சிரிக்கும்போதும் விளையாடும்போதும் அழகாகத் தெரியும் குழந்தைகள், கோபப்படும்போது வீட்டின் சூழ்நிலையையே மாற்றி விடுவார்கள். எந்தக் காரணமும் இல்லாமல் சில சமயங்களில் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்கவும் குழந்தைகள் கோபப்படுகின்றனர். மொத்தத்தில் குழந்தைகளின் கோபத்தைத் தணிக்கும் ஐந்து ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. குழந்தைகளின் முரட்டுத்தனமான நடத்தை, பிறரை பாதித்து உறவு சிக்கல்களை எப்படி ஏற்படுத்தும் என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேசி அவர்களது செயல் தவறு என்பதை அன்பாக எடுத்துச் சொல்லவும். மேலும், குழந்தைகள் சில காரணங்களுக்காக கோபப்பட்டால் அதற்கு சரியான தீர்வை சொல்ல வேண்டும். இன்றைய நாளின் இந்த நடத்தை குழந்தையின் இயல்பில் ஒரு பகுதியாக மாறிவிடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
2. குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக சில பெற்றோர்கள் பயமுறுத்தி குழந்தைகளை வளர்ப்பது தவறு. மேலும், குழந்தைகள் சொல்பேச்சை கேட்காமல் முரட்டுத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டால் அவர்களுடன் யாருமே பேசவோ, விளையாடவோ மாட்டார்கள் என்று கூறிய பிறகும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தால், பெற்றோர்கள் அதை அப்படியே விட்டு விடாமல் குழந்தைகளுக்கு அவர்கள் செய்தது தவறு என்பதை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்.
3. குழந்தைகள் பெற்றோர்களின் நடத்தையை பார்த்துதான் கற்றுக்கொள்வார்கள் என்பதால் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதற்கு முன்பு பெற்றோர்கள் முன்மாதிரியாக மற்றவர்களிடம் நடந்து குழந்தைகளுக்கு கற்பிக்க முயற்சி செய்யுங்கள். மேலும், குழந்தைகள் பிறருடன் நன்றாக நடந்து கொள்ளும்போது உடனே அவர்களைப் பாராட்டுங்கள். பிறரிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் மதிப்பு, அன்பு, மரியாதை கிடைக்கும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
4. உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது அவசியம் என்பதால், குழந்தைக்கு கோபத்தை சரியான முறையில் வெளிப்படுத்த கற்றுக் கொடுங்கள். மேலும், குழந்தைகள் கோபமாக இருக்கும்போது மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.
5. குழந்தைகள் பிறரிடம் அன்பாக நடந்துகொள்ள அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள். அவர்களை மற்றவர்களுக்கு உதவி செய்யும் செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் குழந்தைகள் இரக்கம், கருணை, பிறருக்கு உதவும் தன்மை போன்ற குணங்களுடன் வளருவார்கள்.
குழந்தைகளைப் புரிந்துகொள்ள அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களின் கோபத்தையும், அதற்கான காரணங்களையும் தெரிந்துகொண்டு வரைதல், வீட்டை சுத்தம் செய்தல், இசை கேட்டல் போன்ற குழந்தைகளிடத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தால் நிச்சயம் குழந்தையின் கோப குணத்திலும் முன்னேற்றம் கிடைக்கும்.