இல்லற வாழ்வை புதிதாய் தொடங்குவோர்க்கு இனிதாக 7 ஆலோசனைகள்!

new couples
new couples
Published on

காதல் திருமணமானாலும் சரி, பெற்றோர்கள் நடத்தி வைக்கும் திருமணமானாலும் சரி இறுதி வரை நீடிக்க மெனக்கிடுதல் என்பது அவசியம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் கணவன், மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளவும், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் வாக்குவாதம் செய்யாமல் சமாதானமாக செல்வதும், கடினமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதும், உதவி புரிந்து கொள்வதும் திருமண வாழ்க்கை சிறக்க உதவும். மேற்கண்ட இருவகை திருமணமானாலும் சரி, அது இனிதாக அமைய 7 ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. ஒப்பிடுதல்: திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகக் கூறுவார்கள். ஆனால், உண்மையில் திருமணம் என்பது தம்பதிகள் இருவருக்கு இடையே எந்த அளவிற்கு புரிதல் உள்ளது என்பதைப் பொறுத்துதான் அமைகிறது. திருமண பந்தம் என்றும் சலிப்பில்லாமல் நிலைத்திருக்க ஒப்பிடுவது என்பது தேவையில்லாத ஒன்று. சிலர் எதற்கெடுத்தாலும் பிறருடன் தனது துணையை ஒப்பிட்டுப் பார்த்து சிக்கல்களை உண்டாக்கிக் கொள்வார்கள். அப்படி இல்லாமல் வாழ்க்கை துணைக்கு முக்கியத்துவம் கொடுப்பது திருமண வாழ்வு சிறப்பாக அமைய உதவும்.

இதையும் படியுங்கள்:
சிறந்த ஆண்களின் 7 முக்கியப் பண்புகள்!
new couples

2. பொருளாதார பிரச்னையில் கவனம் தேவை: திருமண வாழ்வில் பெரிய இடைவெளியை உண்டாக்கக் கூடியது பொருளாதார பிரச்னைதான். நிதியை நிர்வகித்தல் என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயம். இதனை இருவரும் மனம் விட்டுப் பேசி வரவு, செலவுகளை கணக்கிட்டு பட்ஜெட் போடுவது பிரச்னைகளை தவிர்க்க உதவும்.

3. ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது: காதல் திருமணத்தில் ஏற்கெனவே அறிமுகம் இருந்தாலும் சேர்ந்து வாழும் சூழலில்தான் ஒருவரின் உண்மையான குணநலன்கள் தெரிய வரும். வெவ்வேறு சூழல்களில் வளர்ந்தவர்கள் சேர்ந்து வாழும்போது கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பரம் மரியாதை இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். பொருளாதார தேவைக்கோ, வேறு எதற்காகவோ துணையை மட்டும் நம்பி இல்லை என்பதற்காக துணைக்குரிய மரியாதையைத் தராமல் உதாசீனப்படுத்துவது திருமண வாழ்க்கையை பாதிக்கும்.

4. சமாதானம்: எப்பொழுதும், ‘நான் பெருசு நீ பெருசு’ என்று சண்டை போடாமல், தகாத வார்த்தைகள் பேசாமல், விரோதம் கொள்ளாமல் சமாதானமாக இருக்கப் பழக வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழப் பழக  வேண்டும். எதுவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசுவதுடன், ஒருவரின் தனிப்பட்ட தேவைகளை மதிக்கவும் வேண்டும்.

5. சுயத்தை இழக்காதீர்கள்: திருமணம் ஆகிவிட்டால் நண்பர்களின் வட்டத்தையோ, பொழுதுபோக்கையோ விட்டுவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. திருமணம் ஆனாலும் சுயத்தை இழக்காமல், லட்சியத்தை விட்டு கொடுக்காமல் ஒளிவு மறைவின்றி இருவரும் இருப்பது மணவாழ்க்கை சிறப்புடன் இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
இன்வெர்ட்டரை வீட்டின் எந்தப் பகுதியில் வைக்க வேண்டும்?
new couples

6. அன்பு: கணவன், மனைவிக்கு இடையே காதலும் பாசமும் இருக்க வேண்டும். ஒருவரையொருவர் நேசிக்கவும் வேண்டும். ஒவ்வொருவருக்கும் விருப்பு வெறுப்புகள் வேறுபடும். அதைப் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசுவதுடன், அன்பான வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வதும் உறவை நீடிக்க வைக்கும். ஒருவருக்கொருவர் அன்பையும் காதலையும் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்ள வேண்டும். இருவருக்குள்ளும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கின்ற எண்ணத்தை விட்டு, ஆதிக்க எண்ணமின்றி கடமைகளைப் பிரித்துக்கொண்டு சரியாகச் செய்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்.

7. நம்பிக்கை கொள்ளுதல்: ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்திருப்பதுடன் புரிந்துகொள்வதும் அவசியம். திருமண வாழ்க்கையில் நம்பிக்கைதான் அடிப்படை. சுதந்திரம் என்ற பெயரில் குடும்பத்துக்கோ, திருமண உறவுக்கோ குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வதும், மனம் விட்டுப் பேசுவதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com