
குழந்தைப் பருவம், இளமைப் பருவம், நடுத்தர வயது போல, முதுமையும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பருவம்தான். ஆனால், ஒருவருடைய வாழ்க்கையில் அது எப்போது வருகிறது என்பது தெரியாது. ‘ஆண்களின் வயது அவர்களின் மனதைப் பொறுத்தது. பெண்களின் வயது அவர்களின் தோற்றத்தைப் பொறுத்தது’ என்று கூறுவர். மனம் இளமையாக இருந்தால் தோற்றம் முதுமை அடைவதில்லை. அப்போது வயதைப் பொருட்படுத்த வேண்டியதே இல்லை.
பணியில் இருப்பவர்களுக்கு பணி ஓய்வு பெற்றதும் முதுமை வந்து விடுகிறது. அந்த நினைப்பை மனதில் இருந்து இறக்கி வைத்து விட்டு முதுமைக் காலத்தை மகிழ்ச்சியாகக் கடக்க சில ரகசியங்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. மனம் நோகாதபடி பேசுங்கள்: சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இளமைக்கால நண்பர்களையும், உடன் பணிபுரிந்த ஊழியர்களையும், தவறாமல் சந்தியுங்கள். ஏனென்றால், வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே கிடைக்கும். அவர்களுடன் வாக்கிங் செல்வது, உணவு அருந்துவது, கோயில்களுக்கு செல்வது, சுற்றுலா போவது என நேரத்தை செலவிடுங்கள். அவர்களும் உங்கள் வயதில்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு மனம் நோகாதபடி பேசுங்கள்.
2. ஒதுக்குங்கள்: முடிந்தவரை உங்களை நீங்களே நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சாப்பிட விரும்பும் எதையும் அளவாக சாப்பிடுங்கள். அது நீங்கள் மகிழ்ச்சி பெறுவதற்கு முக்கியமானது. ஆரோக்கியமாக இருப்பதற்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அதைப் பின்பற்றுங்கள். உடல் நலனுக்கு ஒவ்வாதவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள்.
3. ஏங்குவதைத் தவிருங்கள்: தனிமையில் வாழவும், அதை ஏற்று ரசிக்கவும் பழகுங்கள். நம் வயதில் இருப்பவர்கள் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ளச் சிரமப்படுவார்கள். நம் பிள்ளைகளோ தங்கள் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் பிரச்னைகள் அவர்களுக்கு. யாரும் நம்மைக் கண்டு கொள்ளவில்லையே என்று ஏங்குவதைத் தவிர்த்து விடுங்கள்.
4. உற்சாகமாகப் பேசி மகிழுங்கள்: முதுமைக் காலத்தில் உங்களுடன் பெரும்பாலான நேரங்களில் இருக்கப்போவது உங்கள் வாழ்க்கைத் துணைதான். அழைப்பு எப்போது வரும் என்பது இருவருக்குமே தெரியாது. ஒருவர் இன்னொருவருக்கு முன்னதாக விடைபெற இருப்பதால் வாழ்க்கைத் துணையுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பொன் போன்றது. ஒருவருக்கொருவர் எரிச்சல் வார்த்தைகளோ, புலம்பங்களோ இல்லாமல் எப்போதும் உற்சாகமாகப் பேசி மகிழுங்கள்.
5. கவலைப்படாதீர்கள்: நீங்கள் நோயுறும்போது பயமும் கவலையும் கொள்ளாதீர்கள். குணமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அழையா விருந்தாளியாக பல நோய்கள் உங்களை அண்டும். சில குணமாகாது. ஒதுக்கித்தள்ள முடியாத அவற்றுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளுங்கள். அதைப் பற்றியே நினைத்து கவலைப்படாதீர்கள்.
6. பணத்தில் கவனமாக இருங்கள்: முதுமைக்கால தேவைகளுக்காக என கணிசமான அளவு சேமிப்பு வைத்திருங்கள். செலவழிக்க வேண்டிய நேரத்தில் அதை செலவளியுங்கள். ஓய்வுக்காலப் பணிக்கொடை போன்றவற்றை உங்களுக்காக என வைத்துக்கொள்வது நல்லது. கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன்படுத்தி உங்கள் பணம் மற்றும் உடைமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம். இப்படிப்பட்ட மனிதர்களிடம் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தேவை இல்லை என கருதும் பணத்தையும், உடைமைகளையும் நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்.
7. மகிழ்ச்சியானதாக மாற்றுங்கள்: முதுமையை நினைத்து பயம் வேண்டாம். அதை சாபமாக எண்ணி சலிப்படையாதீர்கள். வயோதிகத்தை வரமாக எண்ணிப் போற்றி மகிழுங்கள். ஒவ்வொரு நாளையும் நீங்கள் புதிதாக பிறந்த மற்றொரு தினம் போல் கருதுங்கள். எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருங்கள். இனிய வார்த்தைகளே பேசுங்கள். ஓடும் நதி ஒரு போதும் திரும்பி பின்னோக்கி ஓடுவதில்லை. வாழ்க்கையும் அது போன்றதுதான். அதை மகிழ்ச்சியாக மாற்றுங்கள்.
உங்கள் மனதை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களால் மாற்ற முடியாததை பற்றியும் கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. கவலைகள் உங்கள் நோய்களைத் தீர்க்கும் என்றால் கவலைப்படுங்கள். இல்லையென்றால் கவலையை விட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.