.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
முதுமையில் மகிழ்ச்சியாக வாழ்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் தன்னிறைவாக, திருப்தியாக வாழ முடியும். அதற்கு தவிர்க்க வேண்டிய ஒன்பது பழக்க வழக்கங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உடல் ஆரோக்கியம்: வயதான காலத்தில் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உட்கார்ந்துகொண்டே இருக்கும் வழக்கத்தை தவிர்த்து, ரெகுலரான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் சீரான உணவு மூலம் ஆரோக்கியத்தை பேணி, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
2. சமூக தனிமைப்படுத்தல்: குடும்பம், நண்பர்கள், உறவுகள் மற்றும் சமூகத்துடன் நல்ல உறவை பேணுதல் வேண்டும். இவர்களைத் தவிர்த்து, அவர்களிடமிருந்து விலகி இருப்பது மனதிற்கும் உடல் நலனுக்கும் கேடாய் முடியும்.
3. கடந்த கால கசப்புகள்: நிறைய முதியவர்கள் கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை மீண்டும் மீண்டும் தமக்குள்ளேயே அசைபோட்டு பார்த்து தங்களை வருத்திக் கொள்வார்கள். இந்த மாதிரி வெறுப்புணர்வை மனிதர்கள் மீது வளர்த்துக் கொள்வது, அவர்களது மனதிற்கு சுமையாக இருக்கும். அவற்றை அப்படியே தவிர்த்து விட்டு நிகழ்கால சந்தோஷங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
4. எதிர்மறைச் சிந்தனை: தன் மீதும் பிறர் மீதும் அவநம்பிக்கை மற்றும் எதிர்மறை சிந்தனையை அறவே தவிர்க்க வேண்டும். நன்றியறிதலை பழகவும், செயல்படுத்தவும் வேண்டும். வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். மனிதர்கள் அற்புதமானவர்கள் என்கிற கருத்தை மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.
5. மோசமான தூக்கம்: உடலுக்கு நல்ல ஓய்வு அவசியம். எனவே, தூக்கத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. முதுமையிலும் அதிகமான உழைப்பைத் தவிர்ப்பது அவசியம். அளவான உழைப்பு, நல்ல ஓய்வு என்று வாழ்க்கையை நடத்த வேண்டும்.
6. மாற்றங்களை எதிர்த்தல்: வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப மாற்றங்களை வரவேற்க வேண்டும். வளைந்து கொடுக்காமல் இருந்தால் அது மனதிற்கு துன்பத்தையும் கசப்பையும் மட்டுமே தரும். புதிய அனுபவங்கள் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில், பிறர் கூறும் நல்ல யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
7. மோசமான நிதி திட்டமிடல்: வயதான காலத்தில் போதுமான நிதி மிகவும் அவசியம். தங்களிடம் நிலையான, நன்கு நிர்வகிக்கப்பட்ட நிதி நிலைமையை பராமரிப்பது அவசியம். பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தாலும் தனது கடைசி காலம் வரை தன்வசம் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை இருப்பது நல்லது.
8. இறுக்கமாக இருப்பது: முதுமையிலும் குழந்தையைப் போன்று இனிய மனதை பெற வேண்டும். எப்போதும் இறுக்கமாக உம்மென்று இருப்பதும், பிறரிடம் நெகிழ்வுத்தன்மையை காட்டாமல் இருப்பதும் தனிமையில் தள்ளிவிடும். எனவே, அவற்றைத் தவிர்த்து, திறந்த மனதுடன் மனிதர்களை அணுக வேண்டும். அவர்களை குறைகளோடு ஏற்றுக்கொண்டு மனதை லேசாக வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
9. பிறருடன் தன்னை ஒப்பிடுதல்: இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எந்தக் காரணத்துக்காகவும் தன்னை பிறருடன் ஒப்புமைப்படுத்தி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களது உடல், உள்ளம் எல்லாமே உங்களிடமிருந்து வேறுபட்டவை. எனவே, ஒப்பீடு எப்போதும் வேண்டாம். சொந்த நலனில் கவனம் செலுத்துவது சுயமரியாதையையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
தேவையில்லாத பழக்க வழக்கங்களைத் தவிர்த்து இணக்கமாக இருந்தால் வாழ்க்கையின் மீது பிடிப்பு அதிகமாகி முதுமையிலும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.