'கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு' என்பது பழமொழி. இது நமக்கு இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும். அந்த வகையில் தினமும் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று யோசிப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் குறித்து காண்போம்.
1. சரியான இலக்குகள்: நாம் எந்த ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ முதலில் அதற்கான இலக்கை தெளிவாகத் தீர்மானிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு வருடத்தில் ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்பினால், அந்த வருடத்திற்குள் அந்த மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் முன்னர் எதுவுமே தெரியாமல் இருந்ததற்கு இப்போது ஏதாவது தெரிந்திருக்கும். அதன் பின்னர் கற்றுக்கொள்ளும் திறன்களில் இருக்கும் பெரிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
2. அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்ளுதல்: ஒரு விஷயத்தை முழுவதுமாக கற்றுக்கொள்ள நினைக்கும்போது அதனை முதல் படியிலிருந்து சரியாக அடித்தளம் அமைத்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தால், அதற்கு மேல் உள்ள விஷயங்களை கற்றுக்கொள்ள மிகவும் எளிதாகவும் இருக்கும். நம்பிக்கையும் பிறக்கும்.
3. 80/20 விதி: 80/20 விதி என்னவென்றால், நமக்கு வரும் 80 சதவிகிதம் ரிசல்ட், நாம் எடுக்கும் 20 சதவிகித முயற்சியில் இருந்து வருகிறது. உதாரணத்திற்கு ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதில் இருக்கும் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியங்களை அல்லது வார்த்தைகளை முதலில் கற்றுக்கொண்டு, அந்த வார்த்தைகளை தினசரி உபயோகிக்க வேண்டும்.
4. தினம் தோறும் கற்றல்: நம் வாழ்வில் தினம்தோறும் ஏதேனும் ஒரு கற்றல் முறை இருந்தாலே நாம் கற்றுக்கொள்ள நினைக்கும் திறனை முழுமையாகவும் தெளிவாகவும் கற்றுக் கொள்ளலாம்.
5. ஆசிரியராக மாறுங்கள்: ஒரு விஷயத்தை நாம் ஆழமாக கற்றுக்கொண்டு இன்னொருவருக்கு சொல்லிக்கொடுக்கும்போது நம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிடும். பல சமயங்களில் உங்களிடம் நீங்களே கூட கேள்வி கேட்டு பதில் கூறிக் கொள்ளலாம்.
6. பயிற்சி: கற்றுக்கொண்ட விஷயங்களை தினம்தோறும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திறனில் உங்களுக்கு அறிவு பெருகுவதுடன், நினைவுத்திறன் அதிகரித்து அது ஒரு பழக்கமாகவே மாறிவிடும்.
7. விமர்சனங்கள்: எந்தத் திறனை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்களோ, அதில் கைதேர்ந்தவர்களிடம் உங்களது வேலைகளை செய்து காண்பித்து அவரிடம் இருந்து விமர்சனங்களைப் பெற்று அதனை உங்களது கற்றலில் புகுத்தினால் மேற்கொண்டு என்னென்ன மாற்றங்கள் மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிந்து கொண்டால் நீங்கள் கற்றுக்கொண்டது முழுமை அடையும்.
மேற்கூறிய ஏழு விஷயங்களை கவனமாகவும் தெளிவாகவும் நீங்கள் கையாளும் பட்சத்தில் எந்த ஒரு திறனையும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.