
விடாமுயற்சி, தொடர்ச்சியான கற்றல் மற்றும் சமூகப் பங்களிப்பு இணைந்தே ஒரு வெற்றிகரமான ஆளுமையை உருவாக்கும் என்பதை இளைஞர்கள் ஜி.டி.நாயுடுவை பார்த்து கற்றுக்கொள்ளலாம். கோவை அவினாசி சாலையில் இவரது கண்டுபிடிப்புகளுடன் கூடிய கண்காட்சி மற்றும் அருங்காட்சியகம் இவரது அறிவாற்றலை தற்போதும் பறைசாற்றுகிறது. தற்போது அந்தப் பகுதியில் உருவான பாலத்திற்கு தமிழக அரசு அவரது பெயரை சூட்டி அவரை பெருமைபடுத்தியுள்ளது. அவரின் வாழ்வில் நடந்த சில சுவையான நிகழ்வுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஆட்டோ மொபைல், ரேடியோ, இன்ஜினியரிங் சம்பந்தமாக நாயுடு நடத்திய பயிற்சியில், பொறியியல் பட்டம் பெற்றவர்களே முதலில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எடுபிடி வேலை செய்வதற்காக எஸ்.எஸ்.எல்.சி. யில் பெயிலான சில மாணவர்கள் நியமிக்கப்பட்டனர். பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்குத் தேர்வு வைத்தபோது, விளையாட்டாக ஒரு காரியத்தை நாயுடு செய்தார். எடுபிடி வேலைகள் செய்த எஸ்.எஸ்.எல்.சியில் பெயிலான மாணவர்களையும் தேர்வு எழுதச் சொன்னார்.
பட்டதாரி மாணவர்களை விட, எஸ்.எஸ்.எல்.சி. பெயிலான மாணவர்களில் பலர் தேர்வை நன்றாக எழுதியிருந்தனர். இது நாயுடுவுக்கு பிரமிப்பை தந்தது. அதன் பிறகு, தமது பயிற்சி வகுப்புகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி.யில் பெயிலான மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.
‘எஸ்.எஸ்.எல்.சி.யில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஆறுதலும் ஊக்கமும் உதவியும் கொடுக்கக்கூடிய ஒரே மனிதர் இந்தியாவிலேயே நாயுடு ஒருவர் தான்’ என்று ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அப்போது குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் இவரது யு.எம்.எஸ். கம்பெனியில் ஒரு விசித்திரமான சட்டம் இருந்தது. திருமணம் செய்து கொள்ளாமல் 21 வயது நிரம்பிய ஊழியர் யாரேனும் பஸ் கம்பெனியில் பணியாற்றினால், அவர் அடுத்த 3 ஆண்டுகளில் திருமணம் செய்யகொள்ள வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், வேலையிலிருந்து அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.
பெரியாரும் நாயுடுவும் மிக நெருங்கிய நண்பர்கள். ‘பெரியார் நாத்திகராக ஆவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே நான் நாத்திகனாக மாறியவன்’ என்று பெருமையுடன் நாயுடு சொல்வது வழக்கம். கோவையில் பெரியார் பெயரில் ஒரு தொழிற்பள்ளியை நாயுடு நிறுவினார். அதேபோல சிருங்கேரி சங்கராச்சாரியார் பெயரிலும் ஒரு தொழிற்பள்ளியை நிறுவினார். சங்கராச்சாரியார் பெயரில் அமைந்த தொழிற்பள்ளியைத் திறந்து வைத்தவர் பெரியார்.
ஒரு சமயம் சென்னை மாநகராட்சி சார்பில் நாயுடுவுக்கு வரவேற்பு தரப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்கு மூன்று மணி நேரம் தாமதமாக வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. குறித்த நேரப்படி எதுவும் செய்ய வேண்டும் என்பதில் கண்டிப்பு மிகுந்த நாயுடு, தமது நன்றி உரையில் மாநகராட்சியை நாசூக்காக சுட்டிக்காட்டி, ‘வரவேற்புக்குரிய நன்றி உரையை நான் தபாலில் அனுப்புகிறேன்’ என்று பேசினார்.
நாயுடுவின் யு.எம்.எஸ். ரேடியோ பேக்டரிதான் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ரேடியோ தொழிற்சாலை. ‘30 ரூபாய் விலையில் 3 பாண்டு ரேடியோக்களை என்னால் செய்து தர முடியும். ஆனால், அரசாங்கம் வரி போடக் கூடாது’ என்று ஒரு முறை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நாயுடுவின் யு.எம்.எஸ். தொழிற்சாலை ஹாஸ்டலில் சில விதிமுறைகளை வைத்திருந்தார். மாணவர்கள் சாப்பிடும்போது இலையில் மீதி வைப்பதன் மூலம் சிறிதளவு உணவைக் கூட வீணாக்கக் கூடாது. சிறிதளவு சாதம் மீதி வைத்தால் கூட ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சாதம் மீதி வைத்த மாணவர்களைப் பற்றி வேலைக்காரர்கள் உடனே தெரிவிக்க வேண்டும். தெரிவிக்கவில்லை என்றால் இரு மடங்கு அபராதத்தை வேலைக்காரர்களே செலுத்த வேண்டும்.
மாணவர்களில் யாருக்கேனும் 5 பவுண்டு எடை குறைந்திருந்தால் அல்லது ஹாஸ்டலில் உள்ள வேலைக்காரர்களில் யாருக்கேனும் 5 பவுண்டு எடை கூடியிருந்தால் அவர்கள் ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டும். சினிமா, அரசியல் சொற்பொழிவுகள், தரமற்ற பத்திரிகைகள் பற்றி மாணவர்கள் கனவு கூட காணக் கூடாது.
ஹாஸ்டலில் ஏதேனும் ஒரு இடத்தில் மாணவர் ஒருவர் குப்பை போட்டாலோ, அசுத்தம் செய்தாலோ அந்த மாணவர் ஹாஸ்டல் முழுவதையும் ஒரு நாள் சுத்தம் செய்ய வேண்டும். மாணவர் குப்பை போட்டதைப் பார்த்து விட்டு ஒருவர் உடனடியாக அதுபற்றி புகார் செய்யவில்லை என்றால், அவர் இரண்டு நாட்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
நாயுடு கட்டிய ஒரு கட்டடத்தை அமைச்சர் ஒருவர் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அமைச்சர் குறித்த நேரத்தில் விழாவுக்கு வரவில்லை. இதனால் கட்டடத்தை நாயுடுவே திறந்து வைத்தார். அத்துடன், ‘இக்கட்டடம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது’ என்று ஆங்கிலத்தில் பொறித்திருந்த சலவைக் கல் வாசகத்தை ‘அமைச்சரால் திறந்து வைக்கப்படவில்லை’ என்று மாற்றினார்.