

சிறு வயது குழந்தைகள் தூங்கியெழுந்து படுக்கையறையை விட்டு வெளிவரும் முன்பே, அந்த நாளில் செய்யவேண்டிய உணர்வுபூர்வமான அனைத்து செயல்களும் அதன் ஆழ்மனதில் உருவாக்கப்பட்டு விடுகின்றன. கண்டிப்பு மிக்க பெற்றோரை விட, தங்களுடன் நெருங்கிய தொடர்பை உண்டாக்கிக்கொள்ளும் பெற்றோரே அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றனர். மகிழ்ச்சியான குழந்தைகளின் மூளை சிறப்பான வளர்ச்சி காணும். இதற்கு காலை நேரங்களில் பெற்றோர் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
1. உங்கள் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுதல்: குழந்தை எழுவதற்கு முன்பு நீங்கள், ஒரு நிமிட மெடிடேஷன் செய்து அல்லது அமைதியாக அமர்ந்து அரை கப் காபியை உறிஞ்சிக் குடித்துவிட்டு, நிதானமாக குழந்தையை அள்ளி அணைக்கும்போது, உங்களின் அமைதியுற்ற நரம்புகளின் வழியே குழந்தையின் உணர்வுகள் சமநிலைத்தன்மை பெற்று, அந்த நாளை எதிர்கொள்ளத் தயாராகிவிடும்.
2. கேள்வி கேட்கும்போது உடல் மொழியால் நெருக்கம் காட்டுதல்: ‘பிரஷ் பண்ணிட்டியா?’, ‘புத்தகப் பை ரெடியா?’ போன்ற கேள்விகளைக் குழந்தையிடம் கேட்கும்போது, கண்டிப்புக் காட்டாமல், அதன் கையைப் பற்றி, புன்னகையுடன் கண்களைப் பார்த்துக் கேட்பது ‘இந்தப் பரபரப்பான சூழலை விட, எனக்கு நீதான் முக்கியம்’ என்ற செய்தியை அதன் மனதிற்குள் மென்மையாக செலுத்த உதவும். உணர்வுபூர்வமான இச்சிறிய செயல், குழந்தையை அமைதியுடன், அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல் புரியத் தூண்டும்.
3. அமைதியுடன் காலை உணவருந்துதல்: பிரேக்ஃபாஸ்ட் நேரம் மெல்லியதொரு ம்யூசிக் போட்டுவிட்டு, குழந்தையின் அருகில் அமர்வது அல்லது அது சாப்பிட்டு முடிக்கும் வரை பொறுமையுடன் வேறு ஏதாவது வீட்டு வேலையில் கவனம் செலுத்திவிட்டுப் பின் வெளியே கிளம்புவது நல்லது. பரபரப்பான சூழலிலும் அமைதி காக்க முடியும் என்பதை குழந்தைக்கு உணர்த்த உதவும் செயல் இது.
4. தவறுகளை பெரிதுபடுத்தாதிருத்தல்: காலை நேர பரபரப்பில் குழந்தை சாக்ஸை கால் மாற்றிப் போட்டுவிட்டால் அதற்காகக் கடிந்து கொள்ளாமல் நகைச்சுவையான குரலில் அதை சரி செய்ய உதவுங்கள். அப்போது தவறுகள் தனது பாதுகாப்பான உணர்வுகளில் பாதிப்பை உண்டாக்காது என்ற நம்பிக்கை குழந்தைக்கு உண்டாகும்.
5. குழந்தையின் உணர்வுகளைத் தெரிந்துகொள்வது: அவ்வப்போது குழந்தையிடம், ‘ஆர் யூ ஓகே’ (Are you Ok) என்று கேட்பது அல்லது ‘இன்று எப்படி உணர்கிறாய்?’ (How are you feeling today) எனக் கேட்பதும், குழந்தை தன்னை வாழ்நாள் முழுவதுக்கும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் முன்னேற்பாடாக அமையும்.
6. அவ்வப்போது குழந்தையிடம் நெருக்கம் காட்டுதல்: காலை நேரம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது குழந்தையை கட்டியணைப்பது, நெற்றியில் முத்தமிடுதல் போன்ற செயல்களைச் செய்வது அவசியம். இதனால் குழந்தையின் மூளைக்குள் ஆக்சிடோசின் (oxytocin) என்ற ஹார்மோன் உற்பத்தியாகி அதன் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கச் செய்யும்.
7. டிவி மற்றும் போன் உபயோகமற்ற காலைப்பொழுது: காலையில் எழுந்த பின் ஒரு அரை மணி நேரமாவது டிவி அல்லது போன் பார்க்காமல் இருப்பது பெற்றோர் - குழந்தையிடையே ஆரோக்கியமான உரையாடல் நிகழ வழி வகுக்கும்.
8. குழந்தையின் மெதுவான செயல்பாட்டை மதித்தல்: பொதுவாக, உடற்கூறின் இயல்புப்படி பெரியவர்களை விட, குழந்தையின் செயல் திறன் குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி நீங்கள் ஒத்திசைந்து போவது அவர்களின் நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்த உதவும்.
9. பிரியும்போது நிதானம் காட்டி குட்-பை சொல்லுதல்: பள்ளிக்கு அனுப்பி பிரியும்போது கடமைக்குக் கையசைத்துவிட்டு சென்று விடாமல், ‘இரவில் உனது ப்ராஜெக்ட் ஒர்க்கைப் பார்க்கலாம்’ என்றோ அல்லது, ‘நீ வரும்போது உனக்குப் பிடித்தமான லட்டு செய்து வைக்கிறேன்’ என்றோ கூறிப் பிரிவது உறவுப் பாலம் வலுவாய் நிற்க உதவும்.
மேற்கூறியவற்றில் ஒன்றிரண்டு பழக்கங்களை பின்பற்றுவது கூட குழந்தையின் மூளை சிறப்பாக வளர்ச்சியடைய உதவும்.