ஒருவர் தன்னிடமுள்ள தனித்திறன் மூலம் மற்றவர்களைத் தம் பக்கம் காந்தம் போல் இழுத்து அவர்களுடனான உறவை பலப்படுத்திக்கொள்ள பல வகையான உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். பிறர் சொல்வதை உன்னிப்பாக கவனித்தல், போலியற்ற புன்னகை, அக்கறை, பச்சாதாபம் போன்றவை மூலம் பிறரின் நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை சிரமமின்றிப் பெற முடியும். தம் முகத்தில் பிரகாசிக்கும் தனித்துவமான நேர்மறை சக்தி மூலம் பிறரைத் தம் பக்கம் இழுத்து, தன்னை மதிப்புமிக்கவராகவும் புகழ்ச்சிக்குரியவராகவும் கருதி தன்னுடன் நெருங்கிப் பழகச் செய்ய முடியும்.
சோஷியல் மீட்டிங் மற்றும் தொழில் முறை சந்திப்புகளிலும் அவர் தம் இருப்பை அங்குள்ள அனைவரும் அறிய வகை செய்வதிலும், அவருடன் தொடர்பு கொள்ளும் விருப்பத்தை மற்றவர் மனதில் உண்டுபண்ணச் செய்வதிலும் படு ஸ்மார்ட்டாக நடந்து கொள்வார். பிறகென்ன, நீங்களும் காந்த சக்திமிக்க கனவானாக உருவெடுக்க இந்தப் பதிவில் கூறப்படும் 7 ஆலோசனைகளைப் பின்பற்றிப் பாருங்களேன்.
1. சிறந்த கவனிப்பாளராகுங்கள்: ஒருவர் உங்களுடன் பேசுவதை உற்றுக் கவனியுங்கள். அவர் பேசி முடித்தவுடன் சில நொடி இடைவெளி விட்டு அவருக்கு பதிலளியுங்கள். இந்த இடைவெளி அவர் பேசியதை நீங்கள் முற்றிலுமாக கவனித்துள்ளீர்கள் என நம்பவைக்க உதவும். மேலும், உங்கள் மீதுள்ள மதிப்பையும் மரியாதையையும் கூட்டச் செய்யும். உங்களுடனான தொடர்பு வலுப்பெறும்.
2. கள்ளமில்லாத புன்னகையை காட்டத் தவறாதீர்கள்: மற்றவருடன் இருக்கும்போது உங்கள் உதட்டில் உள்ள சிரிப்பு கண்கள் வழியாகவும் மின்னட்டும். இது அவருக்கு உங்களின் நேர்மையான குணத்தையும் அன்பையும் வெளிப்படுத்தி அவரை சகஜமாக உங்களுடன் பழக அனுமதிக்கும்.
3. பேச்சின் இடையில் மற்றவரின் பெயரை தெரிந்துகொள்ளுங்கள்: ஒருவரை முதல் முறையாக சந்தித்துப் பேசும்போது அவரின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெறும்போது அவர் பெயரைக் கூறி விடை கொடுங்கள். உதாரணமாக, ‘பை... பை... மனீஷ். மீண்டும் சந்திப்போம்’ எனக் கூறலாம். இந்தச் சிறிய செயல் உங்கள் மீது நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ணி உங்களுடனான தொடர்பைத் தொடர வேண்டுமென்ற விருப்பத்தை அவருக்கு உண்டுபண்ணும்.
4. உடல் மொழியின் நுண்ணிய பிரதிபலிப்பு மூலம் நல்லுறவை வளர்க்கலாம்: சில நேரங்களில் ஒருவரின் உடல்மொழி கூட இருவரிடையே இணைப்பை உருவாக்க உதவும். உதாரணமாக, ஒருவர் லேசாக முன்புறம் குனிந்து அல்லது கைகளை அசைத்து பேசும்போது நீங்களும் அதே ஸ்டைலை ஓரளவுக்கு பின்பற்றும்போது இருவரிடையே புரிதலும் நெருக்கமும் உண்டாகும்.
5. சுற்றுமுகமான பாராட்டுக்களை (Indirect complements) வழங்குதல்: இரண்டுக்கும் மேற்பட்டோர் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவரின் நற்பண்புகளை அவரிடம் நேரிடையாகக் கூறி பாராட்டுவதைத் தவிர்த்து, இன்னொருவரிடம் கூறினால் அதை அந்தப் பாராட்டுக்கு உரியவர் பெருமையாக நினைக்கவும், பாராட்டியவர் மீது அதிக மரியாதை கொள்ளவும் வழிகோலும்.
6. மற்றவர் பேரார்வத்துடன் மதிக்கும் விஷயங்களை நாமும் மதித்துப் பேசுதல்: ஒருவருக்கு தோட்டக்கலையில் அதிக ஆர்வம் என்றால் அவருக்கு எந்த மாதிரியான செடிகளைப் பிடிக்கும் என்று கேட்டு சில டிப்ஸ்ஸையும் வழங்கும்போது இருவருக்கும் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்பெறும். அவரது ஆர்வத்தில் அக்கறை காட்டுவது, அவரை ஊக்கப்படுத்தி மேலும் பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள உதவும்.
7. பச்சாதாபம் காட்டி நம்பிக்கையளிக்கலாம்: ஒருவர் தன்னுடைய பிரச்னையை நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கையில் அதை முழுவதுமாகக் கேட்டுப் புரிந்து கொண்டு, அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ‘நானும் இதேபோன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளேன்’ என்று கூறி, பிரச்னை தீர தகுந்த ஆலோசனை கூறலாம். இந்த மாதிரியான அணுகுமுறை உண்மையாக நாம் அவர் மீது அக்கறை கொண்டிருப்பதைக் காட்டி அவருக்கு நம் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
நமது தினசரி நடவடிக்கைகளில் இந்த ஏழு வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மற்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு உண்மையான மனித காந்தமாக (People Magnet) மாறலாம். பலருடன் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டு இந்த நிலைக்கு வருவதற்கு முயற்சியும் அதிக நேரமும் தேவைப்படும். ஆனால், கஷ்டப்பட்டு இந்நிலைக்கு வந்த பின்பு நம் வாழ்வு வளமானதாகவும் நிறைவுற்றதாகவும் விளங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.