எந்தப் பாடத்தில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதையும், எந்த விஷயங்களை செய்வது பிடிக்கிறது என்பதையும், பலம் என்ன என்பதையும் கண்டுபிடித்து அதற்கேற்ற சரியான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில், உங்களுடைய உள்ளார்ந்த ஆர்வமே உங்களை வெற்றி பாதையை நோக்கி அழைத்துச் செல்லும்.
2. பல்வேறு படிப்புகளைப் பற்றி ஆராயுங்கள்: உங்களுக்கு விருப்பமான துறையில் உள்ள படிப்புகளை இணையத்திலும் கல்லூரிகளின் Prospectusகளிலும் தேடிப் பார்ப்பதோடு ஒவ்வொரு படிப்பின் பாடத்திட்டம், வேலை வாய்ப்புகள், எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம். அறிமுகமில்லாத புதிய படிப்புகள் கூட உங்கள் ஆர்வத்திற்கு ஏற்றதாக இருக்கலாம்.
3. கல்லூரிகளைப் பற்றி முழுமையாக விசாரித்து அறியுங்கள்: தமிழ்நாட்டில் ஏராளமான கலை, அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் உள்ளதால் ஒவ்வொரு கல்லூரியின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகள் (நூலகம், விளையாட்டு மைதானம் போன்றவை), பேராசிரியர்களின் அனுபவம், கல்லூரியின் அங்கீகாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதோடு, அந்தக் கல்லூரியில் ஏற்கெனவே படித்த சீனியர் மாணவர்களிடம் கருத்தைக் கேளுங்கள். கல்லூரியின் இணைய தளத்தில் முன்னாள் மாணவர்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் தெரிந்து கொள்வது முக்கியம்.
4. கல்லூரியின் அமைவிடம் மற்றும் கட்டணம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரி உங்கள் வீட்டிற்கு அருகாமையிலா அல்லது தங்கி படிக்கும் வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதோடு, அவரவர் குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற கல்வி கட்டணம் உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் இருந்தால் அதையும் விசாரித்து அறிய முற்படுவது சிறந்தது.
5. கலந்தாய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: கல்லூரிகள் மாணவர்களுக்கான கலந்தாய்வு நிகழ்ச்சிகளை நடத்தும்போது கலந்து கொண்டால் அதன் மூலம் கல்லூரியின் பேராசிரியர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் பிற வசதிகள் பற்றி நேரடியாக தெரிந்து கொள்வதோடு, உங்கள் சந்தேகங்களையும் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
6. முடிவெடுப்பதற்கு முன் அவசரப்பட வேண்டாம்: சரியான கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால், கல்லூரி என்பது முக்கியமான முடிவு என்பதால் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும் என்பதால் அவசரப்படாமல் நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
மேற்கூறிய வழிகாட்டுதல்களை பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கையாளுவதன் மூலம் ஒரு சிறந்த தரமான கல்லூரியை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதில் சற்றும் ஐயமில்லை.