சிலர் தங்கள் வீட்டு உணவை விட, மற்றவர் வீட்டு உணவை அதிகம் விரும்புவதும், அது சுவையாக இருப்பதாக கூறுவதும் வழக்கத்தில் உள்ளது. இது ஏன் என்று என்றாவது நீங்கள் யோசித்ததுண்டா?
‘இந்த மனுஷனுக்கு தினம் தினம் நன்றாகத்தான் சமைத்து போடுகிறேன். சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கு என்று வேறு கூறுகிறார். ஆனால், யார் வீட்டுக்காவது போனால் அவர்கள் கொடுக்கும் உணவை ரொம்ப பெருமையாகப் பேசுவதும், அவர்களை ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதும் பார்க்க கடுப்பாக இருக்கிறது’ இப்படி தம்மைப் பாராட்டாமல், மற்றவரை பாராட்டுகிறார்களே என்று புலம்பாதவர்களே இருக்க முடியாது.
அடுத்தவர் வீட்டு உணவு எப்படி இருந்தாலும் பாராட்டுவதற்கு முதல் காரணம், அவர்கள் மனம் கோணக் கூடாது என்ற நல்ல எண்ணத்தால் இருக்கலாம். அத்துடன், எப்போதும் கிடைப்பதும், எப்போதாவது கிடைப்பதும் ஒன்றில்லையே. அதுதான் முக்கியக் காரணம். மற்றொன்று, நம் வீட்டு உணவை சாப்பிட்டு சாப்பிட்டு மாறுதலாக வேறு ஒருவர் சமைத்த உணவை சாப்பிடும்போது ரொம்ப ருசியாக இருப்பதாகத்தான் தோன்றும்.
உதாரணத்துக்கு, கோயிலில் பிரசாதமாக சிறு தொண்ணையில் தரப்படும் புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ சாப்பிடும்போது ரொம்ப ருசியாக இருப்பதாகத் தோன்றும். இது பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு உரித்தான ஒரு செயலாகவும் உள்ளது. பொதுவாக, குழந்தைகள் தங்கள் வீட்டு உணவை உண்ணாது, பக்கத்து வீட்டு ஆன்டி கொடுத்தால் ஒன்றுக்கு இரண்டாக கேட்டு வாங்கி சாப்பிடும். ஏனென்றால் நம் வீடு எப்போதும் நமக்கானது. அங்கு நாம் எப்போது கேட்டாலும் கிடைக்கும். ஆனால், பக்கத்து வீட்டு உணவு என்பது நாம் நினைக்கும் நேரங்களில் கிடைக்காது. அத்துடன் வழக்கமாக சாப்பிடும் உணவை விட மாறுதலான ருசியில் இருப்பதாலும் விரும்பி சாப்பிடுகிறது. அவ்வளவுதான்.
உறவினர் வீட்டுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ நம் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, ‘என் பிள்ளைக்கு பொங்கல் பிடிக்காது, இட்லி பிடிக்காது’ என்று பேச்சுவாக்கில் சொல்வோம். ஆனால், நம் பிள்ளைகள் அதைத்தான் அவர்களிடம் இரண்டு, மூன்று முறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
அதேபோல், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் வீட்டை விட, மற்றவர்கள் வீட்டை பெரிதும் விரும்புவதும், தன் வீட்டு உணவை விட, மற்றவர் வீட்டு உணவு சுவையாக இருப்பதாக நினைப்பதும் உண்டு. இதைப் பற்றி பெரியதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. பழகப் பழக பாலும் புளிக்கும்தானே!