
வாழ்க்கையில் வெற்றி பெற்று உயர் நிலையில் வாழ்பவர்கள் தங்கள் எதிர்கால சந்ததியினரும் அதேபோல வாழ வேண்டும் என்பதற்காக சில ரகசிய வழிமுறைகளை குழந்தைகள் அறியாமலே, பொழுதுபோக்காக அவர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருப்பர். அவ்வாறு அவர்கள் பின்பற்றும் 7 வகையான பழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
1. ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பயிற்றுவித்தல்: தாய்மொழி தவிர வேறு சில மொழிகளையும் அறிந்திருப்பவர்கள் சுலபமாக உலகை சுற்றி வர முடியும். வளர்ந்த பின் வேற்று மொழி ஒன்றை கற்றுக்கொள்வது அறிவாற்றல் குறைபாட்டைத் தடுக்க உதவும். அது மட்டுமின்றி, உலகளாவிய பிசினஸ், கலாசாரம் மற்றும் உறவை வளர்க்கவும் அது வழி காட்டும்.
2. இசைக் கருவிகளை கையாள அறிந்து கொள்ளுதல்: இசை ஞானம் பெறுவது, நாலு பேர் சேர்ந்திருக்குமிடத்தில் நமது ஆர்வம் எதில் என்பது பற்றியும், அதில் நாம் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளோம் என்பதைப் பற்றியும் பேசுவதற்கு ஏதுவாகும். மேலும், நமது பாரம்பரிய கலாசாரத்தில் நமக்குள்ள ஈடுபாட்டையும் அது வெளிச்சம் போட்டுக் காட்டும். பள்ளிப் பருவக் குழந்தைகள் இசையை கற்றுக் கொள்ளும்போது அவர்களின் அறிவாற்றல் மேம்பாடடைந்து, 'கணக்கில் புலி' என்ற பெயரை அவர்களுக்குப் பெற்றுத் தரும்.
3. கேளிக்கை விளையாட்டுக்கள்: குழந்தைகள் போர்டு கேம் ஆடுவது, சாதனையாளர்கள் போல் நடிப்பது, பொம்மைக் கட்டுமானக் கருவிகளைக் கொண்டு வீடு, கோயில் போன்ற உருவங்களைப் படைப்பது ஆகியவை அவர்களுக்கு வேடிக்கை விளையாட்டு மட்டுமல்ல, எதிர்காலத்தில் தொழில் முனைவுத் திறன் பெறவும், திட்டமிடவும், கலந்து பேசி முடிவெடுக்கவும், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளவும் சிறந்த முறையில் உதவி புரியும்.
4. புத்தகம் படிக்கும் பழக்கம்: சிறு வயதில் புனைக் கதைகள், தத்துவம், சரித்திரம், கற்பனை நாவல்கள் போன்றவற்றைப் படிப்பது, குழந்தைகளுக்கு ஆழ்ந்து சித்திக்கவும், எழுத்தார்வம் பெறவும், உலகத்தை உற்று நோக்கவும் பயன்படும்.
5. நிதி மேலாண்மை அறிவு: மேல் தட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு, கற்பித்தல் மற்றும் அவர்கள் செயல்பாடுகளை கண்காணித்தல் போன்ற வழிகளில், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வகை திறன்களையும் வளர்க்க உதவி புரிவார்கள். ஆனால், நடுத்தர வர்க்கத்தினர் 'நேச்சுரல் குரோத்' (natural growth) எனக் கூறி, குழந்தைகளை இயற்கையாக வளர அனுமதித்து விடுவார்கள். உயர் வகுப்பை சார்ந்த குழந்தைகள் பெரியவர்களானதும், வரவு செலவை திட்டமிடுதல், முதலீடு செய்தல், பிறருடன் கலந்து பேசி முடிவெடுத்தல் போன்ற விஷயங்களை திறம்பட கையாள்பவர்களாக உருவெடுப்பார்கள்.
6. அடிக்கடி பயணம் மேற்கொள்ளல்: மற்றவர்ககுக்கு பயணம் என்பது இன்பச் சுற்றுலாவாக மட்டுமிருக்கும். ஆனால், உயர் வகுப்பை சார்ந்த குழந்தைகளுக்கு அது ஓர் ஆழ்ந்த அனுபவம் பெற உதவும். கலாசாரப் பரிமாற்றம், மொழியறிவு விரிவாக்கம், சர்வதேச அளவில் சமூக நலப் பணிகளில் ஈடுபடும் அனுபவம் போன்றவற்றிற்கு உதவும் வகையிலேயே அவர்களின் பயணம் அமையும். போட்டி மனப்பான்மையை உருவாக்கவும் உதவும்.
7. மன விழிப்புணர்வு (mindfulness) நிலையில் பயிற்சி பெறுதல்: ஒருவர் தன் புலனுணர்வுகளை தெளிந்தறிந்து கையாள்வது மிகவும் அவசியமானது. உணர்ச்சிகளை கையாளவும் கடந்து செல்லவும் தெரிந்த குழந்தைகள் எதிர்காலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதனாக மாறும் என்பதில் ஐயமில்லை. மன அழுத்தமின்றி, இடர்களை இன்முகத்தோடு எதிர்கொள்ளவும் அவர்களால் முடியும்.
பணம் படைத்தவர்கள் தங்கள் சந்ததியினருக்கு வெளிப்பார்வை வெற்றிகளை குவிக்க மட்டும் கற்றுத் தருவதில்லை, இடர்களை எதிர்கொண்டு மீண்டு வர, அவர்களின் ஆழ் மனதில் வலுவான அடித்தளம் அமைத்துத் தரவும் உதவி புரிகின்றனர்.