

ஒரு மனிதர் தனது அறுபது வயதை நெருங்கியதும் அவர் மனதில் இனம்புரியாத ஒருவித பயம் தோன்றத் தொடங்கிவிடுகிறது. பணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, சொந்த வீடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, யாராக இருந்தாலும் எந்தவிதமான பலமான பின்புலம் இருந்தாலும் அவர் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் தனது வாழ்க்கை முடியப்போகிறது என்ற கலக்கமும் வந்து அமர்ந்து கொள்ளுகிறது. இது ஒரு மன ரீதியான பிரச்னை.
அறுபது வயது வரை அவர் ஒரு சராசரி மனிதனாகவே வாழ்ந்திருப்பார். சுறுசுறுப்பாக இயங்கி வந்திருப்பார். குடும்பத்திற்காக இரவு பகலாக உழைத்திருப்பார். ஆனால், அறுபதைத் தொட்டதும் ஒவ்வொரு காரியத்திலும் அதிகப்படியாக யோசித்து செயலில் உடனடியாக இறங்கத் தயங்குபவராக மாறிவிடுவார். இதுவும் ஒரு மனரீதியான பிரச்னை.
அறுபது வயதைத் தொட்டதும் வாழ்க்கையே முடியப்போகிறது என்பது மாதிரியான சிந்தனை முதலில் அறுபது வயதைத் தொட்டவருக்கும் தொடர்ந்து அவரைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கும் ஏற்பட்டுவிடுகிறது. ஏற்கெனவே மனதளவில் பயந்து போய் துவண்டு உள்ள மனிதரை வீட்டினர் கட்டுப்பாடு என்ற பெயரில் பயமுறுத்தி மேலும் முடக்கி விடுவார்கள். தனியாக வெளியில் எங்கும் போகாதீர்கள் என்பதே முதல் கட்டுப்பாடு. நீங்கள் வயதானவர். வெளியே தனியாகச் சென்று ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்றும் பயமுறுத்துவார்கள்.
இரண்டாவது உணவு. எண்ணெய் பலகாரங்களை சாப்பிடாதீர்கள் என்பார்கள். இனிப்பு மற்றும் பருப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வந்துவிடும் என்பார்கள். ஓட்டலுக்குப் போய் சாப்பிட நேர்ந்தால் அதிலும் கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். இட்லி சாப்பிடுங்கள். உடம்புக்கு நல்லது. வடை வேண்டாம் என்பார்கள். அசைவ உணவை சாப்பிடுபவர்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். இருநூறு சதவிகித கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும்.
அறுபது வயதானவர்களுக்கு விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும். அறுபது வயதுக்குப் பின்னரே ஒவ்வொரு உடல்நலப் பிரச்னைகளும் தோன்றத் தொடங்கும். ஒருவேளை ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவரால் விரும்பிய உணவுகளை சாப்பிட இயலாத நிலை ஏற்பட்டுவிடும். பல உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கும். ‘உடல்நிலை நன்றாக இருக்கும்போது கட்டுப்பாடு, உடல்நிலை கெட்ட பின்னர் கட்டுப்பாடு, அய்யோ நாம் நன்றாக இருந்தபோது ஆசைப்பட்டதை சாப்பிட முடியாமல் போய்விட்டதே’ என்று அவர்களின் மனமானது அடித்துக் கொள்ளும்.
உணவில் கட்டுப்பாடுகளை விதிக்கும்போதுதான் விரும்பிய உணவை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்று மனம் நினைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் சாப்பிடத் தோன்றும். சில சமயங்களில் வெளியே செல்லும்போது ஓட்டல்களில் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டு விடுவார்கள். வயதானவர்களைப் பொறுத்தவரை இது ஒரு அவல நிலைதான். இயல்பாகவே சிலர் பயந்து பயந்து சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். நம் விருப்பத்திற்கு சாப்பிட்டால் வியாதிகள் வந்து விடும் என்று அஞ்சுபவர்களும் இருக்கிறார்கள். ஆசைப்பட்டாலும் பயத்தின் காரணமாக விரும்பிய உணவுகளைத் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
உணவை மெல்ல மெல்ல ரசித்துச் சாப்பிட வேண்டும். உணவு என்பது வெறும் பசியைப் போக்குவதற்காக மட்டுமல்ல. அது ஒரு கலாசாரத்தின் அடையாளம். அது ஒரு ரசனை. உணவு பசியைப் போக்குவதற்காக என்றால் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான உணவுதானே நடைமுறையில் இருக்க வேண்டும். ஏன் சைவத்திலும் அசைவத்திலும் ஆயிரக்கணக்கான உணவுகள் பயன்பாட்டில் உள்ளன. ஏன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறப்பு உணவு நடைமுறையில் உள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். உலகிலேயே மிக மோசமான விஷயம் பயம். பயம் மனிதனை முடக்கிவிடும். மனதை முடக்கி கவலையை உருவாக்கி மெல்லமெல்ல உயிரையும் பறிக்கும்.
அறுபது வயதைத் தொட்டவர்களை இயல்பாக வாழ விடுங்கள். நல்லது கெட்டது அவர்களுக்குத் தெரியும். வெளியே செல்ல வேண்டியிருந்தால் பயமுறுத்தாமல் ஜாக்கிரதையாக போய்விட்டு வாருங்கள் என்று உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் விரும்பிய உணவை சாப்பிட அனுமதியுங்கள். அவர்களுக்கு நீங்கள் எல்லா சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் வழங்கினால் அவர்கள் சரியாக நடந்து கொள்ளுவார்கள். உற்சாகமாக நூறு வயது வரை வாழ்வார்கள்.