
கோடைக்காலங்களிலும் சரி, மழைக்காலங்களில் சரி இயற்கையாகவே சுரக்கும் சில ஹார்மோன்கள் உடலில் ஒருவிதமான நாற்றத்தை உண்டாக்கும். சில சமயம் அது வியர்வை நாற்றம் என்றாலும் சிலசமயம் உடலில் சில சத்துக்குறைபாட்டாலும் ஏற்படும். காரணம் எதுவாயினும் உடல் நாற்றம் வெளியில் பொது இடங்களில் உங்களை அவமானப்படுத்துகிறதா? அப்படியென்றால் உங்களுக்கான சில எளிய யோசனைகள் இதோ:
1. வியர்வையின் மூலம் அதிக நீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. போதுமான நீர் எடுத்துக்கொள்ளாததால்தான் உடம்பில் நீர் சத்து குறைந்து எப்போதும் உடல் நாற்றம் ஏற்படுகிறது. இது வாயில் துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகையால், அதிக நீர் குடிப்பது உடல் நாற்றத்தைத் தடுக்கும்.
2. சில நேரங்களில் வியர்வை போன்ற எந்தக் காரணமும் இல்லாமல் உடல் நாற்றம் அடிக்கும். அப்படி நீங்கள் உணரும்போது சில உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.
3. உங்கள் உடம்பிற்கு ஏற்ற வாசனை திரவியத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான வேலைதான். தினமும் எண்ணற்ற வாசனை திரவியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் எந்த ஒன்று உங்கள் தன்னம்பிக்கை உணர்வை வளர்க்கும் விதமாக உள்ளதோ, அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், குறிப்பாக 24 மணி நேரமும் வாசனை உடலை விட்டுப் போகாமல் இருக்கும் வாசனை திரவியம் பயன்படுத்துவது சிறப்பு.
4. அதேபோல், நாம் எந்த வகையான சோப்பு, பவுடர் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். அந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.
5. தலைமுடிக்கான வாசனை திரவியத்தை ஸ்பிரே மூலம் பயன்படுத்தினால் தலையில் இருந்து வரும் நாற்றம் நீங்கும். ஆனால், நேரடியாக தலையில் ஸ்பிரே செய்தால் முடி உதிர்வு பிரச்னைகள் ஏற்படும். ஆகையால், சீப்பில் ஸ்பிரே செய்து தலை சீவினால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் எப்போதும் வாசனையோடு இருக்கும்.
6. உடல் நாற்றம் இல்லாமல் இருக்க மிகவும் முக்கியமான ஒன்று துணிகளை நன்றாக பராமரிப்பதுதான். ஒரு முறை அணிந்த பிறகு நன்றாகத் துவைத்து, நன்கு காய்ந்தவுடன் துணிகளுக்கான வாசனைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
7. சோப்பு, பவுடர் எவ்வளவு முக்கியமோ அதேபோல, உடலுக்கு சில க்ரீம்களும் முக்கியம். சன் ஸ்கிரீன் லோஷன், எண்ணெய் வகை பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் வாசனை திரவியத்தின் வாசனை சென்றால் கூட, இந்த பொருட்களின் வாசனை துர்நாற்றத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும். மேலும், சருமத்தை பாதுகாப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளும்.