சமீபத்திய ஆண்டுகளில் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு இலவசமாக உணவு தரத் தொடங்கியுள்ளன. அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உற்பத்தித் திறன் அதிகரித்தல்: காலை நேரத்தில் சமச்சீரான சத்தான உணவு உண்பது மிகவும் அவசியம். எனவே, ஊழியர்களுக்கு உணவுடன் சேர்த்து பழங்கள் முழு தானிய உணவுகள் போன்ற இயற்கையான கார்போஹைட்ரேடுகளை சில நிறுவனங்கள் கொடுக்கின்றன. கார்போஹைட்ரேடுகள் உடலின் முக்கியமான முதன்மை ஆற்றலின் மூலம். இவற்றை உண்பதன் மூலம் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட முடியும். இதனால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.
2. சிறப்பான தொடக்கம்: போக்குவரத்தில் மாட்டி அலுவலகம் வந்து சேர்வதற்குள், தாமதமாகி விடுமே என்று எண்ணி பலரும் காலை உணவை தவிர்க்கிறார்கள். எனவே, அவர்களுக்கு அலுவலகத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டால் அவர்கள் நல்ல சத்தான உணவை உண்ண மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். எனவே, அலுவலகத்தில் உணவு கிடைப்பது ஒரு ஊழியர் தனது நாளை சிறப்பாகத் தொடங்க ஏதுவாக இருக்கும்.
3. உற்சாகமாக வேலை செய்தல்: நல்ல உணவுகளை உண்ணும்போது குடல் மற்றும் மூளையின் ரசாயனங்கள் நன்றாக செயல்பட முடியும். நல்ல சத்தான உணவுகள் உடலில் செரட்டோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஒருவரை உற்சாகமாக வைக்கும். செரட்டோனின் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு ரசாயனம். செரட்டோனின் அளவு அதிகமாக இருக்கும்போது அந்த நபர் மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பார். அதனால்தான் சாப்பிடுவதற்கு முன்பு கோபமாக இருப்பவர்கள் கூட உணவு உண்ட பின்ப மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணம். உணவு உண்ட பின் ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்யத் தொடங்கி விடுவர்.
4. ஊழியர்களைத் தக்க வைத்தல்: நல்ல திறமைசாலியான ஊழியர்கள் கிடைக்கும்போது அவர்களை தக்க வைப்பது மிகவும் அவசியம். எனவே அவர்களுக்கு உணவு தரும்போது அவர்கள் அதிக மகிழ்வோடு வேலை செய்கிறார்கள். உலக அளவில் 81 சதவீத வணிக தலைவர்கள் இலவச உணவுதான் மக்களை நன்றாகப் பணி செய்ய வைக்க சிறந்த வழி என்று கூறுகிறார்கள். இதனால் 67 சதவீத ஊழியர்கள் தங்கள் வேலையை மகிழ்ச்சியாக செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
5. பல தரப்பு மகிழ்ச்சி: ஊழியர்களுக்கு உணவு வழங்குவது ஒரு முன்மாதிரியாக அமையும். ஊழியர்கள் மேல் நிறுவனம் அக்கறை காட்டுகிறது. இது பிணைப்புகளை உருவாக்குகிறது. மேலும், உணவு உற்பத்தி செய்வோர், அதை தயாரிப்போர் என மற்ற பிரிவினரையும் ஆதரிப்பது மற்றும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்குவது என இந்தச் செயல் நீடிக்கிறது. இதன் மூலம் பல தரப்பினரையும் மகிழ்ச்சியோடு வைக்க முடியும். முடிந்தவரை உள்ளூர் வணிகர்களிடமிருந்து பொருட்களைப் பெற்று உணவு தயாரிப்பது சிறந்தது.
6. பணமும் நேரமும் மிச்சம்: அலுவலகத்திற்கு வந்து உணவு உண்ணும்போது பணியாளர்களுக்கு பணமும் நேரமும் மிச்சமாகும். அவர்கள் விரைவில் வேலைக்கு வருவார்கள். உணவு வழங்கும் அலுவலகத்திற்கு வரி விலக்குகளும் உண்டு.
7. திருப்தி: அலுவலகத்தில் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதால் இரு சாராரும், அதாவது நிறுவனமும் ஊழியர்களும் சேர்ந்து பலன் அடைகிறார்கள். நல்ல உணவு ஊழியர்களை சந்தோஷமாக திருப்தியாக உணர வைக்கிறது. அதேநேரம் ஊழியர்களின் வயிறு, மனம் நிறைய உணவளித்தோம் என்கிற திருப்தியும் சந்தோஷமும் நிறுவனத்திற்கும் கிடைக்கும்.