வளரும் குழந்தைகள் பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பது அரிது. ஆனால், பெற்றோரின் பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்ற நினைப்பார்கள். எனவே, பிள்ளைகள் தங்கள் பெற்றோரை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்ள அதற்கான சிறப்புமிக்க சூழலை உருவாக்கித் தருவது நமது கடமை. அதற்கு பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 7 வகையான பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. குழந்தைகள் வளரவும் கற்றுக்கொள்ளவும் அவர்களுக்குத் தேவையான ஸ்பேஸ் வழங்குதல்: குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு எந்தவிதமான தீங்கும் தோல்வியும் வந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்துவோம். இது அவர்கள் மீது அடக்குமுறை செலுத்துவது அல்லது சண்டை சச்சரவுக்கு வழி ஏற்படுத்துவது போல தோன்றும். முடிவெடுக்கும் உரிமையை அவர்களிடம் வழங்கி, சவால்களை சந்திக்கச் செய்தால் அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும்; அவர்கள் மீது நாம் வைத்த நம்பிக்கை மூலம் நம் மீது அவர்களுக்கு மரியாதை உண்டாகும்.
2. எப்பொழுதும் அறிவுரை வழங்குவதை விடுத்து குழந்தைகள் கூறுவதையும் கவனித்தல்: குழந்தைகளின் கண்ணோட்டத்தில் அவர்கள் சொல்ல வருவதைக் கவனிக்காமல் தொடர்ந்து நாமே பேசிக்கொண்டிருப்பது இருவரிடையே தடைக்கல் உண்டாகக் காரணமாகும். அவர்கள் கூறுவதையும் கேட்டு அவர்களை ஊக்குவிப்பதால் பெற்றோர் மீது அவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
3. பெற்றோர் தவறு செய்யும்போது அதை ஒப்புக்கொள்வது: ஆசிரியரின் வழிகாட்டுதல்படி குழந்தை ஒரு ப்ராஜெக்ட் செய்து கொண்டிருக்கும்போது, நாம் அனைத்தும் அறிந்தவர் போல் அதை வேறு முறையில் செய்ய வைத்து, அதன் விளைவாக மார்க் குறையும்போது நாம் நம் தவறை ஒப்புக்கொண்டு குற்ற உணர்வோடு குழந்தையிடம் மன்னிப்பு கேட்பதில் தவறே கிடையாது. இதனால் தவறு செய்வதும் அதன் மூலம் கற்றுக்கொள்வதும் ஓகே என்று குழந்தை உணர்ந்து கொண்டு பெற்றோர் மீது அதிக மரியாதை செலுத்தத் தொடங்கும்.
4. நம் குழந்தைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசாதிருத்தல்: ஒவ்வொரு குழந்தையும் அதன் பலத்திலும் பலவீனத்திலும் தனித்துவம் பெற்றவை. படிப்பு விஷயத்தில் மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு தனது குழந்தையை முன்னுக்குத் தள்ள முயற்சிப்பது குழந்தைக்கு தாழ்வு மனப்பான்மையையும் ஸ்ட்ரெஸ் தரவும் மட்டுமே உதவும். அதற்கு பதில் அவர்களின் தனித்துவத்தை அறிந்து அவர்களாகவே பெஸ்ட்டை வெளிப்படுத்த உதவும்போது பெற்றோர் மீது அவர்களுக்கு மரியாதை தானாகவே அதிகரிக்கும்.
5. விதிமுறைகளையும் எல்லைகளையும் பின்பற்ற வலியுறுத்துதல்: பெற்றோர்களாய் இருக்கும்போது விதிமுறைகளையும் எல்லைக் கோடுகளையும் உருவாக்கி அவற்றை மீறும்போது என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பதை தெளிவாகப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி, எந்தவித முரண்பாடுமின்றி அவர்கள் அதைப் பின்பற்றுவதைக் கண்காணிப்பதும், குழந்தைகளுக்கு பெற்றோர் மீது நம்பிக்கையும் மரியாதையும் உண்டாகச் செய்யும்.
6. நல்ல லைப் ஸ்டைல் பழக்கங்களை செய்ய வலியுறுத்துவதோடு நாமும் அதைப் பின்பற்றுதல்: உடற்பயிற்சி போன்ற நல்ல வகை லைப் ஸ்டைல் பழக்கங்களை பிள்ளைகளுக்குக் கற்றுத் தருவதோடு நிற்காமல் நாமும் அதைப் பின்பற்றுதல் மிகவும் முக்கியம். குழந்தைகள் அவர்கள் கேட்பதிலிருந்து தெரிந்து கொள்வதை விட, பார்ப்பதிலிருந்து அதிகம் கற்றுக் கொள்கின்றனர். அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்ப்பதை நாமும் செய்து வரும்போது அவர்களுக்கு நம் மீதான மதிப்பு உயரும்; நம் ஆரோக்கியமும் மேம்படும்.
7. பிள்ளைகள் தவறு செய்யும்போது ஓவர் ரியாக்ட் பண்ணாதிருத்தல்: தவறு செய்யும் குழந்தைகளை திட்டவோ தண்டிக்கவோ செய்யும்போது அவர்களுக்கு நம் மீது மரியாதை வருவதற்குப் பதில் பய உணர்ச்சிதான் உண்டாகும். இதனால் அவர்கள் அவர்களின் பிரச்னைகளையும் தோல்விகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளவே அஞ்சுவர். ஆகவே, அவர்கள் தவறு செய்யும்போது அத்தவறுகளிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளும் வித்தையைக் கற்றுக் கொடுத்துத் தேற்றினால் அவர்களுக்கு பெற்றோர் மீது மரியாதை உண்டாவதோடு, வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையக் கற்றுக்கொண்ட மனிதனாக உருவாகவும் வாய்ப்பாகும்.