
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பல 'ஃபிரெனெமிகள்' இருக்கக் கூடும். உடன் பணிபுரிபவர்களில் சிலர் உண்மையான நட்புடன் பழகுவார்கள். வேறு சிலர் நண்பர் போல் நடித்து பின்னாடி ரகசியமாக உங்களது மதிப்பைக் குறைக்கும் வேலைகளில் ஈடுபடுவர். இவர்களைத்தான் 'ஃபிரெனெமிகள்' என அழைப்பதுண்டு.
ஃபிரெனெமிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ஃபிரெனெமிகள் உங்களைப் புகழ்ந்து பேசும்போது அது உங்களை திடீரென ஒருவர் கத்தியால் குத்தியது போன்ற உணர்வை உண்டுபண்ணும். இது அவர்கள் ஒரு பாதுகாப்பற்ற உணர்வுடனும், உங்களை ஒரு போட்டியாளராக எண்ணியும் பேசும் பேச்சு எனலாம்.
உங்கள் குழுவில் இருந்துகொண்டு உங்கள் ஐடியாக்களை திருடி, தான் நற்பெயர் பெற முனைவது மற்றும் வேலையில் உங்கள் பங்களிப்பிற்காக கிடைக்கும் பாராட்டுக்களை தனக்கு கிடைக்க முயற்சிப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதை ஃபிரெனெமிகள் வழக்கமாகக் கொண்டிருப்பர்.
நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களைப் பற்றி கிசு கிசு மூலம் வதந்திகளைப் பரப்புவதும் ஃபிரெனெமிகளின் முக்கிய வேலைகளில் ஒன்றாக இருக்கும்.
ஃபிரெனெமிகள் தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே உங்களுக்கு ஆதரவாக வேலை செய்வார்கள். அதை உங்கள் மீதுள்ள உண்மையான நட்பின் காரணமாக என்று சொல்ல முடியாது.
உங்களிடம் இனிக்க இனிக்கப் பேசிவிட்டு உடனே தலை கீழாக மாறி, உங்களை ஒரு போட்டியாளராக எண்ணி, உங்களின் சாதனைகளையெல்லாம் குறைவாக மதிப்பீடு செய்து மற்ற ஊழியர்களிடம் கூறி உங்களின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வதிலேயே ஃபிரெனெமிகள் குறியாக இருப்பார்கள். உண்மையான நண்பன் இதையெல்லாம் செய்யமாட்டார்.
ஃபிரெனெமி தேவையில்லாத விஷயங்களை உங்களிடம் கூறி உங்களை திசை திருப்ப முயல்வார் அல்லது கூற வேண்டிய முக்கியமான விஷயங்களை கூறாமல் தாமதித்துவிட்டு "மறந்துவிட்டேன்" என்று கூறி மழுப்புவார். இவையெல்லாமே உங்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான யுக்தியின்றி வேறேதுமில்லை.
ஃபிரெனெமி உங்களுக்கு தரும் ஆலோசனைகள் அனைத்துமே உங்களை ஊக்குவிப்பதாக இருக்காது. தொடர்ந்து அவர் இதேபோல் உங்களை பின்னுக்குத் தள்ளும் விதமாகவே நடந்து கொண்டிருந்தால் அவர் நூறு சதவிகிதம் உங்களிடம் இதய பூர்வமான நட்புடன் பழகவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
மேற்கூறிய அறிகுறிகளை மனதிற்கொண்டு பணி புரியுமிடத்தில் கவனமாக நடந்துகொள்வது நற்பயன் அளிக்கும்.