A must-learn lesson for modern parents in Child rearing
A must-learn lesson for modern parents in Child rearinghttps://manithan.com

குழந்தை வளர்ப்பில் நவீன பெற்றோர்கள் அவசியம் கற்க வேண்டிய பாடம்!

சிறுவயது முதலே ஏதாவது வேண்டும் என்று வீட்டில் கேட்டால், உடனே அதை வாங்கிக் கொடுக்க மாட்டார்கள். முதலில் அந்தப் பொருள் தேவைதானா? என்று ஆராய்ந்து பார்ப்பார்கள். கண்டிப்பாகத் தேவையான பொருள்தான் என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகே அதை வாங்கித் தருவதற்கு சில நிபந்தனைகள் போடப்படும். அதை நிறைவேற்றினால்தான் விரும்பிய பொருள் கிடைக்கும்.

எனது சிறுவயதில் பள்ளிக்குச் செல்ல சைக்கிள் ஒன்று வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை என் தந்தையிடம் கூறியபோது, அந்த வருடம் பள்ளித் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றால் வாங்கி தருகிறேன் என்று கூறினார். அதற்காக ஆசைப்பட்டு இரவு பகலாக படித்து அந்த வருடம் பள்ளி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றேன். என் தந்தையும் சொன்னது போல சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். ஆனால், நான் கேட்ட அந்த ‘பிங்க்' நிற சைக்கிள் இல்லை. அவர் நன்றாக உழைக்கும் என்று சொல்லி தேர்வு செய்த சைக்கிளை வாங்கி வைத்திருந்தார். எனக்கு வருத்தமாக இருந்தாலும் வேறு வழியில்லை என்று அதை எடுத்து பயன்டுத்த தொடங்கிவிட்டேன். பிறகு அதைப் பயன்படுத்தியபோதுதான் தெரிந்தது எனது தந்தை வாங்கித் தந்த சைக்கிள் நல்ல அழுத்தமாக இருந்தது. என் தோழிகள் வைத்திருந்த அந்த ‘பிங்க்' நிற சைக்கிள் மிகவும் தக்கையாக இருந்தது.

ஒரு நல்ல குழந்தை பராமரிப்பு எப்படி இருக்க வேண்டுமெனில், தனது குழந்தைக்கு எது தேவை என்பதை வாங்கித் தருவதோடு முடிந்து விடாமல், அதில் தரமானதையும் தேடித் தருவதால், காலத்திற்கும் அது நிலைத்திருக்கும்.

இந்தக் காலத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள். தங்கள் தேவைக்கு அதிகமாகவே பணம் சம்பாதிக்கின்றனர். அதனால் குழந்தைகள் கையில் ஐபேட், ஐபோன் என்று விலை மதிக்க முடியாத பொருட்களைக் கொடுத்து விடுகிறார்கள். நாள் முழுவதும் அந்தக் குழந்தை அதிலேயே மூழ்கிக் கிடக்கிறது. பெற்றோர்களுக்கு குழந்தையுடன் செலவிடுவதற்கு, குழந்தையுடன் உரையாடுவதற்கென்று நேரம் ஏதுமிருப்பதில்லை.

இன்னும் சில குழந்தைகள் பெற்றோர்களை நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். அடம் பிடித்தே எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு. அதற்கும் மசியவில்லை என்றால் உண்ணாவிரதம், தற்கொலை போன்ற பொய் மிரட்டல்களை கூறி தனக்கு தேவையானதை வாங்கிக் கொள்கிறார்கள். பெற்றோர்களும் இதையெல்லாம் சமாளிக்கும் நிலையில் இல்லை. பிரச்னை தீர்ந்தால் போதும் என்று வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், இது அந்தக் குழந்தைக்கு தவறான எண்ணத்தை மனதில் பதித்துவிடும். அடம்பிடித்தால் வேண்டியது கிடைத்து விடும் என்பதை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவது செய்து கொண்டேயிருக்கும்.

அதுமட்டுமில்லாமல், இதிலிருக்கும் இன்னொரு பிரச்னை என்னவென்றால், குழந்தைகள் வீட்டில் இருக்கும் பொருளாதார சூழ்நிலையைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனக்கு அது வேண்டும், இது வேண்டுமென்று விலையை பற்றி கவலையில்லாமல் கேட்டு அடம் பிடிப்பது, அதற்காக பெற்றோர்கள் கடன் வாங்கி அந்தப் பொருளை வாங்கித் தருமளவிற்கு குழந்தைகளின் நச்சரிப்பு இருக்கும். இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கிறது என்பதற்காகவே கடன் வாங்கி அந்தப் பொருளை வாங்கித் தரும் பெற்றோர்களும் உண்டு.

இதையும் படியுங்கள்:
பலரும் விரும்பும் பாப்கார்ன் உடலுக்கு நல்லதா?
A must-learn lesson for modern parents in Child rearing

ஒரு ஷோரூமில் பார்த்தபோது, 2 வயது குழந்தைக்கு அதன் பெற்றோர் பொம்மை கார் வாங்கிக் கொடுத்தார்கள். அந்த காரின் விலை எவ்வளவு என்று விசாரித்தபோது மலைப்பாக இருந்தது. அதனுடைய விலை 25,000 ரூபாய். இந்த வயதில் அந்த குழந்தைக்கு அது என்னவென்று கூட தெரியாது. இருப்பினும் ‘குழந்தையின் ஆசைக்காக செய்கிறோம்’ என்று பெற்றோர்கள் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.

‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்று சொல்வதுண்டு. ஆனால், குழந்தைகளுக்கு தானாக எதுவும் தெரிந்துவிடப் போவதில்லை. பெற்றோர்கள் சொல்வதை கேட்டும், பார்த்துமே அவர்கள் வளர்கிறார்கள். எனவே, அவர்களுக்கு சரியான விஷயங்களை சொல்லிக் கொடுத்து, சரியான திசையில் கொண்டு செல்வது என்பது கண்டிப்பாக பெற்றோரின் கடமையாகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com