மண்ணே வேண்டாம்... வெறும் தண்ணியில மட்டும் இந்த 7 செடிகளை ஈஸியா வளர்க்கலாம்!

herbs-you-can-easily-grow
herbs-you-can-easily-grow
Updated on

வீட்டில் ஆசைக்காக செடி வளர்க்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்குத் தேவையான மண், உரம் மற்றும் போதுமான இடம் போன்ற விஷயங்களை நினைத்து பலரும் அந்த ஆசையை அப்படியே கைவிட்டு விடுகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய குறையாகவே இருக்கும். 

ஆனால், இதற்கெல்லாம் ஒரு சூப்பரான மாற்று வழி இருக்கிறது. வீட்டில் நாம் தூக்கி எறியும் சாதாரண கண்ணாடி பாட்டில்களில் வெறும் தண்ணீரை ஊற்றி வைத்தே சில செடிகளை சுலபமாக வளர்க்க முடியும். அதுவும் நமது சமையலுக்கு தினமும் தேவைப்படும் மூலிகைகளை இப்படி வளர்ப்பது ஒரு தனி சந்தோஷம் தான். அப்படி மண்ணே இல்லாமல் தண்ணீரில் மட்டும் அட்டகாசமாக வளரக்கூடிய ஏழு செடிகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

1. புதினா!

கிச்சனில் புதினா இல்லாமல் எந்த பிரியாணியும் மணக்காது. கடையில் வாங்கும் புதினா கட்டில் இருந்து கொஞ்சம் தடிமனான தண்டை மட்டும் வெட்டி எடுத்து தண்ணீரில் போட்டு வையுங்கள். மூன்றே நாட்களில் அதிலிருந்து வேர் விட்டு செம வேகமா வளர ஆரம்பித்துவிடும்.

2. துளசி!

சளி மற்றும் இருமலுக்கு துளசி ஒரு அருமையான இயற்கை மருந்து. துளசி செடியின் நுனியில் இருக்கும் ஒரு சிறிய கிளையை நறுக்கி தண்ணீர் உள்ள பாட்டிலில் வைத்தால் போதும். இது ரொம்ப சீக்கிரமாகவே துளிர் விட்டு வளரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகையாகும்.

3. எலுமிச்சை புல்!

உங்களுக்கு லெமன் கிராஸ் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் இந்த செடி ரொம்பவே யூஸ்ஃபுல்லாக இருக்கும். இதன் அடிப்பகுதியை மட்டும் வெட்டி கொஞ்சமாக தண்ணீர் இருக்கும் கிளாஸில் வைத்தால் அருமையாக வளரும்.

4. ஸ்பிரிங் ஆனியன்!

சைனீஸ் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த வெங்காயத்தாளை வளர்ப்பது மிக மிக ஈஸி. சமையலுக்கு பயன்படுத்தியது போக, வேரோடு இருக்கும் அதன் அடிப்பகுதியை தண்ணீரில் வைத்தால் அடுத்த இரண்டு நாட்களில் புதிய பச்சை இலைகள் வர ஆரம்பித்துவிடும்.

இதையும் படியுங்கள்:
சுவாசப் பிரச்சனை தீர்க்கும்: இயற்கை மூலிகைத் தேனான துளசி-கற்பூரவல்லி சர்பத்!
herbs-you-can-easily-grow

5. கற்பூரவல்லி!

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக இந்த செடி இருக்க வேண்டும். இதன் ஒரு சிறிய கிளையை உடைத்து தண்ணீரில் வைத்தாலே எந்த ஒரு அதிகப்படியான பராமரிப்பும் இல்லாமல் ரொம்ப அழகாக வளரும்.

6. ரோஸ்மேரி!

இறைச்சி சமையலுக்கு நல்ல சுவையும் வாசனையும் தரக்கூடிய இந்த செடியையும் தண்ணீரில் ஈசியாக வளர்க்கலாம். இதன் தண்டை தண்ணீரில் வைக்கும்போது, தண்ணீருக்குள் இலைகள் மூழ்காதவாறு பார்த்துக் கொள்வது முக்கியம்.

7. கொத்தமல்லி!

கொத்தமல்லியை வேரோடு கடைகளில் வாங்கும் போது, அந்த வேர் பகுதியை மட்டும் கொஞ்சம் தண்டுடன் வெட்டி எடுத்து தண்ணீரில் போட்டு வையுங்கள். உங்கள் சமையலுக்குத் தேவையான பிரெஷ்ஷான இலைகளை இது தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் செல்வம் சேரனுமா? இந்தச் செடிகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள்!
herbs-you-can-easily-grow

இந்த செடிகளை வளர்ப்பதில் இருக்கும் ஒரே ஒரு சின்ன வேலை, வாரத்திற்கு ஒரு முறை அந்த பாட்டில்களில் இருக்கும் தண்ணீரை மாற்றுவது மட்டும்தான். உங்களின் சமையலறை ஜன்னல் ஓரமாக லேசான வெயில் படும் வகையில் இந்த பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்தால் பார்ப்பதற்கே அவ்வளவு கியூட்டாக இருக்கும். 

logo
Kalki Online
kalkionline.com