

சுயமரியாதை என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். சுயமரியாதையை பேணும் நபரால் பிறரிடத்தில் எளிதாக மரியாதையை தேடிக் கொள்ள முடியும். ஒருவர் தனது சுயமரியாதையை உயர்த்திக்கொள்ள உதவும் வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நேரத்தை மதித்தல்: காசு கொடுத்தாலும் வாங்க முடியாத விஷயம் நேரம். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பிறரிடம் அரட்டையடிப்பது, கிசுகிசுக்களில் ஈடுபடுவது போன்றவற்றை நிறுத்தினாலே பெரும்பாலான நேரம் பாதுகாக்கப்படும், ஆற்றலும் மிச்சப்படுத்தப்படும். நேரத்தை முதலீடாகக் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைப்பதோடு, சுயமரியாதையும் காப்பாற்றப்படும்.
2. தேவையில்லை கவன ஈர்ப்பு: நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் போன்றவர்களிடமிருந்து கவனம் பெறவும், அவர்களைக் கவர வேண்டும் என்று நினைத்தும் செயல்படுதல் கூடாது. அவ்வாறு செய்யும்போது சுயமரியாதையை இழக்க வேண்டி வரலாம். நமது வேலைகளைத் திறம்பட செய்தாலே நமக்கான மரியாதையும் அங்கீகாரமும் தேடி வரும். அதற்காக வீணாக மெனக்கிட வேண்டிய அவசியம் இல்லை.
3. மரியாதை, அன்பிற்காக கெஞ்சுதல் கூடாது: எவரிடமிருந்தும் மரியாதையையும் அன்பையும் எதிர்பார்த்து கெஞ்சி நிற்கக் கூடாது. இவை தாமாகக் கிடைக்க வேண்டுமே ஒழிய, வருந்திப் பெற வேண்டியவை அல்ல. அப்படி வேண்டி நின்றால் ஒட்டுமொத்தமாக சுயமரியாதையை ஒழித்துக் கட்டிவிடும். மரியாதை மற்றும் அன்பைத் தராத நட்பையோ உறவையோ தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
4. நோ சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்: தனக்கான எல்லைகளை அமைத்துக் கொண்டு அதற்குள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைத் தாண்டி வர பிறரை அனுமதிக்கக் கூடாது. எல்லோரிடத்திலும் எல்லாவற்றுக்கும் தலையாட்டினால் மரியாதை இல்லாமல் போய்விடும். உங்களது நேரமும் உணர்வுகளும் பாதிக்கப்படும்.
5. ஒப்பீடு வேண்டாம்: பிறருடன் உங்களை ஒப்புமைப்படுத்திக் கொள்வது தேவையில்லை. இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். பிறருடன் ஒப்புமைப்படுத்திக் கொள்வதால் உங்களது உண்மையான திறனும் தகுதியும் மதிப்பும் தெரியாமல் போய்விடும். எனவே, ஒப்புமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு தனது சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
6. மன்னியுங்கள், ஆனால் மறக்க வேண்டாம்: பிறர் உங்களுக்குச் செய்த தீங்குகளை மன்னித்து விடலாம். ஆனால், அவற்றை மறக்க வேண்டாம். மன்னிப்பு என்பது உங்களை கோபம் மற்றும் ஆத்திரம் இரண்டிலிருந்தும் காப்பாற்றும் ஒரு மிகப்பெரிய ஆயுதம் ஆகும். அதேசமயம் பிறர் செய்த தீங்குகளை மறக்காமல் இருந்தால் மட்டுமே மீண்டும் அந்தத் தவறை செய்ய மாட்டீர்கள். கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு புத்திசாலித்தனமாக மக்களை கையாள வேண்டும்.
7. திட்டங்களை செயல்படுத்துதல்: தினமும் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கப் போகும் வரை அன்றைக்கான வேலைகளைத் திட்டமிட்டு செய்ய வேண்டும். உடற்பயிற்சி, தியானம், சுய முன்னேற்றத்திற்காக நேரம் ஒதுக்குதல், அலுவலகப் பணிகளை சிறப்பாக செய்தல் போன்றவற்றை நன்றாக திட்டமிட்டு அவற்றை செயல்படுத்துதல் மிகவும் அவசியமாகும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தினால் ஒருவரது சுயமரியாதை சூப்பராக உயரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.