அனைத்து பெண்களுமே தங்களுடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் மகளிர் 30 வயதுக்குள் கற்றுக்கொள்ள வேண்டிய 7 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. நிதி குறித்த அறிவு: இளம் வயதில் இருந்தே தங்கள் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பாக எதில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும், பணத்தை எப்படி சேமிக்க வேண்டும், கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்துவது எப்படி, அப்படியே கடன் வாங்கினாலும் அதை சரியாக செலுத்தும் முறைகளை அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். இது எதிர்கால சேமிப்புக்கும் நிதி சுதந்திரத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.
2. டிஜிட்டல் அறிவு: தற்போதைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் ஆப்கள் வெப்சைடுகள் உள்ளிட்டவற்றை கவனமாகக் கையாள வேண்டிய முறைகளை தெரிந்து வைத்திருப்பதோடு சமூக வலைதளங்களை எப்படி உபயோகிக்க வேண்டும், அதை பாதுகாப்பாக கையாள்வது எப்படி என்பது குறித்த அறிவு இருக்க வேண்டும்.
3. உணர்வு குறித்த அறிவு: நாம் என்ன நினைக்கிறோம், நமக்கு எந்த மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்ற உணர்வை அனைத்து பெண்களும் தெரிந்து வைத்திருப்பதோடு, பிறரைப் புரிந்துகொள்ளுதல், பிரச்னைகளை கையாளுதல் போன்றவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
4. பேச்சு மற்றும் எழுத்து திறன்: ஒரு குழுவை வழிநடத்துவதற்கும் தனி ஆளாக பெரிய அளவில் நம்மை உயர்த்துவதற்கும் பேச்சும் எழுத்துத் திறனும் அவசியம் இருக்க வேண்டும். இது தொழில் ரீதியான வளர்ச்சிக்கு உதவுவதோடு, நட்பு வட்டத்தையும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது. இதனால், பெரிய பெரிய ஆட்களுடன் தொழில் ரீதியான நெட்வொர்கிங்கை மேம்படுத்தவும் உதவும்.
5. தற்காப்பு கலை: நம்மை ஆபத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவும் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவவும் அடிப்படை ரீதியான தற்காப்பு கலையினை கற்று வைத்திருப்பது மிகவும் அவசியம் . தனியாக வெளியில் செல்லும்போதும், நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும்போது, இரவில் எங்கேனும் சிக்கிக்கொண்டால் அங்கிருந்து மீண்டு வர இந்த தற்காப்பு கலை உதவும்.
6. அடிப்படை சமையல்: பெண்கள் தங்களுடைய உடலுக்கு ஏற்ற உணவை தெரிந்து வைத்திருப்பதோடு, அதை சமைக்கவும் மேலும் எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும் என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். தனியாக வாழ்ந்தாலும் குடும்பத்துடன் இருந்தாலும் சமையல் கலையை அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டும்.
7. தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள தெரிவது: போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் தொழில் ரீதியாக வளர வேண்டும் என்றால், பிறருடன் நட்புறவை அல்லது தொழில் ரீதியான உறவினை ஏற்படுத்திக்கொள்வது, வேறு வேலை கிடைப்பதற்கு உதவுவதுடன் உயர் இடத்தில் இருக்கும் பலர் நம்மை தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. உயரத்தை அடைய இதுபோல செய்வதால் நம்மை நாமே பிரபலப்படுத்திக்கொள்ள இயலும். இதனால் வாய்ப்புகளும் நம்மைத் தேடி வரும்.
மேற்கூறிய ஏழு விஷயங்களையும் பெண்கள் 30 வயதிற்குள் அவசியம் தெரிந்து வைத்திருந்தால் பிரபலமாவது மிகவும் எளிது.