

நாம் அனைவரும் வசித்து வரும் வீடுகளுக்கு அரசாங்கம் ஒரு நம்பரை ஒதுக்கீடு செய்து வழங்கியிருக்கிறது. நம் முன்னோர்கள் வகுத்துள்ள எண் கணித சாஸ்திரத்தில் ஒவ்வொரு நம்பருக்குள்ளும் அடங்கியுள்ள பலன்கள் என்னென்ன என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நம் வீட்டிற்குத் தரப்பட்டுள்ள எண்ணின் அடிப்படையிலேயே வீடு மற்றும் வீட்டில் வசிப்பவர்களின் முன்னேற்றம், செழிப்பு போன்றவை அமையும் எனக் கூறப்படுகிறது. எந்தெந்த எண்ணுள்ள வீட்டுக்குள் என்னென்ன பலன்கள் அடங்கியுள்ளது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
நம்பர் 1: ஒண்ணாம் நம்பரைக் கொண்ட வீடு, புதிதாக நம் படைப்புத் திறனை வெளிப்படுத்தவும், சுதந்திரமாக செயல்படவும், சுய அதிகாரம் பெற்றுத் திகழவும் உதவக் கூடியது. சுயமாக ஒரு தொழில் தொடங்கி தொழிலதிபராக வேண்டுமென நினைப்பவர்களுக்கு இந்த வீடு ஒரு சிறந்த இடம். ஆனால், தன்னுடன் ஒரு பார்ட்னரை சேர்த்துக்கொள்ள விரும்பினால் தொழில் சிறக்காது எனவும், சுய ஈடுபாடு ஒன்றே முன்னேற்றத்திற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.
நம்பர் 2: இரண்டாம் நம்பர் வீட்டில் உள்ளவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாக வாய்ப்பே இல்லை. இந்த வீட்டிலிருந்து கிடைக்கும் சக்தியானது உடன் உழைப்பவர்கள் மற்றும் உறவினர்களுடன் சம நிலைத்தன்மையுடன் கூடிய வசதி வாய்ப்புகள் பெற்று சந்தோஷமாக வாழ உதவி புரியும்.
நம்பர் 3: மூன்றாம் நம்பர் வீட்டில் வசிக்கும் நபர் சமூக உறவுகளுடன் வெளிப்படைத் தன்மையுடன் தொடர்பில் இருக்க விருப்பம் உள்ளவராக இருப்பார். கலைத் திறமை கொண்டு அது சம்பந்தப்பட்ட வேலை செய்பவராகவும் இருப்பார். வீட்டில் அடிக்கடி கெட் டு கெதர், பார்ட்டி என கொண்டாடும் விசித்திரமான குணம் கொண்டு, முதிர்ச்சியடையாத மனநிலை கொண்டிருப்பார் இவர். இந்த வீட்டிலிருக்கும் அதிகளவு சக்திக்கு ஈடுகொடுக்க முடியாமல், இவர் தனித்து விடப்படவும் வாய்ப்பு உருவாகும்.
நம்பர் 4: நான்காம் நம்பர் வீட்டில் வசிப்பவர், பொறுப்புணர்வோடு, கடினமாக உழைத்து, தனது வாழ்க்கை நிலையான தன்மை கொண்டு சிறப்புடன் அமைவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொள்வார். சில நேரங்களில் மாறுதல் இல்லாத ஒரே மாதிரியான வாழ்க்கை அலுப்பைத் தரக்கூடும். கூடுதல் சக்தி பெற ஃபெங் ஷுய் சாஸ்திரம் பரிந்துரைக்கும் இன்டோர் பிளான்ட்களை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது நலம் தரும்.
நம்பர் 5: எதிர்பாராத மாற்றங்களை உண்டுபண்ணக் கூடியது ஐந்தாம் நம்பர் வீடு. அது பயணமாகவோ அல்லது வீர தீர செயல்களில் ஈடுபடுவதற்கானதாகவோ அமையலாம். நிலையான அதிர்வலைகளுடன் அதிகளவு இதமான சூழலை விரும்புபவர்களுக்கு ஒத்துவராதது ஐந்தாம் நம்பர் வீடு. புதுமை விரும்பிகள், சுதந்திரமாக சுற்றித் திரிய ஆவலுடையவர்கள் மற்றும் ஆபத்தை எதிர்கொள்ள அஞ்சாத மனோபாவம் கொண்டவர்கள் இந்த ஐந்தாம் நம்பர் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
நம்பர் 6: ஆறாம் நம்பர் வீடு குடும்பமாக வாழ ஏற்றது. இங்கு குடியிருக்கும் தனி மனிதருக்கு திருமணம் ஆகவும், தம்பதியராய் வாழ்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவும் உதவும் வீடு இது. உறவை மேம்படுத்தவும் அன்பை விதைக்கவும் செய்யும். அளவுக்கு அதிகமான பொறுப்புணர்வும் கடமை உணர்வும் கொண்டிருப்பவர்கள், சக்தியை இழந்து விடாமல், சுய ஆரோக்கியம் காக்கவும் நேரம் ஒதுக்குவது நல்லது.
நம்பர் 7: சமூக ஆர்வலர்களுக்கு உகந்ததல்ல இந்த வீடு. ஆன்மிக வளர்ச்சி, அறிவுத் தேடல், அழுத்தமில்லாத அமைதி கொண்ட மனம் போன்றவற்றில் நாட்டம் கொண்டவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வாழ ஏற்றது இந்த ஏழாம் நம்பருடைய வீடு.
நம்பர் 8: எட்டாம் நம்பருடைய வீட்டில் வசிப்போரிடம் பணப் புழக்கம் மற்றும் அதிகார பலம் ஓங்கி நிற்கும். வாழ்வில் வளமும் வளர்ச்சியும் தரக்கூடிய இல்லம் இது. இங்குள்ள ஒரே குறை உழைப்பதையும் சம்பாதிப்பதையும் எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் திண்டாடுவது மட்டுமே.
நம்பர் 9: அனைத்துத் தரப்பினரையும் வரவேற்று, அரவணைத்து மனிதாபிமானமும் இரக்க குணமுடையவராகவும் வாழ உதவுவது இந்த ஒன்பதாம் நம்பர் வீடு. இங்கு வாழ்பவர் சுயநலமில்லாதவராகவும், மன்னிக்கும் குணமும், விட்டுக்கொடுக்கும் சுபாவமும், பிராணிகளிடம் அன்பு செலுத்தும் குணமும் கொண்டவராக இருப்பார்.
உங்கள் வீட்டின் எண் ஒரு இலக்கத்திற்கு (digit) அதிகமான இலக்கங்களைக் கொண்டிருந்தால், ஒவ்வொரு இலக்கத்தையும் கூட்டி சிங்கிள் டிஜிட் ஆக்கி (45 என்ற எண்ணை 4+5=9) அந்த எண்ணுக்குரிய பலனை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.