தூக்கம் என்பது உலக உயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஒரு மனிதனால் சாப்பிடாமல் கூட சில நாட்கள் இருக்க முடியும். ஆனால், தூங்காமல் நிச்சயம் இருக்க முடியாது. சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது ஆழ்ந்து தூங்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இன்றைய நவீன கால மாறுபாடுகளால் தொடரும் தூக்கமின்மை பிரச்னை அவர்களுக்கு உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் பல பாதிப்புகளை உண்டாக்குகிறது.
அதேசமயம் நிர்ணயித்த நேரத்தை விட அதிக நேரம் ஒருவர் தூங்குவதும் ஆபத்தானது என்கிறது மருத்துவம். உடல் ஓய்வின்றி இயங்கும்போது தேவையான நேரம் உறங்கி ஓய்வெடுக்கச் சொல்லும். இது இயற்கை. அதுபோன்ற நேரங்களில் நீண்ட தூக்கம் பாதிப்பு தராது. ஆனால், சிலர் எப்போதும் நேரம் காலமின்றி தூங்குவார்கள். அதுதான் தவறு.
ஒருவர் நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். சீரற்ற தூக்கத்தால் உடல் இயக்கத்தின் அளவு குறையும் காரணத்தால் உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பினால் எடை அதிகரித்து உடல் பருமனாகும் வாய்ப்பு அதிகம்.
நீண்ட நேரம் உடல் அசைவின்றி இருப்பதால் உடல் தசைகள் வலுவிழந்து உள் உறுப்புகளின் சீரான செயல்பாட்டில் தேக்கம் ஏற்படும். இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும், இயக்கமின்றி இருப்பதால் மனச்சோர்வுடன் உடலிலும் சோம்பல் உணர்வு அதிகரிக்கும். இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் களைப்பு தரும்.
தூக்கத்தை சீர்படுத்தும் செரோடோனின் ஒரு இயற்கையான மனநிலை சமநிலைப்படுத்தியாகும். இது செரிமானம் மற்றும் தூக்கத்துக்கு உதவும் இரசாயனமாகும். அதிக தூக்கத்தால் இந்த செரோடோனின் அளவு குறையும் அபாயமுண்டு. அதன் காரணமாக அதீத தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவை ஏற்படும். மேலும், சிந்தனை திறனைக் குறைத்து எதற்கும் தீர்வு காண இயலாத குழப்பமான எதிர்மறையான மனநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
குறிப்பாக, அதிக நேரம் தூங்கும்போது மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல்பாடு குறையத் துவங்கி, நாளடைவில் நினைவாற்றல் இழப்பும் ஏற்படக்கூடும். மறதி காரணமான மன அழுத்தத்தை வரவைக்கும். ஒரே அமைப்பில் உறங்கும்போது முதுகு வலி, கழுத்து வலி போன்ற உபாதைகள் எழும். இப்படி வாழ்வியல் சார்ந்த பல பாதிப்புகளை நீண்ட நேர தூக்கம் தருகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவர்களாக இருந்தாலும், நீண்ட நேர தூக்கம் என்பது உங்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆகவே, சோம்பல் தரும் நீண்டநேர தூக்கத்தைப் பழக்கப்படுத்தாமல், முறையான நேரத்தில் தூங்கி எழுவதற்குப் பழகுவோமானால் ஆரோக்கியத்துடன் வாழ்விலும் முன்னேற்றம் காணலாம்.