
வாழ்க்கை என்பது வளைந்த நாணல் போன்றது. சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுத்து செல்வது வாழ்க்கையை சுமுகமாக்கும். சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் வளைந்து கொடுக்கும் ஆற்றல் அவசியம். இல்லையெனில் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்க முயற்சிக்காதீர்கள். அது நம் வளர்ச்சியை தடுத்துவிடும்.
வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளை கையாள நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமே குணங்கள் தேவை. எதற்கும் வளைந்து கொடுத்துச் செல்லும் தன்மையுடன் இருந்தால் நம்மால் முழு திறனுடன் செயல்பட முடியும். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் போனால் பலவித இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். யாருடனும் அனுசரித்துப்போக மாட்டேன் என்று இருந்தால் உறவுகளாலும், நட்புகளாலும் ஒதுக்கப்பட்டு தனித்தீவு போல ஆகிவிடுவோம். அதற்காக எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுத்தால் நம்மை நிமிரவே விடாதபடி செய்து விடுவார்கள். எனவே இரண்டிலும் தெளிவு தேவை. அதிகமாக வளைந்து கொடுத்தால் ஒடிந்துதான் போவோம். வளைந்து கொடு உடைந்து விடாதே!
வாழ்வின் கடினமான காலகட்டங்களின்போது அதற்கேற்றபடி வளைந்து கொடுக்கும் தன்மையையும், நேர்மறையான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவும். வாழ்க்கை எப்பொழுதும் நாம் திட்டமிட்டபடி நடப்பதில்லை. எதிர்பாராத தருணங்களில் வரும் எதிர்பாராத சம்பவங்கள் நம்மை சில சமயங்களில் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு மாற்றி விடுகிறது. இது நம் வாழ்க்கை முறையை எளிதாக்கி ஏமாற்றங்களை குறைக்கிறது. வளைந்து கொடுத்து செல்லும் குணம் நம் வாழ்வில் நாம் எண்ணும் இலக்குகளை அடைய உதவும். மக்கள் பெரும்பாலும் வளைந்து கொடுப்பதை (நெகிழ்வுத் தன்மையை) சமரசத்துடன் குழப்பிக் கொள்கிறார்கள். வளைந்து கொடுப்பது என்பது விட்டுக் கொடுப்பது அல்ல. சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்று வழியைத் தேடுவது.
சமூக சூழ்நிலைகளில் நெகிழ்வாக இருப்பது பல நன்மைகளை கொடுக்கும்.
1) நேர்மறையான உறவுகளை உருவாக்குதல்,
2) தொடர்பு திறன்களை மேம்படுத்துதல்
3) சிக்கல்களை தீர்க்கும் மற்றும் மோதல் தீர்வு திறன்களை மேம்படுத்தும்
4) மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வளைந்து கொடுத்து (விட்டுக் கொடுத்து) செல்லுதல்
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சூழ்நிலையை நமக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வது. மற்றொன்று சூழல்நிலைக்கு ஏற்ப நாம் மாறி விடுவது. சூழ்நிலைக்கேற்பவும். மற்றவர்களுக்கு துன்பம் தராமலும் வாழ்வதுதான் சிறந்தது.
வாழ்க்கையை சுமுகமாக்க வளைந்து கொடுத்து செல்வோமே!