மனச்சோர்வு என்கிற வார்த்தையை தற்போது மிகச் சாதாரணமாக பலரிடத்திலும் கேட்க முடிகிறது. பதின்பருவ சிறுவர், சிறுமியர் முதல் எழுபது வயது பெரியவர்கள் வரை மனச் சோர்விற்கு ஆளாகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதையும் அதற்கான தீர்வு பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
மனச்சோர்வுக்கான காரணங்கள்:
1. பெருகிவிட்ட தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனை இயந்திரங்களுக்கு அடிமையாக்குகிறது.
2 . வாழ்வில் வளர்ச்சி என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது.
3. வளர்ச்சி என்பதை பொருளாதார ரீதியாக மட்டுமே பார்ப்பது மற்றும் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிப்பது.
4. அந்தஸ்தில், தோற்றத்தில், ‘அவரைப் போல இல்லையே, இவரைப் போல இல்லையே’ என்று தம்மை பிறரோடு ஒப்புமைப்படுத்திப் பார்த்து கவலைப்படுவது.
5. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது; அதனால் அவற்றில் எதையும் சரியாக செய்ய முடியாமல் போவது.
6. உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ளாத உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை.
7. உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் பிறரோடு போட்டி போட்டுக்கொண்டு செய்வது.
8. தகுதிக்கு மீறி ஆசைகளை வளர்த்துக் கொள்வது.
9. இயல்புக்கு மீறி பெற்றோர் ஆசைப்படும்வண்ணம் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கப்படும்போது அவர்களும் மனச்சோர்களுக்கு ஆளாகிறார்கள்.
10. அளவுக்கு மீறிய சமூக வலைதளப் பயன்பாடு.
மனச்சோர்விலிருந்து வெளிவர எப்படி பேப்பரும் பேனாவும் உதவும்?
தற்காலத்தில் பெரும்பான்மையான மக்கள் தன்னைப் பற்றிய சிந்தனை, அதாவது உள்முக சிந்தனையை மேற்கொள்வதே இல்லை.
எப்போதும் பிறரைப் பற்றிய கவலைகளோடு இருப்பதால் தன்னிடம் உள்ள நல்ல குணங்களை, நல்ல வாழ்க்கை நன்மைகளைப் பற்றி நினைக்க நேரமே இருப்பதில்லை.
ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு அதில் தனக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களை பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டும். உதாரணமாக,
1. மூன்று வேளையும் கிடைக்கும் உணவு, உடுத்த கௌரவமான உடைகள்,
2. நல்ல பெற்றோர், குடும்பம்,
3. வீடு (சொந்த வீடோ, வாடகை வீடோ),
4. செய்யும் உத்தியோகம் அல்லது வியாபாரம்,
5. கிடைத்திருக்கும் நண்பர்கள், உறவினர்கள்,
எழுதியதற்கு பாஸ் போட்டு விட்டு, வீட்டில் இருக்கும் பொருட்களை ஒரு முறை சுற்றிப் பாருங்கள். அவற்றை ஒரு லிஸ்ட் எடுங்கள். நீங்கள் விலை உயர்ந்ததாக அல்லது மதிப்பு மிக்கதாகக் கருதும் பொருட்களை எல்லாம் மறக்காமல் காகிதத்தில் குறித்துக் கொள்ளவும். அத்தோடு, தினம் தினம் உங்களுக்கு உபயோகமாகும் பொருட்களையும் மறக்காமல் எழுத வேண்டும். ஒரு ஹெல்மெட்டில் ஆரம்பித்து பேனா, செருப்பு, வாக்கிங் ஷு என சகலமும்.
சுவரை அடைத்துக் கொண்டிருக்கும் 55 இன்ச் டிவி அல்லது ஸ்மார்ட் டிவி, செல்போன், ப்ளூ டூத், ஏசி, சமையலறை மின் சாதனங்கள், அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் வண்ண வண்ண உடைகள் என்று பலவும் உங்கள் கண்ணில் படும். பின் எப்போதும் உங்களுடன் அன்பைப் பரிமாறும் கஷ்டத்தில் துணை நிற்கும் உறவினர்கள், நண்பர்கள் பெயர்களை எழுதுங்கள்.
இப்போது உங்களுக்குக் கிடைக்காத, நினைத்தது நடக்காத விஷயங்களை எழுதுங்கள். உதாரணமாக,
1. இழுபறியாக உள்ள பதவி உயர்வு,
2. ரொம்ப நாளாக பைக்கை விற்றுவிட்டு கார் வாங்க நினைப்பது,
3. வாடகை வீட்டுக்குப் பதில் சொந்த வீடு,
4. வெளி மாநிலங்கள், வெளிநாடு டூர் ப்ளான்,
5. பிள்ளைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவது,
6. ஆரோக்கியத்தில் குறைபாடு,
அதேபோல, உங்களை வெறுப்பவர்கள் அல்லது உங்களுக்கு பிடிக்காதவர்கள் பெயர்களை எழுதுங்கள்.
இப்போது காகிதத்தில் எழுதி உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசிக்கவும். வாழ்வில் கிடைத்திருக்கும் நன்மைகள் அதிகமாகவும், எதிர்பார்த்து நடக்காத விஷயங்கள் குறைவாகவும் இருக்கும்.
அன்றாட வாழ்க்கையை நடத்தத் தேவையான அத்தனை விஷயங்களையும் கடவுள் கொடுத்திருக்கிறார். நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்பது புரிய வரும். பதவி உயர்வு கிடைக்கட்டும், அது தள்ளிப்போவதால் எந்த நஷ்டமும் ஏற்படப் போவதில்லை. இப்போதிருக்கும் இந்த வேலைக்கு ஆபத்தும், சம்பளம் வராமலும் இருக்கப்போவதில்லை. இப்போது இருக்கும் வாகனம் நன்றாகத்தான் இருக்கிறது, வசதி வரும்போது அடுத்தது மாற்றிக் கொள்ளலாம் என்கிற புரிதல் உண்டாகும். உங்களை நேசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், எதிரிகள் மிகக் குறைவாகவும் இருப்பது தெரியும்.
இப்போது நீங்கள் கடவுளால் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது உங்களுக்குப் புரியும். அத்தனை நன்மைகளுக்கு நடுவில் வரும் மிகச் சிறிய அளவு கஷ்டங்களைப் பற்றி மிகப்பெரியதாக நினைத்துக்கொண்டு வாழ்கிறீர்கள் என்பது புரியவரும். தேவையே இல்லாமல் மனச்சோர்விற்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நன்றாக உணருவீர்கள். அதற்கு அர்த்ததமே இல்லை என்றும் தோன்றும். மனச்சோர்வு எட்டிப் பார்க்கும்போது இந்தப் பட்டியலை எடுத்து பார்த்தால் அது உங்களை விட்டு தொலைவே ஓடியே போய்விடும்.