ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனதில் நிம்மதி மற்றும் அமைதி இல்லாவிட்டால் எந்தப் பயனும் இல்லை. அமைதியான, நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ‘எட்டு மடங்குப் பாதை’ என்பது பௌத்தத்தின் மைய போதனையாகும். இது ஆங்கிலத்தில் Noble 8 fold path என்று அழைக்கப்படும். பௌத்தம் வழி காட்டும் எட்டு சரியான விஷயங்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சரியான பார்வை: சரியான பார்வை என்பது எதார்த்தத்தை புரிந்துகொள்வது. மேலும், வாழ்க்கையில் நிலையற்ற தன்மை பற்றிய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது. உங்களின் உணர்வுகள் உங்கள் அனுபவங்களை எவ்வாறு வடிவமைக்கின்றன என்று புரிந்துகொள்ள வேண்டும். அதைப்போல யார் மீதும் பாரபட்சம் இல்லாமல் சரியான கோணத்தில், விஷயங்களை சரியாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அமைதியும் நிறைவும் கிட்டுவதற்கான வழி புலப்படும். அவற்றைத் தேடி அடைய முடியும்.
2. சரியான எண்ணம்: எண்ணம் அழகாக இருந்தால்தான் வாழ்க்கை அழகாக இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் என்று சொல்வது போல அகத்தில் இருக்கும் நல்ல எண்ணங்களே அமைதியான நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அன்பு, இரக்கம், பற்றற்ற தன்மை ஆகியவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு புதிய செயலை செய்யத் தொடங்கும் முன்பும் அதை சரியாக செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை நினைவு கொள்ள வேண்டும்.
3. சரியான பேச்சு: பேச்சு என்பது உதட்டிலிருந்து வராமல் உள்ளத்தில் இருந்து வர வேண்டும். வார்த்தைகள் கனிவாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். பேசுவதற்கு முன்பு இந்த வார்த்தைகள் பயனுள்ளதா, அவசியமானதா, கனிவானதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் வெளியில் மற்றும் அந்நியர்களிடம் பேசும்போது கூட சரியான விதத்தில் ஒருவரால் பேச முடியும்.
4. சரியான நடவடிக்கை: நல்ல நெறிமுறை சார்ந்த நடத்தையால் ஒருவர் தனக்கும் பிறருக்கும் நன்மை விளைவிக்க முடியும். அது சார்ந்த செயல்களில் ஈடுபட வேண்டும். இரக்கமான கருணை செயல்களில் ஈடுபடும்போது அந்த நடவடிக்கை சரியாக அமையும். அவை பிறருக்கும் நன்மையைத் தரும்.
5. சரியான வாழ்வாதாரம்: செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அது சரியாக, நேர்மறையாக இருக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்திற்கும் அதனால் பயன் கிடைக்கும். யாருக்கும் ஒரு தீங்கும் தராத தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுடைய வேலை மற்றும் நெறிமுறை கொள்கைகள் பிறருக்கு நன்மை பயக்கிறதா? நோக்கத்தை மேம்படுத்துகிறதா என்பதை பற்றி சிந்திக்க வேண்டும்.
6. சரியான முயற்சி: நேர்மறை குணங்களை வளர்த்துக்கொள்ளுதல் மனதின் நேர்மறையான நிலைகளை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமான எண்ணங்களை ஊக்குவிப்பதற்கும் உதவும். அவை எவ்வளவு கடினமான முயற்சியையும் மேற்கொள்ள வைக்கும். மேலும், புத்தக வாசிப்பு அல்லது தியானம் போன்ற தனிப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். இவை மனதை செம்மைப்படுத்த உதவும்.
7. சரியான நினைவாற்றல்: நிகழ்கால விழிப்புணர்வு ஒருவருக்கு அவசியம் இருக்க வேண்டும். பழைய நினைவுகளில் மூழ்குவது அல்லது எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்களில் ஆழ்ந்துபோவது என்று இல்லாமல் அன்றாட நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். அது உண்ணுதல், நடைப்பயிற்சி அல்லது வேலை செய்யும்போது நிகழ்காலத்தில் முழுமையாக கவனம் செலுத்துவதன் மூலம் ஒருவருடைய நினைவாற்றல் நன்றாகப் பெருகும். கவனத்துடன் சுவாசித்தல் போன்ற நுட்பங்களும் மிகவும் அவசியம்.
8. சரியான செறிவு: மைண்ட் ஃபுல்னெஸ் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மூலம் கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது ஒருவரின் கவனத்தையும் சிந்தனைத் தெளிவையும் அதிகரிக்க உதவும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தியானம் செய்ய வேண்டும். மனதையும் உடலையும் செழுமைப்படுத்தும் மிக அற்புதமான கருவியாகும்.