இந்திய வம்சாவளியினரான சுச்சேதா சர்மா (Sucheta Sharma) என்பவர் துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் சென்டரில் உள்ள எமிரேட்ஸ் ஃபைனான்சியல் டவர்ஸில் ‘போஹோ கஃபே’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ரெஸ்டாரன்டில்தான் 'கோல்ட் கரக்' (Gold Karak) என்ற பெயரில் தங்கத் துகள் தூவிய டீ, அருகில் 24 காரட் தங்க இலையில் வைத்த மஃபினுடன் சேர்த்து தயாரிக்கப்பட்டு ஒரு கப் டீ ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் டீ அல்லது சாய் என்றழைக்கப்படும் பானமானது அனைவராலும் விரும்பி அருந்தப்படும் பானம். இது அனைவரது தினசரி வாழ்விலும், சோசியல் மீட்டிங்களிலும் பிரிக்க முடியாத ஒன்று எனக் கூறினால் அது மிகையாகாது. இந்தியாவில் ஒரு கப் சூடான டீயின் விலை அதிகம் போனால் என்ன விலை இருக்கும்?
மும்பையில் ஹோட்டல் தாஜ் பேலஸில் இதன் விலை ரூபாய் 650லிருந்து 750 வரை இருக்கும். துபாயில் கோல்ட் டீ ரூபாய் ஒரு லட்சத்துக்கு விற்கப்படுகிறது. இதுதான் தற்போது அங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அப்படி அது எந்த வகையில் ஸ்பெஷல் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காணொளிப் பதிவர் (Vlogger) ஒருவர் இந்த உணவகத்தின் உள்ளே சென்று பேசு பொருளாகியுள்ள இந்த கோல்ட் டீ உள்ளடங்கிய ஹோம் டூர் ஒன்றை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அது இப்போது வைரலாகியுள்ளது. ஒரு வெள்ளிக் கோப்பையில், தங்கத் துகள்களை மேற்பரப்பில் தூவி இந்த டீ வழங்கப்படுவதாகவும், அருகில் தங்கத்தாலான ஓர் இலையும், அதன் மீது தங்கத் துகள்களைத் தூவி அலங்கரிக்கப்பட்டுள்ள ஒரு பிறை வடிவ பிரஞ்சு மஃபின் ஒன்றும் வைக்கப்பட்டிருப்பதாக அந்த வீடியோ விளக்குகிறது.
வாடிக்கையாளர் அந்த வெள்ளிக் கோப்பை அல்லது தான் விரும்பிய கட்லெரி ஒன்று தவிர, மற்றுமொரு நினைவுப் பரிசையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘24 காரட் தங்கத் துகள்கள் தூவி வெள்ளிக் கோப்பையில் பரிமாறப்படும், உலகிலேயே ஆடம்பரமான இந்த டீயை, தங்கத் துகள்கள் தாங்கிய மஃபினை ருசித்துக்கொண்டே அனுபவிக்க வாருங்கள் - வெள்ளிக் கோப்பை உங்களுக்கே!’ என்று அங்குள்ள அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகம் இது.
‘கொடுக்கும் பணத்துக்கு கொஞ்சமும் ஈடாகாது, ரிடிக்குலஸ்’, ‘ஒரு aed (Arab Emirates Dirham) விலையுள்ள டீ கூட இதை விட பெட்டெர்’ என்றும் பல விதமாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.