
உடல் வலிமை, அழகான தோற்றம் இவற்றைத் தாண்டி சிறந்த ஆண்களாகத் திகழும் நபர்களிடம் உள்ள முக்கியமான 7 பண்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. தன்னம்பிக்கை: சிறந்த ஆண்களாகத் திகழும் நபர்களிடம் இருக்கும் முக்கியமான குணம் தன்னம்பிக்கை. இவர்கள் தமது தன்னம்பிக்கையால் பிறரை வெகு எளிதில் ஈர்த்து விடுவார்கள். இக்கட்டான காலகட்டங்களில் கூட தன்னம்பிக்கையை இழக்காமல், அதன் உதவியுடன் சிக்கல்களை, போராட்டங்களை மிக எளிதில் இவர்கள் கடந்து விடுவார்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களின் உடல் மொழி மற்றும் பேச்சு போன்றவை தனித்துவமாக விளங்கும்.
2. கருணை: பிறர் மீது கருணையும் பச்சாதாபமும் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். சக மனிதர்களின் மீது அன்பு காட்டுவதும் அக்கறையுடன் செயல்படுவதும் ஆதரவு தருவதும் உறவுகளை நண்பர்களை மதிப்பதும் இவர்களின் சிறந்த பண்புகளாக இருக்கும்.
3. இலகுவான அணுகுமுறை: சிறப்பான ஆண்கள் என்று சொல்லப்படுபவர்கள் வாழ்க்கையை மிகவும் விளையாட்டுத்தனமாக இலகுவாக எடுத்துக் கொள்வார்கள். ‘டேக் இட் ஈஸி’ என்பதை பாலிசியாகவே இவர்கள் வைத்திருப்பார்கள். மகிழ்ச்சிகரமான அனுபவங்களை உருவாக்குவதில் சிறந்தவர்கள். தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன், தங்களைச் சுற்றி உள்ள பிறரையும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர வைப்பார்கள். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வார்கள். இலகுவான அணுகுமுறை மூலம் துன்பங்களை மிக எளிதில் கடந்து விடுவார்கள்.
4. நேர்மறைக் கண்ணோட்டம்: நேர்மறைக் கண்ணோட்டம் இவர்களின் முக்கியமான பண்பாகும். கடினமான சூழ்நிலைகளில் கூட இவர்கள் நேர்மறையான கண்ணோட்டத்தை உபயோகப்படுத்தி சிக்கல்களை சமாளித்து விடுவார்கள். நேர்மறையான கண்ணோட்டம் இருப்பதால் இவர்களுடைய சுற்றமும் நட்பும் இவர்களுடைய ஆலோசனையை விரும்பிக் கேட்பார்கள்.
5. நகைச்சுவை உணர்வு: நகைச்சுவை உணர்வு வாழ்க்கையை மிகவும் ரசனை மிக்கதாக மாற்றுகிறது. வாழ்வின் எல்லா நேரங்களிலும் நல்லவை மட்டுமே நடக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. போராட்டங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், கடுமையான சிக்கல்கள் போன்றவற்றை எதிர்கொண்டே மனிதர்கள் வாழ வேண்டி உள்ளது. நகைச்சுவை உணர்வு மிக்க ஆண்கள் இவற்றை மிக சாமர்த்தியமாக எதிர்கொள்கிறார்கள். நகைச்சுவை உணர்வு மிக்க ஆண்களின் நட்பை பலரும் விரும்புவார்கள்.
6. நேர்மை: நேர்மையும் நம்பகத்தன்மையும் உள்ள ஆண்களுக்கு எளிதில் பிறரிடம் மரியாதை மற்றும் நல்ல அபிப்பிராயம் உண்டாகும். கடுமையான காலகட்டங்களில் கூட நேர்மையை கைவிடாத ஆண்கள் பிறரால் என்றும் மதிக்கப்படுவார்கள். மேலும், நேர்மை என்பது சிறந்த ஆண்களின் அவசியமான பண்பாகும். நேர்மையான குடும்பத் தலைவன், நேர்மையான பணியாளர், குழுத் தலைவர், நேர்மையான அதிகாரிகள் போன்றோரால் இந்த சமூகமும் உயர்வடைகிறது. பலவித நன்மைகளைப் பெறுகிறது.
7. உணர்ச்சி நுண்ணறிவு: எமோஷனல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் திறன் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். உணர்வுகளை நன்றாக கையாளத் தெரிந்த ஆண்களுக்கு பக்குவம் அதிகம் இருக்கும். எத்தகைய மனிதர்களையும் சமாளிக்கும் திறன் இருக்கும். தங்களுடைய உணர்வுகளை சரியாக கையாளத் தெரிந்து கொள்வதுடன் தன்னைச் சுற்றி உள்ளவர்களின் உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்தவர்கள்.
சிறந்த ஆண்களாக திகழ வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த ஏழு பண்புகளும் மிகவும் உதவியாக இருக்கும்.