
திருமணம், பிறந்தநாள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு நமக்கு தெரிந்தவர்களுக்கு பரிசு வாங்கிக் கொடுக்கும் பழக்கம் நமக்கு இருக்கும். ஆனால், அவ்வாறு பிறருக்கு பரிசு வாங்கிக் கொடுப்பதிலும் சில வரைமுறைகள் இருக்கின்றன. சில குறிப்பிட்ட பொருட்களை நாம் பிறருக்கு பரிசாகக் கொடுப்பது நம்முடைய செல்வ வளத்தை பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. விநாயகர், மகாலக்ஷ்மி ஆகிய தெய்வங்களின் சிலையை பரிசளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தனவரவை தரக்கூடிய கடவுள்களாக இருப்பதால், இந்த சிலைகளை பரிசாக வழங்கும்போது நம்மிடம் செல்வம் தடைப்படும் என்று சொல்லப்படுகிறது.
2. பட்டு துணிகளை மற்றவர்களுக்கு பரிசளிக்கும் போது மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். இதுவே, கருப்பு நிறத் துணிகளை மற்றவர்களுக்கு பரிசளித்தால் சனி தோஷம் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
3. உப்பு, எண்ணெய் போன்றவற்றை புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு தாய் பரிசாக கொடுக்கக்கூடாது. ஏதாவது ஒரு சிறு தொகையை வாங்கிக்கொண்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இல்லையேல் மகாலக்ஷ்மியின் அருள் தடைப்படும் என்பது நம்பிக்கையாகும்.
4. சில்வர் பாத்திரங்களை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கக்கூடாது. சில்வர் பொருட்கள் சனியின் ஆதிக்கம் நிறைந்தது என்று சொல்லப்படுவதால், அதை மற்றவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
5. நமக்கு மிகவும் பிடித்தவர்களுக்கு கர்சீப்பை அன்பளிப்பாக வழங்கக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்களுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
6. ஒற்றையாக இருக்கும் யானை பொம்மையை பரிசாக வழங்கக்கூடாது. இரண்டு யானை பொம்மைகளாக வாங்கிக் கொடுக்கலாம்.
7. பெரும்பாலான நபர்கள் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிக்கு கடிகாரத்தையே அதிகமாக பரிசாக வழங்குவார்கள். ஆனால், கடிகாரத்தை அன்பளிப்பாக வழங்கினால் அது நம்முடைய செல்வ வளம், ஆயுள் ஆகியவற்றை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
8. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை பரிசளிக்கக்கூடாது. இது தருபவர் மற்றும் பெறுபவர் இருவருக்குமே தீங்கு விளைவிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
9. மீன் தொட்டி, நீர்தொட்டி போன்ற நீர் சார்ந்த பொருட்களை பரிசாக வழங்கினால், அது பரிசு வாங்கும் நபருடைய அதிர்ஷ்டத்தை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இனி, பரிசு வாங்கிக் கொடுக்கும் போது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.