தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – திருக்குறள்
தந்தை தன்னுடைய மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்ல உதவி, கற்றவர்கள் கூடிய அவையில் முந்தியிருக்கும்படி அவனைக் கல்வியில் மேம்படச் செய்தல் என்கிறது திருக்குறள். வாழ்வில் தன் மக்கள் முன்னேறச் செய்ய, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்து, தவறு கண்டபோது திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய பெரிய பொறுப்பு பெற்றோர் கையில். பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றிய கண்ணோட்டம்.
1. சுயமாக முடிவெடுக்கக் கற்றுக் கொடுத்தல்: சிறிய வயதிலிருந்தே இதில் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி செல்வதற்கு அல்லது விழா, நண்பர் வீட்டு விருந்து ஆகியவற்றிற்கு உடையை தேர்ந்தெடுப்பதை அவனுடைய போக்கில் விடலாமே. அவன் தேர்ந்தெடுப்பது அந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமானது அல்ல என்று கருதினால், அதன் காரணத்தை அவனுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். “நான் சொல்வதைத் தான் நீ அணிய வேண்டும்” என்பது அவன் சுய சிந்தனையைத் தடுக்கும்.
2. உடல் நலம் பேணுதல்: சுவரை வைத்துத் தான் சித்திரம் வரைய வேண்டும் என்பது பழமொழி. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிப்பும், அதனால் பெறுகின்ற அறிவும் மற்றும் போதாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தகுந்த நேரத்தில் சாப்பிடுதல், சத்தான உணவை உட்கொண்டு, 'ஜங்க்' உணவு வகைகளை ஒதுக்குதல் நல்லது. முடிந்த வரை ஒரு வேளை உணவாவது குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும். வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும். வாரக் கடைசியில், பெற்றோர்கள் தன் மக்களுடன் சைக்கிளில் செல்வது, நீச்சல் வகுப்புகள் ஆகியவை மக்கள் பெற்றோர் இடையே இணைப்பை அதிகரிக்கும்.
3. மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை : உணர்ச்சிகளை உள்ளத்தில் பூட்டி வைக்காமல், அதை வெளிப்படுத்துவது எப்படி என்று சொல்லித் தர வேண்டும். இதனால், குழந்தைகளின் மன அழுத்தம் குறையும்.
4. கோபத்தைக் கட்டுப்படுத்துதல் : குடும்பம் என்றால் பிணக்குகள், கோபம் எல்லாம் ஏற்படுவது சகஜம். ஆனால், கோபத்தை வெளிப்படுத்துவது எப்படி? கோபத்தில் பெற்றோர் சத்தமாக சண்டை போட்டு விவாதிப்பது, குழந்தைகளை பாதிக்கும். பெற்றோர் குழந்தைகளுக்குச் செய்யும் பெரிய உதவி, அவன் எதிரில் ஒருவர்கொருவர் சண்டை போடாமலிருப்பது. தவறு செய்த குழந்தையை சத்தம் போட்டுத் திட்டாமல், அவனுக்குப் புரியும் விதத்தில் அவன் செய்த தவறை விளக்கிச் சொல்ல வேண்டும்.
5. சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுதல் : எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லலாம். ஆனால், நாம் நினைப்பது போலவே எல்லாம் நடந்தேறுமா? எதிர்பார்த்தது போல நடக்கவில்லை என்றால், அதனை எதிர்க்கொள்வது எப்படி என்பதை மக்களுக்கு கற்றுத்தர வேண்டும். வாழ்வில் உயர்வும் தாழ்வும் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று.
6. தோல்வியின் போது அரணாக நிற்பது: இன்றைய உலகம் போட்டிகள் நிரம்பியது, ஆகவே, குழந்தைகள் பள்ளியில் படிப்பதைத் தவிரவும், மேற்கொண்டு கற்றுக்கொள்ள நேரிடுகிறது. இதனால், சிலவற்றில் தோல்விகள் ஏற்படலாம். செய்த தவறு என்ன, தோல்வியின் காரணம் என்ன என்று தெரிந்து குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர் கோபம் அல்லது தங்கள் வருத்தத்தைக் காட்டிக் கொள்ளக் கூடாது.
7. உறவிற்கான மரியாதை : ஒரு குழந்தை மற்றவர்களுடன் நடந்து கொள்ளும் முறை, பெற்றோர்கள் நடந்து கொள்ளும் முறையை ஒட்டி இருக்கும். கணவன், மனைவி ஒருவர்கொருவர் நடத்தும் முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் முன்னால் உங்கள் பெற்றோர் மற்றும் வீட்டில் வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் நடத்தினால், அந்த பழக்கம் குழந்தைக்கும் ஏற்படும்.
8. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் : இந்த காலத்தின் இன்றியமையாத தேவை எடுத்துரைக்கும் திறன். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக, நிதானமாகச் சொல்வது எப்படி என்று கற்றுக் கொடுக்க வேண்டும். அதிக வார்த்தைகள் இல்லாமல், குறைந்த வார்த்தைகளில் சொல்ல நினைப்பதை எடுத்துரைக்கும் வித்தையை கற்றுத் தர வேண்டும்.
9. மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிடுதல் : இது பெரும்பாலான பெற்றோர்கள் செய்கின்ற தவறு. ஒரு போதும், உங்கள் குழந்தையை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். “அவனால் முடியும் போது, உன்னால் முடியாதா?” போன்ற கேள்விகளைத் தவிறுங்கள்.
இவற்றைத் தவிர, குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்த, முடிந்த வரை பெற்றோர்கள் ஒரே குடும்பமாக சில மணி நேரங்களாவது செலவிட வேண்டும்.