
நம் வீட்டில் உள்ள பூஜையறையை நாம் அழகாக பராமரித்துப் பார்த்துக் கொள்கிறோம். பூஜையறையில் உள்ள தெய்வங்களுக்கு என்ன படைக்க வேண்டும், எதுப்போன்றை பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும், எந்த பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கலாம். அதைப்பற்றி தெளிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
பூஜையறையில் உள்ள தெய்வங்களுக்கு வெற்றிலை, வாழைப்பழம் வைத்துப் படைக்கும் போது வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு வைத்து வழிப்படும் போது வெற்றிலையில் சுண்ணாம்பு இருக்கக்கூடாது.
அவல், பொரி, கடலை மற்றும் கல்கண்டு ஆகியவற்றை நைவேத்தியமாக பூஜையறையில் உள்ள கடவுள்களுக்கு படைக்கலாம்.
பச்சரிசியில் சாதம் செய்து தான் படைக்க வேண்டும்.
பழங்களில் நாகப்பழம், மாதுளை, கொய்யா, நெல்லி, இலந்தை, விலாம்பழம், புளியம்பழம், மாம்பழம் ஆகிய பழங்கள் பூஜைக்கு ஏற்றவையாகும். வாழைப்பழத்தில் நாட்டு வாழையை பயன்படுத்துவது சிறப்பாகும்.
தேங்காயை கடவுளுக்கு உடைக்கும் போது குடுமி தேங்காயை சீராக உடைத்து அதன் பிறகு தான் தேங்காயில் உள்ள குடுமியை பிரிக்க வேண்டும். தேங்காய் உடைக்கும் போது அழுகியிருந்தால், அதை மாற்றி வேறு தேங்காயை உடைக்க வேண்டும். தேங்காயில் கோணலான, வழுக்கையான தேங்காயை பயன்படுத்த வேண்டாம்.
பூஜையறையில் விளக்கு வைக்கும் போது மரப்பலகை அல்லது பித்தளை தட்டில் விளக்கு வைப்பது நல்லது. பஞ்சகவ்ய விளக்கு, வெள்ளி விளக்கு ஆகிய விளக்குகளை வெள்ளிக்கிழமையில் ஏற்றினால், லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். செம்பு, பித்தளை, வெள்ளி, மண், பஞ்சாலோக பாத்திரங்களை பூஜைக்கு பயன்படுத்துவது சிறந்தது.
கடவுள் வழிப்பாட்டிற்கு முன்பாக சாம்பிராணி புகைப்போடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சாம்பிராணியில் இருந்து வரும் நறுமணம் கெட்ட அதிர்வுகளை விரட்டும் ஆற்றலைக் கொண்டது.
பூஜையறையில் கோலமிட்டு விக்ரகங்களை சரியாக வைத்து விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி அர்ச்சனை செய்து அதன் பிறகு தான் கடவுள்களுக்கு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.
பூஜையறையை சுத்தமாக பராமரித்து இவற்றையெல்லாம் சரியாக செய்து வழிப்பட்டால், அனைத்து தெய்வங்களின் முழு அருளும், ஆசியும் நமக்கு கிட்டி செல்வ செழிப்போடு வாழலாம்.