எல்லா பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தையை அறிவாற்றல் நிறைந்தவர்களாக வளர்க்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குழந்தைகளை வளர்ப்பது சவாலாக இருந்தாலும், அவர்களை மன பலத்துடன் வளர்ப்பது மிக முக்கியம். எனவே இந்த பதிவில் குழந்தைகளை புத்திசாலியாக்கும் 7 டிப்ஸ் என்னவென்று பார்க்கலாம்.
1. முதலில் உங்கள் குழந்தைகளிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகுங்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அப்படிதான் உங்கள் குழந்தைகளும் இருப்பார்கள். நீங்கள் நல்ல விஷயங்களைக் கடைப்பிடித்தால் உங்கள் குழந்தை தானாகவே நல்ல செயல்களை செய்ய ஆரம்பிக்கும்.
2. உங்கள் குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ அல்லது பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டாலோ அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அவர்களுடன் இருந்து பிரச்சனைகளை தீர்க்க கற்றுத் தாருங்கள். இது அவர்களை தைரியமாக உணரச் செய்யும்.
3. தோல்வியை கையாள கற்றுத் தாருங்கள். வாழ்க்கை எப்போதுமே எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே செல்லாது. இன்பம் ஏற்படுவது போல் துன்பமும் ஏற்படும். உங்கள் குழந்தை தோல்வியடையும் சமயத்தில் அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை சொல்லித் தாருங்கள். தோல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்குக் கற்றுத்தந்து, கடினமான காலங்களை அவர்களே கையாள உதவுங்கள்.
4. உங்கள் குழந்தைகளை புதிதாக எதையாவது முயற்சி செய்ய வையுங்கள். ஏனெனில் பல பெற்றோர்கள் தன் குழந்தைக்கு புதிய விஷயங்களை சொல்லித் தர முயல்வதில்லை. புதிய முயற்சிகள் மூலமாகவே புதிய அனுபவங்கள் கிடைக்கும். அது உங்கள் குழந்தைகளை புத்திசாலியாக மாற்றும்.
5. உங்கள் குழந்தைகளை அவர்களாகவே அவர்களது வேலைகளை செய்து கொள்ள வையுங்கள். அப்படி செய்தால் மட்டுமே எல்லா விஷயங்களுக்கும் பெற்றோரையே அவர்கள் சார்ந்திருக்க மாட்டார்கள். தானாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்ற மனநிலை அவர்களுக்கு ஏற்படும்.
6. வீட்டில் நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும்போது உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள். வீட்டில் உங்கள் குழந்தைகளிடம் அதிகம் பேசுங்கள். முடிந்தவரை குழந்தைகள் இருக்கும் போது நீங்கள் செல்போனில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளிடம் பேசி அவர்கள் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிடம் காட்டும் அன்பு, ஒரு நல்ல உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தும்.
7. உங்கள் குழந்தைகளை வெளியே சென்று விளையாடச் சொல்லுங்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவதை பார்க்கவே முடிவதில்லை. பெரும்பாலானவர்கள் கையில் செல்போனை வைத்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். வெளியே சென்று பிறருடன் பழகி விளையாடினால் மட்டுமே, அவர்களின் வெளியுலக அறிவு வளரும்.