
உலகிலேயே மிகவும் பயங்கரமான ஆயுதம் மனிதர்களின் நாவிலிருந்து வரும் வார்த்தைகள்தான். சில வார்த்தைகள் நீண்டகால நெடிய உறவுகளையும் வேரோடு அறுத்துவிடுகிறது. எப்போதும் எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் வாயடக்கம் என்பது அவசியம். உங்களை விட்டு உங்கள் நெருங்கிய நண்பர் பிரிந்து செல்கிறார் என்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். பல வருட நட்பு கூட ஒரு நொடியில் முறிந்து போகிறது. நட்பு என்பது குழந்தை பருவத்தில் தொடங்கி பள்ளி பருவம், கல்லூரி பருவம் தாண்டி முதுமை வரை சுயநலமின்றி கூட வருவது. இந்த நட்பை நாம்தான் வாயால் உடைத்து விடுகிறோம்.
நம் நண்பருக்கு அறிவுரை என்ற பெயரில் அவரது மனதை உடைக்கிறோம். அதில் நமது நோக்கங்கள் நல்லவையாகவே இருந்தாலும் அதன் விளைவு நட்பில் எப்போதும் மோசமாகவே இருக்கும்.
எப்போதும் அறிவுரை கூறுவது எளிது, ஆனால் யாருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது ஒரு கலை. சில சமயங்களில் தவறான அறிவுரை காரணமாக, பல வருட நட்பு கூட ஒரு நொடியில் முறிந்து விடுகிறது. நீங்கள் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், உங்கள் நண்பருக்குக் கொடுக்க கூடாத சில அறிவுரைகள்.
நீ ரொம்ப மாறிட்ட டா , நீ முன்ன மாதிரி இல்லை…
பொதுவாக தொழில், திருமணம் ஆகிய பொறுப்புகளில் நண்பர்கள் மிகவும் மும்முரமாகி விடுகிறார்கள். ஆனால், அதை நாம் குத்திக் காட்டுவதுபோல வெளிப்படுத்தக் கூடாது. அவ்வாறு நீங்கள் கூறும் போது, உங்கள் நண்பரும் உங்களிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணரலாம். மேலும் அவருடைய குற்ற உணர்வை இன்னும் அதிகரிக்கிறீர்கள். இவ்வாறு நோகடிப்பது பிரிவினையை ஏற்படுத்த முதல் படியாகிறது.
உனக்கென்னப்பா ஜாலியா இருக்க…
உலகில் அதிகம் பேரை கோவப்படுத்துவது இந்த வார்த்தைதான். உனக்கென்ன நல்ல வேலை, நல்ல சம்பளம், அழகான லவ்வர் வேற என்று நீங்கள் ஆரம்பிக்கும்போது "சரியான வயிற்றெரிச்சல் பிடித்தவன் என்றுதான் உங்கள் நண்பர் நினைப்பார்" இனி இவன் பழக்க வழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
அவ சரியில்ல, கழட்டி விடுடா…
உங்கள் நண்பர் காதலில் இருந்தால், அவரது காதலியை பற்றி குறை கூறவேண்டாம். காதல் கண்மூடித்தனமானது, உங்கள் வார்த்தை அவரை கோவமூட்டும். அவரது காதலில் முடிவுகளை அவரே எடுக்கட்டும். உங்களுக்கு அக்கரை இருந்தால், நன்றாக விசாரித்துக் கொள் என்று மட்டும் சொல்லுங்கள்.
இந்த வேலை உனக்கு செட் ஆகாது விடு…
உங்கள் நண்பருக்கு பிடித்துதான் வேலை செய்கிறார் அல்லது அவருக்கு அந்த வேலைதான் கிடைத்துள்ளது என்னும்போது வேலையை விடு, அதில் சம்பளம் குறைவு, அப்படி இப்படி என்று அவரை காயப்படுத்தவேண்டாம். ஒருவேளை நீங்கள் நல்ல வேலையில் இருந்தால், அவருக்கு பொறாமையாக மாறும்.
என் கூட பேசாத போ, சும்மா தொந்தரவு செய்யாதே…
இதுபோன்ற வார்த்தைகள் உங்கள் நண்பரின் மனதை கிழித்து கூறு போடக் கூடியவை. அதன் பிறகு அவர் உங்களிடம் பேச தயங்குவார். விரைவில் உங்களை விட்டு பிரிந்து செல்வார். அதனால் வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருங்கள். எப்போதும் உங்கள் நண்பரின் இனம், மதம், மொழி, ஜாதி ஆகியவற்றை தவறாக பேசாதீர்கள். அது அவர் மீது நீங்கள் தொடுக்கும் உளவியல் தாக்குதல் என்று அவர் நினைப்பார்.