
பொதுவாகவே, அனைவரும் அவரவர் விரும்பும் வழியிலேயே நிகழ்வு அனைத்தும் நடக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதற்கு மாறாக நடந்தால் விரக்தி அடைகிறார்கள். இதனால் மனமும், உடலும் சோர்ந்து விரக்தி அடைகிறார்கள். அந்த வகையில் விரக்தியை விரட்டி, உற்சாகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. ஒருவரிடம் நீங்கள் ஏதாவது குறையை கண்டால் உடனே விரக்தி அடைந்து அவர்களை விமர்சிக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவர்களுக்கு நீங்கள் உதவ முன்வந்து, அவருடைய குறைபாடுகளை மட்டும் பார்க்காமல் அவர்களின் திறமைகளைக் கண்டால் விரக்தி காணாமல் போய்விடும். ஏனெனில், யாரும் ஒரே நாளில் சரியானவர்களாக மாற முடியாது. இது படிப்படியாக நடந்து முழுமை அடையும் வரை நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
2. அன்றாட பிரச்னைகளில் அதிகம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதோடு, உங்கள் மனதை எதிர்மறையாக மாற்றும் சூழ்நிலைகளிலிருந்து விலகி இருப்பதும் விரக்தியை விரட்டும் முறையாகும். மேலும், ஒவ்வொரு பிரச்னையும் தற்காலிகமானது என்பதை அறிந்து கொண்டால் உற்சாகம் தானாக ஊற்றெடுக்கும்.
3. நம்மைச் சுற்றியுள்ளவர்களின் குறைகளைக் காணும்போது மற்றவர்களுடன் நாம் மோதல் போக்கில் ஈடுபட்டு நம்மை நாம் இழந்து விடுகிறோம். அதற்கு பதிலாக நம் கவனத்தை நம் மீதே வைத்திருக்க வேண்டும். அதற்கு, ‘நாம் இந்த உலகத்திற்கு என்ன செய்தோம்? நம்முடைய பங்களிப்பு என்ன? நம்மால் நம்மைச் சுற்றியுள்ளவர் எவ்வளவு பயன் பெற்று இருக்கிறார்?’ என்ற எண்ணங்களை மனதில் நிலை நிறுத்தினால் மற்றவர்களை குறை சொல்லவும் காயப்படுத்தவும் எண்ணமே தோன்றாது.
4. மற்றவர்களிடம் தவறுகளை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பவர்கள் உற்பத்தி செய்யாதவர்களாக இருப்பார்கள். சிறிய விஷயங்களில் கூட அவர்கள் தவறுகளை காண்பார்கள். மற்றவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களை அவர்களால் பார்க்க முடியாது. இதனால் விரக்தி ஏற்படுகிறது. ஆகவே, விரக்தி நம்முள் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள உற்பத்தி செய்து பார்க்க வேண்டும்.
5. பழி சுமத்துவதும் புகழப்படுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், மனிதர்கள் நிறைந்த இந்த சமூகத்தில் இருக்கும்போது சில சமயங்களில் நம்மை பாராட்டுவதையும், சில சமயங்களில் நம்மைக் குறை கூறுவதையும் பார்க்கிறோம். இது இயல்பானது என்பதால் மற்றவர்கள் கூறும் பழிச் சொல்லையும் பாராட்டு சொல்லையும் மனதில் வைக்காமல் இருந்தாலே உள்ளத்தில் விரக்தி ஏற்படாது.
6. மற்றவர்களுடைய சூழ்நிலைகளை அவர்கள் இருக்கும் விதத்திலேயே ஏற்றுக்கொள்வது விரக்தி ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும். அதற்காக யாருடைய தவறுகளையும் சுட்டிக்காட்டக் கூடாது. அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. விஷயங்களை அவை நடக்கும் வழியிலேயே நடக்க அனுமதிப்பது விரக்தி ஏற்படாமல் இருக்க உதவும் வழிமுறையாகும்.
7. சில நேரங்களில் சிறிய அற்ப விஷயங்களுக்காகக் கூட நாம் நம் மீது மிகவும் அதிருப்தி அடைந்து விரக்தி அடைந்து விடுகிறோம். இதனைத் தவிர்க்க யோகா செய்வது மிகவும் நல்லது. இது நம்மை உற்சாகமாக, உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு, விரக்தியை விரட்டும் சிறந்த மருந்தாகும்.
மேற்கூறிய விஷயங்களை மனதில் நிறுத்தி அதன்படி நடந்தாலே விரக்தி நம்மை விட்டு ஓடிவிடும்.