
கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான உறவு நீடிக்க வேண்டுமென்றால் சிலவற்றை தியாகம் செய்துதான் ஆகவேண்டும். அப்போதுதான் நிம்மதி சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நீடிக்க இரு தரப்பினருமே ஒருவரை ஒருவர் மதிப்பதும், நேசிப்பதும், மனதின் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதும் வேண்டும்.
1) சுயநலமின்றி சிந்தித்தல்:
தம்பதிகளுக்குள் ஒருவர் தம்மைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்தித்திருக்கக் கூடாது. துணையின் தேவைகள், ஆசைகள், எண்ணங்கள் ஆகியவற்றைப் பற்றியும் சிந்திப்பதுடன் நில்லாமல் அவர்களின் எண்ணங்களுக்கும், தேவைகளுக்கும் முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் கொடுத்துப் பழகினால் இருவருக்குள்ளும் சண்டை சச்சரவுகள் வராது. சுயநலமின்றி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதும், தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும் இல்லறம் இனிக்கும்.
2) அன்பு செலுத்துதல்:
அன்பு செலுத்துதல் எப்போதும் ஒரு வழிப்பாதையாக இருக்கக் கூடாது. இருபக்கம் இருந்தும் வரவேண்டும். தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டால் அதனை நீட்டிக்காது விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வாக்குவாதத்தில் ஒருவரை ஒருவர் வெல்ல வேண்டிய அவசியம் இல்லை. விட்டுக்கொடுத்து செல்வது சந்தோஷத்தை கொடுப்பதுடன் உறவும் வலுப்பெறும்.
3) நேரம் செலவிடுவது:
எவ்வளவு பிசியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவது அவசியம். இருவரும் வேலைக்குச் செல்லும் காலம் இது. இந்நேரத்தில் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுவது என்பது பெரிய விஷயம். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வேண்டியது அவசியம். உறவை வலுவாக வைத்திருக்க வேண்டுமானால் நம் துணைக்காக சிறிது நேரத்தை தியாகம் செய்துதான் ஆகவேண்டும். அந்த நேரத்திலும் பிறரை பற்றி பேசி நேரத்தை வீணாக்காமல் இருவரின் வாழ்க்கை மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி பேசுவது உறவை நன்கு பலப்படுத்தும்.
4) பண விஷயத்தில் கவனம்:
திருமண உறவுகள் பெரும்பாலும் பணத்தின் அடிப்படையில்தான் முடிவாகின்றன. இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில் ஒருவர் மட்டுமே செலவு செய்வது மோதல்களை உண்டாக்கும். வருமானத்தை பகிர்ந்து கொள்வதுபோல் செலவையும் பகிர்ந்து கொள்வது நல்லது.
5) தனித்துவத்தை மதிப்பது:
ஒரு வெற்றிகரமான திருமணம் என்பது ஒற்றுமையுடன் தனித்துவத்தையும் மதிப்பதாகும். நம் துணையின் தனித்துவமான பண்புகள், ஆர்வங்களை மதிக்க வேண்டியது அவசியம். அத்துடன் அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பரஸ்பர போற்றுதலும் உறவில் நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் வளர்க்கும்.
6) வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருத்தல்:
ஆரோக்கியமான உறவின் முக்கியமான ஒன்று நம்முடைய எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் கவலைகளை வெளிப்படை தன்மையுடன் பகிர்ந்து கொள்வதும், நேர்மையான மற்றும் வெளிப்படையான உரையாடல்கள் நெருக்கத்தை அதிகரிப்பதுடன் பிரச்னைகளையும் குறைக்கும்.
7) ஈகோவை புறம் தள்ளுங்கள்:
உறவை நல்லபடி பேண ஈகோ என்பது இடையூறாக இருக்கும். எனவே ஈகோவை புறந்தள்ளி விட்டு எந்த தவறு நடந்தாலும் ஒப்புக்கொள்ளவும், மன்னிப்பு கேட்கவும், சமரசங்களைத் தேடவும் தயாராக இருக்க வேண்டும். பரஸ்பரம் மரியாதையை அடிப்படையாகக் கொண்டால்தான் திருமண உறவு எந்த பிரச்னையும் இல்லாமல் நீடிக்கும்.