இனி இந்த 5 உணவுகளை ஒதுக்காதீர்கள் மக்களே!

Don't skip these 5 foods
Don't skip these 5 foods

நீங்கள் உண்ணும் உணவிற்கு மதிப்பளியுங்கள். உண்ணும் உணவை ருசித்து, நிதானமாக உண்ணுங்கள். சமைக்கும் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி, மிளகு போன்றவற்றை சிலர் சாப்பிடும்போது ஒரு ஓரமாக வைத்துவிட்டு சாப்பிடுவார்கள். உணவில் பயன்படுத்தும் இவற்றை தூக்கி எறியாதீர்கள். எந்த உணவுப்பொருட்களும் தூக்கி எறிவதற்காக சமையலில் சேர்க்கப்படுவதில்லை.

பச்சை மிளகாய்: இதில் நமது தசைகளையும், சருமத்தையும் வலுவூட்டும் ‘கொலஜினை’ உருவாக்கும். வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் பொட்டாசியம் உள்ளது. கண், சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியம் காக்கும் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘லூட்டின்’ சத்து மிளகாயில் உள்ளது. இது புற்று நோய் ஆபத்தைக் குறைக்கும். எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் பாஸ்பரஸ் மிளகாயில் உள்ளது. பச்சை மிளகாயின் காரத்திற்கு காரணமான கேப்சின் எனும் வேதிப்பொருள் ஒரு இயற்கை வலி நிவாரணியாகும்.

கறிவேப்பிலை: இது குடலின் இயக்கத்தை மென்மைப்படுத்தும் ஆற்றல் உடையது. உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டு மூளையின் சுறுசுறுப்பான இயக்கத்திற்கும் உதவும். கறிவேப்பிலை புற்றுநோய், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது. செரிமானத்தை மேம்படுத்த உதவும் பண்புகளுடன், வலி நிவாரணியாகவும் செயல்படும் ஆற்றல் மிக்கது. கறிவேப்பிலை துவையல் அல்லது கறிவேப்பிலை பொடியை சாப்பிட்டு வந்தால், 75 சதவீதம் இதயம் பாதுகாக்கப்படுகிறதாம். இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. அத்துடன் நீரழிவு நோயையும் கட்டுப்பாட்டில் வைக்கின்றது.

மிளகு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு மிளகு பெரிதும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும், இது பாக்டீரியாவை எதிர்ப்பதோடு நச்சுக்களையும் தடுக்கிறது. இதில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபுளேவின், நியாசின் முதலிய தாதுப்பொருள்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. மிளகிற்கு காரம் பொது குணம். மிளகு நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. சுவாசக் குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளைப் போக்குகிறது.

தக்காளி: ஒவ்வொரு வீட்டின் அன்றாடச் சமையலிலும் இடம்பெறும் பொருளாக தக்காளி காணப்படுகின்றது. ஆனால், பெரும்பாலானோர் அதைச் சாப்பிடும்போது அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிடுகிறார்கள். ஆனால், அதன் தோலில்தான் முக்கியமான சத்துக்களே உள்ளன. முக்கியமாக ‘லைகோபீன்’. மேலும், அதில் அடங்கியிருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும், சரும அழகுக்கும் மிகவும் இன்றியமையாதவை. மேலும், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இது பெரிதும் துணைபுரிகின்றது. வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளதால் இரத்த சோகையை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பதற்கு இவைகூட காரணமாக இருக்கலாம்!
Don't skip these 5 foods

கொத்தமல்லி: ரசம், காய்கறிகள், சூப், சாம்பார் என பலவித உணவு வகைகளின் சுவையையும் மேம்படுத்துகிறது. சுவை, மணம் மட்டுமின்றி, இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. கொலஸ்ட்ராலை நீக்கும் குணம் கொத்தமல்லி இலையில் உள்ளது. கொத்தமல்லி இலைகளில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கொத்தமல்லி இலையில் காணப்படும் செரிமான நொதிகள் வயிறு தொடர்பான நோய்களைக் குறைக்கின்றன. இது அஜீரணம், வாயு, அமிலத்தன்மை, எரியும் உணர்வு மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற பிரச்னைகளை நீக்கி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கொத்தமல்லி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது குர்செடின் மற்றும் டோகோபெரோல் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கொத்தமல்லி இலைகளில் காணப்படுகின்றன. இதன் உதவியுடன் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.

இனிமேல் சாப்பிடும்போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, தக்காளி மற்றும் மிளகு போன்றவற்றை ஒதுக்காதீர்கள். இவற்றை மற்ற உணவுடன் நன்கு மென்று, சுவைத்து சாப்பிடுங்கள். அதனால் எண்ணற்ற பயன்களை பெறுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com