

ஒவ்வொரு வீட்டினருக்கும் திருமணம் என்பது மிகப்பெரிய வைபவம். அதை முன்கூட்டியே யோசித்து திட்டமிட வேண்டியது மிகவும் அவசியம். பலரும் நெருக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்துவிட்டு பின்னால் பல பிரச்னைகளை சந்திப்பது வழக்கம்.
முதலில் உங்கள் வீட்டுத் திருமண விழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என எவ்வளவு பேர்களைக் கூப்பிட வேண்டும் என்று வீட்டில் உள்ள அனைவரும் கலந்தாலோசித்து அதை உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என தனித்தனியே பட்டியல் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எத்தனை விருந்தினர்கள் தங்கள் வீட்டு விசேஷத்துக்கு வருவார்கள் என்பதை முன்கூட்டியே துல்லியமாக கணித்து விடலாம்.
திருமண அழைப்பிதழ்களுக்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். உறவினர்களுக்குக் கொடுக்க மங்கலகரமான திருமண அழைப்பிதழ்களையும் நண்பர்களுக்குக் கொடுக்க எளிமையான திருமண அழைப்பிதழ்களையும் தேர்வு செய்யுங்கள். கூடுமானவரை அனைவரையும் அவர்களின் வீடுகளுக்குச் சென்று நேரில் அழையுங்கள். அதுதான் உங்களுக்கும் மரியாதை அவர்களுக்கும் மரியாதை.
கூடுமானவரை பத்து அல்லது பன்னிரண்டு உணவு வகைகள் பந்தியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஸ்டேட்டஸை நிரூபிக்கிறேன் என்று விருந்தில் இருபது முப்பது என விதவிதமான உணவுகளைப் பரிமாறினால் அதில் பாதி குப்பைக்குத்தான் போகும். உழைத்து சம்பாதித்த உங்கள் பணம் குப்பைக்குப் போகலாமா? யோசித்துப் பாருங்கள். இலையில் ஒரே ஒரு இனிப்பை மட்டுமே பரிமாறுங்கள்.
விருப்பமிருந்தால் திருமணத்திற்கு முந்தைய வாரத்தில் ஒருநாள் முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்கு மதிய விருந்தை ஸ்பான்சர் செய்யுங்கள். வாழ்ந்தவர்கள் மனமார வாழ்த்தினால் உங்கள் குழந்தைகள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
மாலை, இரவு, மறுநாள் காலை, மதியம் என நான்கு வேளைக்குக்கும் என்னென்ன சமைக்க வேண்டும், எத்தனை சமைக்க வேண்டும் என்பதை அனைவருமாகக் கூடி விவாதித்து முடிவு செய்து கொள்ளுங்கள். உறவினர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழையுங்கள். முக்கியமான நண்பர்கள், நெருங்கிய சுற்றத்தார் என சராசரி நபர்களை மட்டும் திருமணத்திற்கு அழையுங்கள். அப்போதுதான் திருமணத்திற்கு வாழ்த்த வருபவர்கள் அனைவரையும் நாம் முறைப்படி வரவேற்று சிறப்பாக உபசரிக்க முடியும்.
பல திருமணங்களில் வரவேற்பு விருந்தில் ஒரு பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க அடுத்த பந்திக்காக காத்திருப்பவர்கள் இடம்பிடிக்க நாற்காலியின் பின்னால் நிற்பதைக் காண்கிறோம். இது அனைவருக்குமே தர்மசங்கடமான விஷயமாகும். எனவே, கூடுமானவரை பெண் வீட்டாரோ அல்லது ஆண் வீட்டாரே ஒவ்வொரு தரப்பிலும் நானூறு எண்ணிக்கை தாண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்ள வரும் ஒவ்வொருவரையும் உளமார ‘வாங்க வாங்க வணக்கம்’ என்று கூறி புன்னகையுடன் வரவேற்க வேண்டும். அப்படி வரவேற்கும்போது அவர்களிடம் ‘அவர் வரவில்லையா? இவர் வரவில்லையா?’ என்று வராத நபர்களைப் பற்றி விசாரிக்காதீர்கள். இது வந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
வரவேற்பு நிகழ்ச்சியை சரியாக ஏழு மணிக்குத் தொடங்கத் திட்டமிடுங்கள். அப்போதுதான் இரவு ஒன்பது மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சியை முடிக்க முடியும். வரவேற்பு நிகழ்ச்சியில இசைக் கச்சேரிகளை கூடுமானவரை தவிர்க்கப் பாருங்கள். அப்போதுதான் திருமண விழாவிற்கு வருபவர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி மகிழ முடியும். இதன் மூலம் பழைய உறவுகள் புதுப்பிக்கப்படும் வாய்ப்புகளும் ஏற்படும்.
புரோகிதர், மேடை அலங்காரம் செய்பவர், நாதஸ்வரக்காரர், சமையல் காண்ட்ராக்டர், வீடியோ போட்டோகிராபர் முதலானவர்களுக்கு ஒருநாள் முன்னதாக திருமண நிகழ்ச்சியைக் கூறி ஞாபகப்படுத்தி விடுங்கள். திருமண மண்டபம், மேடை அலங்காரம், மணமகள் மேக்கப், நாதஸ்வரம், புரோகிதர், சமையல் காண்ட்ராக்டர், வீடியோ போட்டோகிராபர்கள் என ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அட்வான்ஸ் கொடுத்தீர்கள் என்பதை ஒரு சிறிய டைரியில் தேதியிட்டுக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மீதம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். திருமணம் முடிந்ததும் ஒவ்வொருவரும் மீதித் தொகைக்காக உங்களிடம் வருவார்கள். அந்த சமயத்தில் திணறாமல் அந்த டைரியை வைத்து உரியவர்களுக்கு உரிய தொகையை எந்த சிக்கலும் இல்லாமல் சரியாக விநியோகிக்கலாம்.
திருமண வைபவத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் பணத்தையும் கணிசமாக சேமிக்கலாம், விழாவிற்கு வரும் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கலாம்.