வெற்றி, தன்னம்பிக்கையை மேம்படுத்தும் 9 விஷயங்கள்!

9 things that boost success and confidence
9 things that boost success and confidencehttps://www.profit.co
Published on

பாராட்டு என்பது ஒரு மனிதனின் சிறப்பான செயல்பாடுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம். சரியான நபருக்கு சரியான விதத்தில் சென்று சேரும் பாராட்டுக்கள் அவரை மேலும் சிறப்பாக செயல்பட உதவும். நமது பிள்ளைகளை அவர்களது சரியான பழக்க வழக்கங்களுக்காக புகழ்வது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். வெற்றி யாளர்களாக மாற்றும். அவை என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. முயற்சிகளுக்கான பாராட்டுகள்: ஒரு குழந்தையை அதனுடைய திறமை மற்றும் புத்திசாலித்தனத்திற்காக பாராட்டுவது சிறப்பான பலனைத் தராது. ஆனால், அவர்கள் ஏதோ ஒன்றை அடைவதற்கான முயற்சியில் இறங்கும்போது அந்த முயற்சியை பாராட்ட வேண்டும். முயற்சி என்பது கடின உழைப்பு பொறுமை மற்றும் திட மனப்பான்மையை குறிக்கிறது. எனவே, இந்த மூன்று குணங்களும் முயற்சியின் மூலம் பிள்ளைகளுக்குக் கிடைக்கும்.

2. அன்பான செயல்பாடுகள்: புத்திசாலித்தனத்தை போலவே கருணையும் அன்பும் மதிப்பு மிக்கது பிள்ளைகள் யாருக்கேனும் மனமுவந்து உதவிகள் செய்யும்போது அவர்களது கருணையும் அன்பும் வெளிப்படுகிறது. 'அந்த வயதான மனிதனுக்கு உதவிய உன்னுடைய கருணை மனத்தை நான் பாராட்டுகிறேன்' என்று சொல்லி அவர்களை ஊக்குவிக்கலாம்.

3. ஆர்வம்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருசமயம், 'என்னிடம் எந்த சிறப்பான திறமைகளும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம் தீவிரமான ஆர்வம் மட்டுமே' என்றார். ஆர்வம் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் கண்டுபிடிக்கவும் உதவும் எரிபொருள். ஒரு குழந்தைக்கு சிறு வயதில் இருந்தே இருக்க வேண்டிய குணம் அது. ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ள குழந்தைகள் ஆர்வம் காட்டும்போது அது சம்பந்தமான கேள்விகள் கேட்கும்போது, 'நீ இத்தனை கேள்விகள் கேட்பது எனக்கு பிடித்திருக்கிறது' என்று அவர்களை புகழலாம். ஆர்வம் என்பது ஒரு நல்ல விஷயம். அதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிந்து கொள்வார்கள். இது அவர்களுக்கு உந்து சக்தியாக அமைந்து நிறைய கேள்விகளுக்கு விடை தேடுவார்கள்.

4. தோல்வியிலிருந்து மீண்டு எழுதல்: வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. எத்தனை முறை விழுந்தாலும் நாம் எழுகிறோமா என்பதுதான் முக்கியம். இந்தப் பாடத்தை குழந்தைகள் அவசியம் கற்க வேண்டும். தோல்வியில் இருந்து மீண்டு எழுந்து மறுபடியும் செயல்பட வேண்டும். ஒரு குழந்தை தன்னுடைய முயற்சியில் தோற்று மீண்டு எழுந்து, மறுபடி அந்த காரியத்தை தொடரும்போது மனதார பாராட்ட வேண்டும். 'உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. கடினமாக இருந்தபோதும் உன் முயற்சியை கைவிடாத குணம் மிகச் சிறப்பு' என்று புகழ வேண்டும். தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. பல சவால்களை சமாளிக்க அது உதவும் என்று அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

5. நேர்மை: நேர்மை என்ற உயர்ந்த குணத்தை பிள்ளைகளுக்கு போதிப்பது மிகவும் அவசியம். அவர்கள் நேர்மையாக செயல்படும்போது அதை புகழ்ந்து பாராட்ட வேண்டும். தவறு செய்திருந்தபோதும் அதை நேர்மையாக அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களைப் பாராட்ட வேண்டும். அது எதிர்காலத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற ஒரு பாடத்தை அவர்களுக்குக் கற்றுத் தருகிறது.

6. அனுதாபம்: ‘எம்பத்தி’ எனப்படும் பிறர் மேல் அனுதாபம் காட்டும் குணத்தை பிள்ளைகள் வளர்த்துக் கொண்டால் அதற்காக அவர்களை மனமார புகழ்ந்து பாராட்ட வேண்டும். இந்த அனுதாப குணம் பிறரை நன்றாகப் புரிந்து கொள்ளவும் அவர்கள் மேல் அன்பு செலுத்தவும் உதவும் என பிள்ளைகள் தெரிந்து கொள்வார்கள்.

7. சாராதிருக்கும் தன்மை: தானே ஒரு விஷயத்தை செய்ய பிள்ளைகள் முன்வரும்போது அவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு பத்து வயதுக் குழந்தை தானே தன்னுடைய காலை உணவை தயாரித்துக்கொள்ள முன்வரும்போது அதற்கு அனுமதி தருவது மட்டுமல்லாமல் மனதாரப் பாராட்டவும் வேண்டும். அது குழந்தையின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது. பிறரை சாராமல் தானே தனது செயல்களை செய்துகொள்ள உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் ஏற்ற உணவாகும் இனிப்பு துளசி!
9 things that boost success and confidence

8. பொறுமை: தொழில்நுட்பம் பல்கிப் பெருகிவிட்ட இந்த அவசர உலகில் பொறுமையை கடைப்பிடிப்பது என்பது ஒரு மிகச் சிறந்த பண்பாகும். குழந்தைகள் பொறுமையாக இருக்கும் தருணங்களில் அவர்களைப் பாராட்ட வேண்டும். வாழ்க்கையில் சில விஷயங்களுக்காக நாம் பொறுமையாக காத்திருப்பது நல்லது என்கிற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாகப் பதியும்.

9. துணிவு: துணிவு என்பது எதற்கும் அஞ்சாமல் இருப்பது மட்டுமல்ல, அஞ்சுகிற சந்தர்ப்பங்கள் வரும்போதும் துணிவுடன் இருப்பது. புதிய விஷயங்களைச் செய்யும்போதும் தாங்கள் நம்புகிற விஷயங்களை துணிவோடு எதிர் கொள்ளும் போதும் அவர்களைப் புகழ வேண்டும். பின்னாளில் பல கடினமான சூழ்நிலைகளில் கூட அவர்கள் துணிவுடன் அவற்றை எதிர்கொள்ள உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com