சம்மரில் உங்க காரை பராமரிக்க நச்சுனு சில டிப்ஸ்! 

Car Trip
Tips to maintain your car in summer!Img Credit: Vaya

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பலர் தங்களது காரில் குடும்பத்துடன் வெளியே செல்வது வழக்கம். இது போன்ற பயணங்களில் உங்கள் கார் திடீரென செயலிழப்பதைத் தவிர்க்க மற்றும் அதன் செயல் திறனை அதிகரிக்க நன்கு பராமரிக்கப்பட வேண்டியது அவசியம். வெப்பமான வானிலை உங்கள் வாகனத்தின் இயந்திரம், டயர்கள், ஏர் கண்டிஷனிங் மற்றும் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பாகங்களை பாதிக்கலாம். இந்த பதிவில் கோடை மாதங்களில் உங்கள் காரை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முழுமையாகப் பார்க்கலாம் வாங்க. 

  1. திரவங்களை சரிபார்க்கவும்: கோடைகாலத்தில் திரவங்கள் விரைவில் ஆவி ஆவதால் உங்கள் காரில் உள்ள திரவங்களை சரிபார்த்து டாப் அப் செய்வது அவசியம். எஞ்சின் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில், பவர் ஸ்டியரிங் ஆயில் மற்றும் வின்ஷீல்டு வாஷ் வாட்டர் ஆகியவற்றை சரிபாருங்கள். இது வாகனத்தின் செயல் திறனை அதிகரித்து அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும். 

  2. கூலிங் சிஸ்டத்தை சரிபார்க்கவும்: உங்கள் இயந்திரம் அதிக வெப்பமடைவதைத் தடுக்க கூலிங் சிஸ்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் காரின் கூலிங் சிஸ்டத்தை சரிபார்த்து ரேடியேட்டரில் ஏதேனும் கசிவுகள் அல்லது சேதம் இருக்கிறதா என்பதை சோதிக்கவும். ரேடியேட்டரை சுத்தம் செய்து, அதன் பேன் சரியாக செயல்படுவதை உறுதி செய்யவும். 

  3. டயர் பராமரிப்பு: கோடை காலத்தில் சூடான ரோடு மற்றும் அதிக தூரம் பயணிப்பது டயரின் அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால் டயர்கள் சேதம்டையும் வாய்ப்புள்ளதால், டயரின் அழுத்தத்தை தவறாமல் சரி பார்த்து காற்றை சரியான அளவில் பராமரிக்கவும். கூடுதலாக டயரின் தேய்மானத்தை பரிசோதித்து, மோசமாக இருந்தால் மாற்றுவது நல்லது. 

  4. ஏசி சிஸ்டத்தை சர்வீஸ் செய்யவும்: காரின் உள்ளே கோடை கால வெப்பம் உங்களை தாக்காமல் இருக்க, ஏர் கண்டிஷனிங் அமைப்பு மிகவும் அவசியம். எனவே கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பு ஏசி சிஸ்டத்தை ஆய்வு செய்து, முறையாக சர்வீஸ் செய்யுங்கள். ஏசியின் கூலன்ட் அளவை சரிபார்த்து, ஏர் பில்டர்களையும் சுத்தம் செய்து மாற்றுவதால், ஏசி திடீரென பழுதாவதைத் தடுக்க முடியும். 

  5. காரின் வெளிப்புறத்தை பாதுகாக்கவும்: நேரடி சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்கள் உங்கள் காரின் வெளிப்புற பெயிண்டை சேதப்படுத்தி மங்கச் செய்யலாம். எனவே உங்கள் காரை வழக்கமாகக் கழுவி, சூரிய கதிர்கள் அதிகம் படாத இடத்தில் நிறுத்தவும். குறிப்பாக காரின் பாதுகாப்பு கவரை பயன்படுத்துங்கள். காரின் உள்ளே வெப்பம் ஊடுறுவதைத் தடுக்க கண்ணாடிகளுக்கு uv ப்ரொடெக்ட் பயன்படுத்துங்கள். 

  6. பேட்டரி பராமரிப்பு: வெப்பமான வானிலை உங்கள் காரின் பேட்டரி ஆயுளை குறைக்கும். பேட்டரியின் டெர்மினல்கள் வெள்ளை அல்லது பச்சை நிற படிவுகளால் அரிப்பு ஏற்படுவது தென்பட்டால், உடனடியாக அதை பரிசோதித்து சுத்தம் செய்யவும். பேட்டரி பழையதாக இருந்தால், அல்லது மோசமாக செயல்பட்டால் அதை உடனடியாக மாற்றி விடவும். 

இதையும் படியுங்கள்:
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
Car Trip

இறுதியாக, உங்களது கார் திடீரென பழுதானால் அதை சரி செய்ய உதவும் பொருட்களை இருக்க வேண்டியது அவசியம். ஸ்டெப்னி, ஜாக் ஜம்பர் கேபிள் பிளாஷ் லைட் மற்றும் முதலுதவிப் பெட்டி போன்றவை எப்போதும் வாகனத்தில் இருக்க வேண்டியது அவசியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com