பூங்காற்றை பூப்போல அள்ளித் தரும் பூங்கா!

Park
Park
Published on

அமைதிக்கும், மனநிம்மதிக்கும் பாதை அமைத்துக் தரும் பூங்காவிற்கு அடிக்கடி சென்று வந்தால், மனதுக்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஓய்வும் கிடைக்கும். நாம் ஏன் பூங்காவிற்கு செல்ல வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

அதிவேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் உலகில் பூங்காக்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இருப்பினும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற இடமாக பூங்காக்கள் திகழ்கின்றன. பலரும் நடைபயிற்சி மேற்கொள்ளத் தான் பூங்காவிற்கு செல்கின்றனர். உண்மையில் நடைபயிற்சிக்கு மட்டும் தான் பூங்காக்கள் பயன்படுகிறதா? இல்லை, அதையும் தாண்டி நமக்கே தெரியாமல் பல நன்மைகள் பூங்காவிற்குச் செல்வதால் கிடைக்கின்றன.

வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் பூங்காவில் சிறிது நேரத்தைக் கழித்தால், நிச்சயமாக மனதளவில் ஒரு மகிழ்ச்சியை உணர முடியும்.

பூங்காக்களை அதிகம் விரும்புவது சிறுவர்கள் தான். ஏனெனில் பூங்காவில் இருக்கும் சிறு விளையாட்டுத் திடல் மற்றும் ஊஞ்சல் போன்றவை சிறுவர்களைக் கவர்ந்திழுக்கத் தவறாது. ஊஞ்சலைக் கண்டால் யாருக்குத் தான் ஆசை வராது. பூங்காவில் சிறுவர்கள் இல்லாத சமயம் நானும் பூங்காவில் ஊஞ்சலில் விளையாடி இருக்கிறேன்.

பூங்காக்கள் காலை மற்றும் மாலை என இருவேளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறந்திருக்கும்.பொதுவாக பூங்காவிற்கு மாலையில் தான் அதிகம் பேர் வருவார்கள். சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இருக்கும் பூங்காக்கள் மாலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிவதைக் காண முடியும்.

சிலர் என்ன தான் முழுநேரத்தையும் வேலையில் மட்டுமே செலவிட்டாலும், அவர்களின் மன அமைதிக்கு பூங்காக்கள் மிகச் சிறந்த இடமாக இருக்கும்.

இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவில் பலவிதமான மரங்களும், செடிகளும் தலையசைத்து நம்மை வரவேற்கும். பறவைகள் தனது இனிய குரலால் ஒலியெழுப்பி ஆரவாரமாய் மகிழும். ஒருபுறம் சிறுவர்கள் விளையாட, மறுபுறம் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே பூங்காவில் ஒரு நடை போட்டால், மனதிற்கு இதமாக இருக்குமல்லவா!

பூங்காவிற்கு வந்தால் கவலைகள் தீரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், பூங்காவில் இருக்கும் அமைதியான சூழ்நிலை, நம் கவலைகளை மறந்து சிறிது நேரம் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அமைதியான சூழலில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
கோவையில் உருவாகும் வண்ணத்துப்பூச்சி பூங்கா!
Park

இப்போதெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் இடங்களில் சிறிய அளவில் பூங்காக்கள் உருவாக்கப்படுகி. இது மிகவும் நல்ல விஷயம்.

இன்று வாகனங்கள் பெருகி விட்ட நிலையில், நாம் தூய்மையான காற்றை சுவாசிக்கிறோமோ என்பது கேள்விக்குறி தான். ஆனால், பூங்காக்களில் மரங்கள் அதிகமாக இருப்பதால் இங்கு தூய்மையான காற்று நமக்கு கிடைக்கும்.

பூங்காவிற்கு அடிக்கடி செல்பவர்கள் மற்றும் பூங்காவிற்கு அருகில் வசிப்பவர்களின் உடல் ஆரோக்கியம் சீராக மேம்படுகிறது என சமீபத்திய ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

பெற்றோர்களே! நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகளை அடிக்கடி பூங்காவிற்கு அழைத்துச் செல்லுங்கள். தினந்தோறும் பூங்காவிற்கு செல்ல முடியவில்லை என்றாலும், வாரம் ஒருமுறையாவது சென்று வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com