ஒரு மனிதரின் உடல் மொழிக்கும் தன்னம்பிக்கைக்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தங்களது உடல் மொழி மூலம் பிறரை எளிதில் கவரவும், கட்டுப்படுத்தவும் தன்னுடைய எண்ணங்களையும் மன உறுதியையும் தன்னம்பிக்கைமிக்க ஒரு மனிதரால் வெளிப்படுத்த முடியும். அந்த ஒன்பது விதமான உடல் மொழிகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நேராக நிற்றல்: தன்னம்பிக்கை நிறைந்த ஒரு மனிதர் முதுகுத்தண்டு வளையாமல் நேராக நின்று அல்லது உட்கார்ந்து கொண்டு பேசுவார். அவரது வெளிப்படையான தோரணையே அவரது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும்.
2. கண் தொடர்பு: தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் சரியான முறை கண் தொடர்பாகும். பிறரிடம் பேசும்போது அல்லது ஒரு கூட்டத்தில் பேசும்போது கூட, எதிரில் இருக்கும் நபர்களுடைய கண்களைப் பார்த்து தன்னம்பிக்கை மிக்க நபர் பேசுவார், இது பிறருக்கு அவர் மேல் மரியாதையை ஏற்படுத்தும். ஆர்வமுடன் அவரது பேச்சைக் கேட்கத் தூண்டும்.
3. பவர் போஸ் (pose): கைகளை உயர்த்திப் பேசுவது அல்லது இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசுவது போன்ற பலவிதமான தோரணையை வெளிப்படுத்தி தன்னுடைய தன்னம்பிக்கையை ஒரு மனிதர் வெளிப்படுத்துவார். இத்தகைய போஸ்கள் கவலை, டென்ஷனை ஏற்படுத்தும் கார்டிசோலின் அளவைக் குறைக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். ஒரு மனிதர் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்பதை இந்த உடல்மொழி நன்றாக வெளிப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
4. உறுதியான கைகுலுக்கல்: எதிரில் இருக்கும் நபரிடம் கைகுலுக்கும்போது அது உறுதியான கைகுலுக்கலாக இருக்க வேண்டும். கைகளை ஏனோதானோ என்று பிடித்து குலுக்காமல் உறுதியாக கை கொடுக்கும்போது அது அந்த நபரின் தீர்க்கமான தன்மையை, தன்னம்பிக்கையின் அளவை வெளிப்படுத்துகிறது. முதல் அறிமுகத்தின்போது நேர்மறையான நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது.
5. தளர்வான உடல் அசைவுகள்: தன்னம்பிக்கை உள்ள நபர்கள் பெரும்பாலும் தங்களுடைய உடல் அசைவுகளை தளர்வாக வெளிப்படுத்துவார்கள். மிகவும் ஸ்டிஃப்பாக, கஞ்சி போட்ட சட்டை போல் தோள்களையும் கைகளையும் வைத்திருக்காமல் தளர்வாக வைத்திருப்பார்கள். அவர்களது தோள்பட்டை மற்றும் கைகள் போன்றவை பதற்றமின்றி, படபடப்பின்றி மிகவும் இயல்பாக தளர்வாக இருக்கும். இது எதிரில் நின்று பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான ஆறுதலையும் அவர்கள் மேல் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
6. பிரதிபலிப்பு: பிறருடைய உடல் மொழியை நுட்பமாக பிரதிபலிப்பது தன்னம்பிக்கையையும் எம்பத்தி எனப்படும் பச்சாதாபத்தையும் வெளிப்படுத்தும். எதிரில் இருக்கும் நபர்களுக்கு தகுந்த மாதிரி தன்னுடைய உடல் மொழியை தன்னம்பிக்கை மிகுந்த நபர் பிரதிபலிக்கும்போது சுற்றி உள்ளவர்களின் உணர்ச்சி நிலையை மிகவும் அழகாக பிரதிபலிக்கிறார். அவர்கள் மேல் ஈடுபாடு கொள்கிறார் என்பதைக் காட்டுகிறது.
7. உரையாடல்களின்போது முன்னோக்கி சாய்வது: எதிரில் இருக்கும் நபர்கள் பேசும்போது சற்றே குனிந்து அவர்கள் பேசுவதை தன்னம்பிக்கை மிகுந்த நபர்கள் கேட்பார்கள். இது அவர்களுடைய பணிவையும் பிறர் பேசுவதைக் கேட்பதில் உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. இதனால் எதிரில் இருப்பவர் நன்றாக தூண்டப்பட்டு மிகவும் இணக்கமாக இவரிடம் பேசுவார்.
8. தூரம்: உரையாடலின்போது பொருத்தமான தூரத்தை தன்னம்பிக்கை உள்ள நபர்கள் பராமரிக்கிறார்கள். பிறர் பேசுவது காதில் கேட்காத மிக அதிக தூரத்தில் நின்று பேசுவதில்லை. அதேபோல ஒருவரை சங்கடப்படுத்துவது போல மிகவும் நெருங்கி நின்றும் பேச மாட்டார்கள்.
9. பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு பேசுவதில்லை: தங்களுடைய பாக்கெட்டில் கைகளை விட்டுக் கொண்டு பேசுவது தன்னம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. தன்னம்பிக்கை உள்ள ஆசாமிகள் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு பேச மாட்டார்கள்.