

தலைமுறை தலைமுறையாக தங்கள் கலாசாரத்தை கைவிடாத குணத்தைக் கொண்டவர்கள் கொரிய நாட்டு மக்கள். இவர்கள் தங்கள் கலாசாரத்தை மறக்காமல் பின்பற்றுவதோடு, தங்கள் எதிர்கால சந்ததியினரும் வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு வாழ தங்கள் கலாசாரத்தை பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நன்னடத்தை, பொறுமை மற்றும் அன்பு போன்ற நற்குணங்களோடு வாழ, இவர்களின் மறைந்த முன்னோர்கள் விட்டுச் சென்ற அர்த்தம் பொதிந்த பல பழமொழிகளைப் பின்பற்றுகின்றனர். அவற்றுள் 8 வித பழமொழிகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. கஷ்டங்கள் பல கடந்த பின்னே மகிழ்ச்சி வரும்: கஷ்டங்கள் எப்பொழுதும் நம் கூடவே வருவதல்ல. விடாமுயற்சி மூலம் அதை வென்று வளம் பெறலாம். கஷ்டங்கள் தற்காலிகமானவை. பொறுமை இருந்தால் அவற்றைக் கடந்து விடலாம். சகிப்புத் தன்மைக்குப் பின் வரும் மகிழ்ச்சி மிகவும் அர்த்தமுள்ளதாக உணரப்படும்.
2. ஒரு வேலையை செய்ய ஆரம்பிப்பது, அதை பாதி முடித்துவிட்டதற்கு சமம்: இந்தப் பழமொழி பயமோ, தயக்கமோ இல்லாமல் தாமதமின்றி ஒரு வேலையை செய்ய ஆரம்பித்துவிடுதல் பாதி வேலையை முடித்துவிட்டதற்கு சமமாகும் என்று கூறி ஊக்குவிக்கிறது. செயலில் இறங்கிவிட்டால் செய்து முடிப்பது சுலபம் என்கிறது இந்தப் பழமொழி.
3. தெளிந்த கல்வியறிவு பெற ரத்தின கம்பளம் விரித்த பாதை ஏதும் கிடையாது (There is no royal road to learning): உண்மையான கல்வியறிவு என்பது மன உறுதி, கடின உழைப்பு, பணிவு, ஒழுக்கம், தவறுகளிலிருந்து பாடம் பெறுவது, தொடர் முயற்சி, பொறுமை போன்ற நற்பண்புகளினால் மட்டுமே கிடைக்கக்கூடியது என்பதை உணர்த்துகிறது இப்பழமொழி.
4. மூன்று வயதில் கற்றுக்கொண்ட நற்பழக்கங்கள் எண்பது வயது வரை தொடரும்: சிறு வயதில் கற்றுக்கொண்ட நன்னடத்தை சார்ந்த பழக்க வழக்கங்கள், பெரியவரான பின்னும், இறுதி வரையான காலத்திற்கும் அவரது நிரந்தரமான குண நலன்களாக நிலைத்து நிற்கும். சிறு வயதிலேயே தீய பழக்கங்களை திருத்திக்கொண்டு, சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கமான பழக்க வழக்கங்களுடன் வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் பழமொழி இது.
5. வார்த்தைகள் வலிமையானவை (A single word can pay back a thousand nyang debt): பணத்தினாலோ அல்லது பலத்தினாலோ அடைய முடியாதவற்றை அன்பான வார்த்தைகளால் அடைய முடியும். அர்த்தம் பொதிந்த அன்பான வார்த்தைகள் ஒருமைப்பாடுடன் கூடிய நல்லுறவை வளர்க்கவும் உணர்ச்சிக் கொந்தளிப்பை குறைக்கவும் உதவி புரியும்.
6. புலிக்குட்டியைப் பிடிக்க புலிக் குகைக்குள் நுழைய வேண்டியது அவசியம்: அசாதாரணமான ஒன்றை அடைய விரும்பினால், ஆபத்தை எதிர்கொள்ளத் தேவையான துணிச்சல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் பழமொழி இது. பெரிய அளவிலான வெற்றிக்கு வித்திடுவது துணிச்சல் ஒன்றே.
7. பதற்றத்துடன் செயலில் இறங்குவது தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்: இலக்கை அடைய பொறுமையுடன், கவனமாக, சிறந்த முடிவை தேர்ந்தெடுத்து செயல்படுவது அவசியம் என்று அறிவுறுத்தும் பழமொழி. இது நம், ‘பதறாத காரியம் சிதறாது’ என்ற பழமொழிக்கு இணையானது எனலாம்.
8. காலியான வண்டி அதிக சப்தம் எழுப்பும் (An empty cart makes more noise): அறிவாற்றலில் குறையுள்ளவன் அதிக சப்தமிட்டுப் பேசுவான். தெளிந்த அறிவும் தன்னம்பிக்கையும் உடையவன் ஓசையின்றி வெற்றிக்கனி பறிப்பதில் தேர்ந்தவனாயிருப்பான்.
மேலே கண்ட பழமொழிகளை அனைத்து நாட்டினரும் பின்பற்றினால் நலமாய் வாழலாம்.